Saturday, January 7, 2017

கலைஞரின் கோபாலபுரம் கோட்டையை தளபதி ஸ்டாலின் காப்பாற்றுவாரா..

இதுவரை திமுகவை தலைமை தாங்கி நடத்தி வந்தவர் கலைஞர் மு.கருணாநிதி அவருடைய வயோதிபம் காரணமாக இதுவரை திமுக இளைஞர் அணி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இப்போது முக்கிய பதவிக்கு வந்துள்ளார்.

அறுபது வயது தாண்டித்தான் மு.க. ஸ்டாலின் இளைஞர் என்ற நிலையில் இருந்து ஒரு தலைவர் என்ற நிலைக்கு மாறியுள்ளார்.

மிக நீண்ட காலம் எடுத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவதற்கு, ஆனால் கலைஞருக்கு உடல் இயலுமாக இருந்தால் இன்றும் மு.க.ஸ்டாலின் இளைஞர்தான் அவர் பொறுப்புள்ள தலைவர் அல்ல என்பது தெரிந்தவிடயமே.

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மரணமும், தனக்குப் பின் யார் என்பதை தெளிவாக சொல்லாமல் அவருடைய வாழ்வு வாரிசின்றி முடிந்துவிட்டதும் தி.மு.கவில் ஏற்படுத்திய கலக்கம் இந்த அவசர முடிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

அண்ணாவின் காலத்திலேயே கட்டுப்படுத்த முடியாத ஒருவராக இருந்தவர் மு.கருணாநிதி அண்ணாவுக்கு பின் ஆட்சிக்கு வரவேண்டிய இரா. நெடுஞ்செழியனை எம்.ஜி.ஆருடன் இணைந்து வீழ்த்தி கழகத்தை கைப்பற்றியபோதே மு.கருணாநிதி ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.

அதன் பின்னர் எம்.ஜி.ஆரிடமிருந்து கழகத்தை காப்பாற்ற அவரை வெளியேற்றிவிட்டு 13 வருடங்கள் ஆட்சியின்றி தவமிருந்தவர், எம்.ஜி.ஆர் மரணத்தின் பின் அதிகாரத்தை கைப்பற்றி கழகத்திற்கு புத்துயிர் கொடுத்தவர் கலைஞர்.

ஜெயலலிதா மரணம்வரை தனக்குப் பின் கழகத்தில் யார்.. என்ற கேள்விக்கு மு.கருணாநிதியால் விடை காண முடியவில்லை மு.க.ஸ்டாலினா, மு.க.அழகிரியா கலாநிதி – தயாநிதி மாறன்களா என்ற கேள்விக்கு விடைகாண கலைஞர் போராட வேண்டியிருந்தது, இப்போது மு.க.ஸ்டாலின் என்ற இடத்திற்கு வந்துள்ளார்.

மு.க.ஸ்டாலினின் தகுதி பெற்றதாலா இந்த மாற்றம் இல்லை தனது தள்ளாமை காரணமாகவே இந்த மாற்றத்தைச் செய்துள்ளார், கடைசியாக நடந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் சிறிது வியூகத்தை மாற்றியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் வை.கோவின் சதிக்கு பலியாகிவிட்டார்.

கலைஞர் வைத்த பரிட்சையில் மு.க.ஸ்டாலின் பெயில்.. இப்போது வேறு வழியில்லை பாசாக முன்னரே வகுப்பேற்றம் நடந்துள்ளது.

தனக்குக் கிடைக்காத பால் தன்னோடு சேர்ந்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்ற கொள்கையுடையவர் வை.கோ என்பதற்கு அமைய தேர்தலின்போது காரியங்கள் நடந்தன மு.க.ஸ்டாலின் குறைந்தபட்சம் வை.கோ யார் என்பதைக்கூட கண்டுபிடிக்கவில்லை.

இந்த இடத்தில்தான் கலைஞரா இளைஞரா என்ற கேள்வி வருகிறது.. இந்தக் கேள்விக்கு பதில் கலைஞர்தான்..

இளைஞர்களால் கலைஞரை வென்றுவிட முடியாது என்பதை நடந்து முடிந்த தேர்தல் காட்டியது, ஜெயலலிதாவைவிட அதிகப்படியான வாக்குகளால் திருவாரூரில் கலைஞர் வென்று இளைஞர்களுக்கு சவால் விட்டார்.

இப்போது காலத்தில் சடுதியான தவிர்க்க முடியாத மாற்றம்..

வரலாற்றில் முதற்தடவையாக கலைஞர் இல்லாமல் செயற்குழு கூட்டம் நடந்துள்ளது, அடுத்து என்ன.. அதுதான் இப்போதைய கேள்வி.

இந்த நேரம்தான் கொஞ்சம் ஜெயலலிதாவைப் பார்க்க வேண்டும்..

ஜெயலலிதா தமிழீழப் பிரேரணையை ஏன் நிறைவேற்றினார், தமிழீழம் தொடர்பான பல அதிரடி பிரேரணைகளை ஏன் நிறைவேற்றினார் உண்மையில் ஈழத் தமிழ் மக்கள் மீது கொண்ட பாசமா.. இல்லை..

அவருடைய தலைக்கு மேலே தொங்கிய ஒரு கத்திதான் காரணம்.. தேர்தலில் வென்றாலும் அவருடைய கதிரை ஆடிக்கொண்டுதானிருந்தது, அதை அவர் வெளியில் சொல்லவில்லை செயல்களில் தெரிநதது.

காரணம் வட இந்திய அரசியல் வியூகத்தை அவரால் வெல்ல முடியாதபடி வெள்ளம் அவருடைய கோட்டைக்குள் புகுந்துவிட்டது, அணை போடத் தவறிவிட்டார் அதுதான் ஈழத்தை கையில் எடுத்தார்.

இன்று ஈழப்போராட்டமும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை..

ஆனால் கலைஞர் இவைகள் எதையும் செய்யவில்லை ஈழப்போராட்டம் பற்றி ஏமாற்று வேலைகளையே செய்தார் என்கிறார்கள்.. ஏன்..

அதைச் செய்திருந்தால் திமுக கலைஞர் குடும்பத்திடமிருந்தே பறிபோயிருக்கும் கலைஞர் அடுத்த பக்கமாக முயற்சிக்க இதுதான் காரணம்.. கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்குமுள்ள தமிழீழ கொள்கை முரண்பாடும் இதுதான்.

தமிழீழத்தை வைத்து இருவரும் தங்கள் அதிகார பலத்தை காப்பாற்ற முயன்றுள்ளார்கள், ஒருவர் தோற்றுவிட்டார்.. அடுத்தவர் நிலை என்ன இதுதான் இப்போதைய கேள்வி.

மத்திய அரசை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதால் தனது குடும்பத்தின் அதிகாரத்தையாவது காப்பாற்றலாம் என்றளவில் கலைஞர் சமரசம் கண்டிருக்கிறார் என்பது இப்போது தெரிகிறது.

அதை மேலும் எத்தனை காலம் நீடிப்பது இதுதான் இப்போதைய சவால்..

ஜெயலலிதாவின் இடத்தை ரஜினியே நிரப்புவார், தமிழகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டல்கள் சும்மா ஒட்டப்படவில்லை நாடி பிடித்துப் பார்க்கிறார்கள்.

திருச்சியில் இருந்து டிக்கட்டுக்கு பணம் இல்லாமல் ரயில் ஒழிந்து பயணித்து சென்னை வந்த மு.கருணாநிதி அரசியல் வியாபாரத்தால் இன்று உலகின் நூறு பணக்காரர்களில் தமது குடும்பத்தை.யும் ஒரு குடும்பம் ஆக்கியிருக்கிறார்

என்ன விலை கொடுத்தும் அதைக் காப்பாற்றவே அவர் போராடியிருக்கிறார், அது அவருடைய பிள்ளைகளுக்கு தெரிந்திருந்தால் மு.க.அழகிரியும் மு.க.ஸ்டாலினும் மோதியிருக்கமாட்டார்கள்.

உண்மையில் கலைஞருடைய ஆளுமையை அவருடைய பிள்ளைகளில் எவரும் பெறவில்லை காரணம் கலைஞரைப்போல டிக்கட் இல்லாமல் அரசியலுக்கு வந்த ஏழைகள் அல்ல அவருடைய பிள்ளைகள்.

அவருடைய பிள்ளைகள் செல்வத்தில் புரண்டவர்கள் மு.க.ஸ்டாலினின் இளமைக்கால வாழ்வை பலர் இப்போது மறந்துவிட்டார்கள், அவருடைய வாழ்வில் ஏழ்மைக்கல்வி இல்லை.

கலைஞர் அடுக்கு மொழியை ஆதாரமாக வைத்து அரசியலில் வெற்றி பெற்றவர் அதுபோல ஓர் ஆயுதம் மு.க.ஸ்டாலினிடம் இல்லை.

தனது சுயநலத்திற்காக அவர் யாரையும் இழக்கத்தயாராக இருப்பார் அவருடைய அதிகார இருத்தலே அவருடைய தார்மீக நியாயமாகவும் இருந்தது, இருக்கிறது.

அதிகாரமற்ற தமிழக சட்டசபையை ஆதாரமாக வைத்து அவர் அடைந்தது கடைசி உச்சம் அதற்கு மேல் இனி இல்லை..

இதற்குமேல் திராவிட கழகங்களின் வரலாறு நூறாண்டு தொடுவதை மதவேடதாரிகளான பா.ஜ.க அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள், இதற்காகவே பெரியார் கால கறுப்பு துண்டையே கழற்றி வீசி காவி அணிந்தவர் கலைஞர்.

அவர் பெரியார் கொள்கையை கடைப்பிடித்தரா..

திமுகவின் முற்போக்கு கொள்கைகளை கடைப்பிடித்தாரா..

எதையுமே கடைப்பிடிக்கவில்லை தன் குடும்ப அதிகாரம் ஒன்றுக்காக எதையும் செய்ய தயாரானதுதான் அவர் அரசியல்.

அது சரியா…

அதற்காக கலைஞர் செய்தது சரியா..

இந்த வழியில் நடந்திருக்காவிட்டால் இன்று கலைஞரின் கையில் திமுக இருந்திருக்காது, அப்படிப் பார்த்தால் அவர் செய்த அத்தனையும் சரியே.

பல சந்தர்ப்பங்களில் அவருடைய அரசியல் வியூகங்கள் பிழைத்துள்ளன, ஆனால் அவருடைய குடும்ப அதிகாரத்தை தக்கவைக்கும் வியூகம் மட்டும் தோல்வியடையவில்லை.

இப்போது அதைக்காப்பதுதான் மு.க.ஸ்டாலினுக்கு சவால்..

ஆனால் கலைஞரைப் போல இளைஞர் அணி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆளுமை உடையவரல்ல.. அவரால் தனது குடும்ப உட்பகையை இதுவரை வெல்ல முடியவில்லை.

ஆகவே கலைஞருக்கு பின் திமுக இன்றைய அதிமுக நிலையையே அடையும் அபாயம் உள்ளது, காரணம் வட இந்திய அரசுகள் தமிழகத்தில் இருந்து திராவிட ஆட்சியை களமிறக்க முடிவு செய்துவிட்டமை தெளிவாகத் தெரிகிறது.

திமுக – அதிமுக இரண்டாலும் வரும் பத்தாண்டுகளுக்கு மேல் வட இந்திய வியூகத்தை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியாத களநிலரமே காணப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து திராவிட ஆட்சிகள் தூக்கப்படப்போகின்றன என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி சொன்னது.. தற்செயலானது அல்ல என்பதை ஜெயலலிதாவின் கடைசி 75 நாட்கள் காட்டிவிட்டன.

இதனால்தான் இரண்டு கழகங்களும் இரகசியமாக பேச ஆரம்பித்தன.. ஆனால் முடியவில்லை..

காரணம் என்ன.. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது.. இந்தியக் கொள்கை வகுப்பில் தமிழகம் சிக்கிவிட்டது தெரிகிறது.

இருப்பினும்…

ஜெயலலிதா மரணத்தின்போது வெங்கையாநாயுடு முன்பாக அதிமுக ஒன்றும் இல்லாமல் நின்றது போல திமுகவும் நிற்கக்கூடாது என்ற விடயத்தில் கலைஞர் வெற்றி பெற்றுள்ளார்.

இப்படியொரு கோணத்தில் கலைஞரா இளைஞரா என்றால் கலைஞரே வெற்றியாளர் என்றே கூறவேண்டும்..

கலைஞர் தமிழக அரசியலில் விளைந்த புசிக்க முடியாத அரசியல் கனி.. அவருக்கு பின் இன்னொரு கனி திமுகவில் வரமுடியாது..

இப்போது இந்தியாவில் நடப்பது இந்திய அரசியல் அல்ல சர்வதேச அரசியல்.. ஆகவேதான் சவால் மிகமிக பலமானதாக இருக்கிறது.

எம்.ஜி.ஆரோடு ராமாவாரம் கோட்டை இடிந்தது, ஜெயலலிதாவோடு போயஸ்கார்டன் கோட்டை தகர்ந்தது கலைஞருக்கு பின் கோபாலபுரம் கோட்டை இருக்குமா.. மு.க.ஸ்டாலினால் அதை காப்பாற்ற முடியுமா..

மிகவும் கடுமையான சவால்..

வட இந்திய அரசியலால் ஜெயலலிதா நடித்த அடிமைப்பெண் திரைப்படத் தலைப்பே அவரின் கடைசி நேர வாழ்வாகிவிட்டது..

இனி அடுத்த கதை..

காகித ஓடம் கடல் அலைமேலே
போவது போலே மூவரும் போவோம்..
இது மறக்கமுடியுமா படத்திற்கு கலைஞர் எழுதிய பாடல்..

யார் அந்த மூவர்..

மு.கருணாநிதி – மு.க.ஸ்டாலின் – மு.க. அழகிரி

காகித ஓடம் திமுக..

காங்கிரசிற்கும் – பா.ஜ.கவிற்கும் தமிழகத்தில் குந்த ஒரு நிலம் கொடுக்காத திராவிடக் கட்சிகளை அவை பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டன..

தாங்குமா திராவிடக் கட்சிகள்…?

பொறுத்திருந்து பார்ப்போம்…

தமிழக அரசியல் நிலவரங்கள் மீதான பார்வை.

கி.செ.துரை
alaikal.com

0 comments :

Post a Comment

 
Toggle Footer