Sunday, January 1, 2017

2017 ஆம் ஆண்டானது இந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய ஆண்டாக அமையுமென நம்புகிறேன். முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் ஊடாக, எமது தேசியப் பிரச்சினைக்கு நிலையானதும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதுமான தீா்வொன்றை 2017ஆம் ஆண்டிலே அடைய வேண்டுமென எதிர்பார்க்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எமது மக்களிடையே பல விடயங்களில் பன்முகத்தன்மைக் காணப்படுகின்ற போதிலும்கூட, எதிர்கால சந்ததியினருக்காக அமைதியான செளபாக்கியமிக்க தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அவ்வாறான பன்முகத்தன்மைகளைத் தடையாக அமைத்துக்கொள்ள வேண்டாமென இந்நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அமைதியும் செழிப்பும் பொருந்திய தேசமொன்றினைக் கட்டியெழுப்புவதற்காக இந்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் அனைவரிடமும் ஒன்றிணைந்து கை கோக்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

கிடைத்துள்ள இப்பொன்னான வாய்ப்பினை கை நழுவவிடாது பயன்படுத்திக்கொள்வதற்கு நாம் இவ்வாண்டிலே திடசங்கற்பம் பூணுதல் வேண்டும். உங்கள் அனைவருக்கும் பிறந்துள்ள புத்தாண்டானது மகிழ்ச்சியானதாகவும் செளபாக்கியமானதாகவும் அமைய வாழ்த்துகிறேன்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer