Friday, January 13, 2017

தமிழ் திரையுலகத்தில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் இன்று வரை தோல்விகளை கடந்து வெற்றி நாயகனாக வலம் வருபவர் விஜய். ரசிகர்கள் அவரது தோல்வியில் துணை நின்றாலும் அவர்கள் விரும்புவது வெற்றியைத்தான். தெறி படத்தின் வெற்றியை அடுத்து வந்த பைரவா-வின் டீஸர் ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை உண்டாக்கினாலும் இந்த படம் பரதன் இயக்கம் என்பதால் சற்றே அதிர்ந்தும் போயிருந்தார்கள். ஏன் என்றால் விஜய்யின் திரைவாழ்வில் “அழகிய தமிழ் மகன்” என்ற படுதோல்விக்குப் பிறகு பரதனுக்கு விஜய் கொடுக்கும் இரண்டாவது வாய்ப்புதான் பைரவா. இதனால் பரதன் எப்படி இந்த வாய்ப்பை பயன்படுத்த போகிறார் என்பது அனைத்து தரப்பினருக்கும் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

வங்கிக் கடனை வசூலிக்கும் ஏஜெண்ட் வேலை பார்ப்பவராக வருகிறார் விஜய். ஒய்.ஜி.மகேந்திரனிடம் லோன் வாங்கி ஏமாற்றிய மைம் கோபியை விஜய் அடித்து நொறுக்கும் கிரிக்கெட் சண்டை காட்சிதான் படத்தின் முதல் மாஸ் காட்சி. அதனை தொடர்ந்து ஒய்.ஜி.மகேந்திரனின் மகள்  திருமணத்துக்கு திருநெல்வேலியில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷைக் கண்டதும் காதல் மலர்கிறது விஜய்க்கு. 

திருநெல்வேலிக்கு திரும்பும் கீர்த்தியிடம் காதலை சொல்ல வந்த விஜய்க்கு, கீர்த்தி ஒரு பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரியவருகிறது. அந்த பிரச்சனையின் மூலம் கீர்த்தி சுரேஷ் யார் என்றும் அவருடைய பிரச்சனைக்கான காரணத்தையும் தெரிந்து கொள்கிறார் விஜய். இதனை தொடர்ந்து ரொமான்ஸுடன் சொல்ல வந்த காதலை, அடிதடிக்கு இடையில் சொல்ல வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்படுகிறது. அடுத்ததாக கீர்த்தி பிரச்சனையை தன் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு வில்லன் ஜகபதி பாபுவுக்கு போன் மூலம் சவால் விட்டு நெல்லைக்கு கிளம்புகிறார் விஜய். இவ்வாறு படத்தின் முதல் பகுதி விறுவிறுப்பாக நகர்கிறது.

கல்விக்கொள்ளை அடிக்கும் ஜகபதி பாபு மற்றும் அவரது அடியாள் டேனியல் பாலாஜி ஆகியோர் கீர்த்தியின் தோழியை கற்பழித்து கொன்றுவிட, அந்தஉண்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க விஜய் பல தில்லு முள்ளு வேலைகளை ரசிக்கும்படியாக செய்கிறார். ஆனாலும் விஜய்யின் முயற்சிகளை ஜகபதி தடுத்து நிறுத்துகிறார். வில்லன்களின் வில்லங்கமான வேலைகளுக்கு மத்தியில் ஹீரோயிசம் காட்டி காட்சிக்கு காட்சி கலக்குகிறார் விஜய். சமூக வலைத்தளங்கள் மூலம் ஜகபதி பாபுவுக்கு பல பிரச்சனைகளை விஜய் உருவாக்குவது அசத்தல். ஹீரோயிசம் மட்டும் இல்லாமல் இடையிடையே சமூகதுக்குத் தேவையான கருத்துக்களையும் வழக்கம் போல துணிச்சலாக சொல்வது விஜய்க்கு சிறப்பு சேர்க்கிறது. 

ஒரு கட்டத்தில் ஜகபதி பாபுவை சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கி தர முடியாது என்று உணர்ந்த விஜய், அவரை ஒரு மிகப்பெரிய சர்வதேச சிக்கலில் மாட்டி விட்டு, அவருக்கு எப்படிப்பட்ட தண்டனை வாங்கி கொடுக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ். சதீஷின் காமெடி ஆரம்பத்தில் மொக்கையாக இருந்தாலும் மற்ற இடங்களில் சிரிப்பலைகளை உண்டாக்கியது. மொட்டை ராஜேந்திரன், தம்பிராமைய்யா போன்றோர் திரையில் வந்து போனார்களே தவிர சொல்லும் அளவுக்கு கதாபாத்திரம் இல்லை.

கீர்த்தி சுரேஷ் இளைமையோடும் கவர்ச்சியோடும் விஜய்யோடு வலம் வந்து இளசுகளின் மனதை கவர்ந்திருக்கிறார். கீர்த்தி சுரேஷின் அக்காவாக வரும் சிஜா ரோஸ் (றெக்க படத்தின் மாலாக்கா) ரசிகர்களின் ஆரவாரத்தில் அசத்துக்கிறார். வில்லனாக வரும் ஜகபதி பாபு தவறான சாய்ஸ் என்றே சொல்லலாம். சந்தோஷ் நாராயணின் “வராலாம் வா” பாடல் திரையில் பொறி பறக்க அதிரடியாய் ஒலிக்கிறது.

படத்தின் முதல் பாதி சரவெடியாய் சரசரவென நகர்ந்தாலும் இரண்டாம் பாதி ஜவ்வாக இழுப்பது விஜய் ரசிகர்ளுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கிறது. படத்தின் முழு பலமே சண்டை காட்சிகளும், தீம் மியூசிக்கும்தான். பாடல்களை படமாக்கிய விதம் சுமார் என்று தான் சொல்லமுடியும். தனது அதிரடி நடனத்தால் வழக்கமாக பாடல் காட்சிகளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விஜய் இப்படத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். மோசம் என்று சொல்லாவிட்டலும் சுமார் என்று சொல்ல வைக்கிறது பைரவா.

பைரவா - ஒருமுறை வரலாம் வா!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer