Sunday, January 1, 2017

அமெரிக்க தேர்தல் பிரச்சார சமயத்திலும் தேர்தல் சமயத்திலும் ரஷ்யாவின் ஹேக்கிங் நடவடிக்கை இடம்பெற்றது எனக் குற்றம்  சாட்டி ரஷ்ய தூதரகத்தைச் சேர்ந்த 35 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் வெளியேற வேண்டும் என அமெரிக்கா உத்தரவு பிறப்பித்து இருந்ததுடன் ரஷ்யாவின் இரு புலனாய்வு ஏஜன்ஸிக்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தது.

இதற்குப் பதிலடியாக இன்று வெள்ளிக்கிழமை ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் 35 பேரைப் பதவி நீக்கம் செய்து வெளியேற்றத் திட்டமிட்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் புட்டின் விடுத்துள்ளாரா என உறுதியாகத் தெரியாத நிலையில் மாஸ்கோ தூதரகத்தில் இருந்து 31 அமெரிக்க அதிகாரிகளும் செண்ட் பீட்டர்ஸ்பர்க் துணைத் தூதரகத்தில் இருந்து  4 அமெரிக்க அதிகாரிகளும் நீக்கப் பட்ட வேண்டும் என புட்டினுக்கு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் பரிந்துரைத்திருப்பதாகத் தெரிய வருகின்றது.

அதிபர் தேர்தல் சமயத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிங்டனுக்கு எதிராக இணையத் தகவல் திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட ரஷ்யா மீது தீவிரமான நடவடிக்கை எடுக்கப் படும் என அதிபர் ஒபாமா எச்சரித்துள்ள நிலையில் இதை மறுத்துள்ள ரஷ்யா புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் வரைத் தாம் காத்திருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. பனியுத்தத்துக்குப் (cold war)பிறகு முதன் முறையாக அமெரிக்காவின் ரஷ்யா மீதான சைபர் தாக்குதல் குற்றச்சாட்டு காரணமாக ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இன்னும் ஒரு மாதத்துக்குள் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சார சமயத்தில் ரஷ்யாவுடனான நல்லுறவு வளர்க்கப் படும் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer