Tuesday, December 27, 2016

 மறைந்த பத்திரிகையாசிரியர் சோ அவர்களின் துக்ளக் பத்திரிகையில் அதிமுகவின் எதிர்காலம் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அம்மாதான் எல்லாமே என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று சின்னம்மாவிடம் சரண்டர் ஆகி விட்டனர்.

கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டு போயஸ் கார்டனுக்கு சென்று சந்தித்து வருகின்றனர்.

அதிமுக தொண்டர்கள் பலரும் சசிகலா பொதுச்செயலாளராக வருவதை விரும்பவில்லை.

சசிகலா நடராஜன் குடும்பம் சதி செய்தது அம்பலமானதால் அவர், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பற்றி சோ அவர்களிடம் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

சோ, தனது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்று துக்ளக் இதழில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவின் எதிர்காலம் என்ற பெயரில் துக்ளக் தலையங்க கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள்:

அரசியலிலோ, பொது வாழ்விலோ, கட்சியிலோ, ஆட்சியிலோ பங்கேற்க வேண்டும் என்று எனக்கு துளியும் ஆசையில்லை. இனியும் எனக்கென்று வாழாமல், அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்கு பணி செய்து இருக்க விரும்புகிறேன் என்று சசிகலா நடராஜன் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மீண்டும் உள்ளே வர அனுமதி கோரி எழுதிய கடிதம்.

டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். 6ம் தேதியன்று காலையில் ஜெயலலிதா உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த போதே, ஜெயலலிதா படம் போட்டு அச்சடிக்க கொடுத்திருந்த 25,000 தினசரி காலண்டர்களை எம்.எல்.ஏக்கள், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் ரத்து செய்தனர்.

சசிகலா நடராஜன் படத்தை பெரிதாகவும், சிறியதாகவும் போட்டு காலண்டர்கள் அச்சடிக்க ஆர்டர்கள் கொடுத்தனர். இது ஊடகங்களில் 15ம் தேதி வெளியானது.

ஜெயலலிதா இறந்து 5 நாட்கள் கூட ஆகவில்லை. சசிகலா நடராஜன் பொதுச்செயலாளராக வேண்டும் என்று முதல்வர் உள்பட அமைச்சர்கள், நிர்வாகிகள் கையெழுத்து போட்டு கொடுத்தனர். மற்றவர்களிடம் கடிதம் வாங்கும் வேலை மும்முரமானது.

பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் இதர முக்கிய நபர்களையும் அழைத்து அவர்கள் தாங்களாகவே சசிகலாவை சந்தித்தது போல புகைப்படங்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டன.

அக்கா சேவைக்கே அர்ப்பணிப்பு, பதவி ஆசையே இல்லை என்று பொய் சொல்லித்தான் போயஸ் தோட்டத்தில் சசிகலா வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

சசிகலா நடராஜன் குடும்பம் சதி செய்தது அம்பலமானதால் அவர், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பற்றி சோ அவர்களிடம் ஜெயலலிதா கூறியிருக்கிறார். சோ, தனது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சசிகலா நடராஜன் மூடி வைத்திருந்த அவரது பேராசை இப்போது வெளிப்பட்டிருக்கிறது. அப்படி இல்லை என்றால் தனக்கு பதவி ஆசையில்லை, தனக்காக யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று கூறியிருக்கலாமே.

சசிகலா நடராஜனின் ஒரே தகுதி அவர் ஜெயலலிதாவிற்கு 30 ஆண்டு காலமாக பணிவிடை செய்தார் என்பதுதான். எந்தவிதமான அரசியல், அரசு நிர்வாகம், பொது வாழ்க்கை அனுபவம் இல்லாத ஒருவர் எப்படி கட்சித் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்.

சசிகலா நடராஜன் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று கூறுபவர்களில் பலர் அவரை விட அதிக தகுதி அனுபவம் பெற்றவர்கள்.

ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுக நிராதரவாக ஆகிவிட்டது என்பது உண்மைதான். அந்த நிலையை எந்த தலைவர்களாலும் நிரப்ப முடியாது. அதிமுகவின் ஆதார பலமே தொண்டர்கள்தான். இப்போது உள்ள சூழ்நிலையில் தொண்டர்களின் மனநிலையையும் கருத்துக்களையும் அறிய ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.

தனி ஒருவராக எம்.ஜி.ஆரைப் போல, ஜெயலலிதாவைப் போல தனி ஒருவராக கட்சியை நடத்துவது சிரமம். காலில் விழும் பழக்கம் நீக்கப்பட்டு கட்சியை நடத்தும் கலாச்சாரத்தை உருவாக்க அதிமுகவிற்கு இது ஒரு வாய்ப்பு.

அதிமுக என்பது தனி நபரின் அல்லது சிலரின் சொத்து அல்ல. திமுக ஒரு குடும்ப சொத்தானது போல அதிமுக சசிகலா நடராஜனின் குடும்ப சொத்தாகி விடக்கூடாது. சசிகலா நடராஜன் கட்சியை கைப்பற்றும் முயற்சியை கை விடுவது அவருக்கும் நல்லது அதிமுகவிற்கும் நல்லது.

தொண்டர்களின் அதிருப்திக்கு ஆளான சசிகலா நடராஜன் தன்னை கட்சி மீது திணித்துக்கொள்வது நாளடைவில் அதிமுகவை வீழ்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லும்.

அதிமுக தொண்டர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய முக்கிய கால கட்டம் இது. இல்லை என்றால், அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்று துக்ளக் இதழில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவும் இல்லை அவர் சொன்னதை கேட்ட சோவும் இல்லை. ஆனால் ஜெயலலிதாவின் இடத்திற்கு வர ஆசைப்படும் சசிகலாவின் மனச்சாட்சிக்கு மட்டுமே இந்த உண்மைகள் தெரியும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer