Tuesday, December 27, 2016

இஸ்ரேலிய யூதர்களுக்கு பாதுகாப்பு சபையில் விழுந்த முதல் அடி..

நேற்று வரலாற்றில் முதற்தடவையாக இஸ்ரேலுக்கு எதிரான பிரேரணை ஐ.நா பாதுகாப்புச் சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இனி இஸ்ரேல் பாலஸ்தீன காஸா பகுதியிலும், எருசெலேம் கிழக்கு பகுதியிலும் அத்துமீறிய குடியேற்றங்களை அமைக்க முடியாது என்ற பிரேரணை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுவிட்டது.

மொத்தம் 15 அங்கத்தவர் கொண்ட பாதுகாப்புச் சபையில் 14 நாடுகள் ஆதரவாகவும் அமெரிக்கா வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலும் பிரேரணை நிறைவேற வழி செய்தது.

இஸ்ரேலுக்கு எதிராக எந்தப் பிரேரணை வந்தாலும் அதை வீட்டோ பாவித்து தடுக்கும் அமெரிக்கா வரலாற்றில் முதல் தடவையாக வீட்டோ அதிகாரத்தை பாவித்துத் தடுக்காமல் ஒதுங்கிக் கொண்டது.

எக்காரணம் கொண்டும் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாதென ஒபாமா நிர்வாகம் கண்டிப்பாக மறுத்துவிட்டது, இஸ்ரேலுக்கு விழுந்த பேரிடியாகும்.

இன்றைய நத்தார் தினம் இஸ்ரேலுக்கு துயரமான நாளாகவே அமைந்துள்ளது, அமெரிக்கா தம்மை வஞ்சித்துவிட்டதாகவும், மத்திய கிழக்கில் எஞ்சியிருந்த தனது ஒரேயொரு நண்பனையும் அமெரிக்கா இத்தோடு இழந்துவிட்டதாகவும் இஸ்ரேல் கண்டித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்துவிட்டதாகக் கூறிய இஸ்ரேல் தற்போது சுழர்ச்சி முறையில் பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் பெற்று மாட்டிக்கொண்ட நியூசிலாந்து, செனகல் நாடுகளில் தற்போது பணியாற்றும் இஸ்ரேலிய தூதுவர்களை உடனடியாக திருப்பி அழைத்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் நியூசிலாந்திற்கும், வெளிநாட்டு அமைச்சர் செனகலுக்கும் பயணிக்க இருந்த பயணங்கள் உடனடியாக இடை நிறுத்தம் செய்யப்படுவதாக பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகுவின் பேச்சாளர் டேவிட் கெய்ஸ் தெரிவித்தார்.

அவலை நினைத்து உரலை இடிக்கும் நிலைக்கு இஸ்ரேல் வந்துள்ளது..

பதவி விலகிச் செல்லவுள்ள பராக் ஒபாமாவும், ஐ.நா செயலர் பான் கி மூனும் பாலஸ்தீனர்களுக்கு தமது பதவிக்கால முடிவில் செய்திருக்கும் பாரிய நன்மை இதுவாகும்.

தனது ஆட்சியில் இந்த நிலை தொடராது என்று டொனால்ட் ரம் ரிவிட் பண்ணியிருந்தாலும் அவரும் போடுவது நாடகமே சரியான தருணம் பார்த்து, எல்லாம் ஒபாமா செய்த வேலையென்று இஸ்ரேலின் காதில் பூவை சுற்றிவிட்டார்கள் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள்.

ஏற்கெனவே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது ஆட்சிக்காலத்தில் பாலஸ்தீனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்றுறே பதவிக்கு வந்திருந்தார், அவரால் முற்றாக தீர்வை எட்டித்தொட முடியாவிட்டாலும் பாலஸ்தீனர்களின் சுயாட்சி உரிமையில் கணிசமான முன்னேற்றங்கள் அவருடைய ஆட்சியிலேயே ஏற்பட்டதை மறுக்க இயலாது.

ஐ.நா சபையில் வாக்களிப்பில் பங்கேற்க முடியாத உறுப்புரிமை நாடு என்ற சிறப்பை பாலஸ்தீனம் பெற்றது, ஹமாஸ் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளை குறைத்தது – இது ஒபாமா காலத்திலேயே..

பாலஸ்தீனப்பிரச்சனையை பயன்படுத்தி குளிர்காயும் நாடுகள் இரண்டு ஒன்று இஸ்ரேல் இன்னொன்று ஈரான், இந்த இருவரையும் அடக்காமல் பாலஸ்தீனப்பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதை ஒபாமா அதிபராக வந்த பின்னர் மேலும் ஒருபடி தெளிவாகக் கண்டு கொண்டார்.

அதேபோல பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை முடுக்கிவிடும் நாடாக எகிப்து இருந்தது அங்கும் புரட்சியை ஏந்படுத்தி சர்வாதிகாரி முபாரக்கை சிறையில் போட்டு அதையும் தடுத்துவிட்டார்கள்.

மறுபுறம் ஈரானை சாந்தப்படுத்த ஒபாமா கொண்டுவந்த ஐந்து பிளஸ் ஒன்று நாடுகளின் ஈரான் அணு குண்டு உருவாக்கத்தடை ஒப்பந்தமானது ஈரானை ஓரளவு சாந்தப்படுத்தியது, அது இஸ்ரேலுக்கு மோசமான கோபத்தை ஏற்படுத்தியது.

இப்போது இஸ்ரேலுக்கு அடுத்த அடி விழுந்துள்ளது, அமெரிக்காவின் 21ம் நூற்றாண்டுக்கான கொள்கை வகுப்பு மாற்றங்களின் அடையாளமாகவே இது இருக்கிறது.

இதுபோல ஜப்பானையும் அமெரிக்கா கைவிட்டுள்ளது, அங்குள்ள முக்கிய அமெரிக்க இராணுவ முகாமை திருப்பி ஜப்பானிடமே ஒப்படைக்க இருக்கிறது.

நேட்டோ நாடுகள் தமது சுய பாதுகாப்பை தாமே பார்க்க வேண்டும் அமெரிக்கா இனி நேட்டோவுடன் கூடி ஒப்பாரி வைக்காது.

ரஸ்யாவுடன் புதிய உறவு வைக்கப்போகிறது, ரஸ்ய அதிபர் புற்றின் டொனால்ட் ரம்பிற்கு எழுதிய நத்தார் வாழ்த்து மடலில் இரு நாடுகளும் இணைந்து உலகத்தின் அதி முக்கியமான சர்வதேச பிரச்சனைகளை வென்றாடுவோம் என்று எழுதியுள்ளார்.

நேற்று அவர் நடத்திய நான்கு மணி நேர பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்க ரஸ்ய பிளவுக்கு டெமக்கிரட் கட்சியே காரணமென கணக்கு முடித்துள்ளார்.

அமெரிக்காவும் ரஸ்யாவும் ஒன்று சேர்ந்தால் ரஸ்யாவும் அமெரிக்கக் கொள்கை வகுப்பில்தான் இயங்குகிறது என்று சீனா சொல்ல நேரிடும்.

இந்தத் தேனிலவுக்கு பரிசாக தற்போது வைத்திருக்கும் அமெரிக்க இணைய ஒளவாளி எட்வேட் சுனோவ்டனை அமெரிக்காவிடம் கையளித்து தேனிலவு கொண்டாட வழியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிரியுடன் அமெரிக்கா தேனிலவு கொண்டாடப் போகிறது, சீனாவை வீழ்த்த இருவரும் கைகோர்க்கப்போகிறார்கள்.

சீனாவை வீழ்த்தும்வரை இந்தியாவையும் அமெரிக்கா பகைக்காது, நாணயங்களை ஒரே நாளில் பெறுமதி இழக்கச் செய்யுமளவுக்கு அமெரிக்காவின் பொம்மலாட்ட பொம்மையாக மோடி அரசு இருப்பதால் அவரும் பதவியில் தொடர்வார்.

இப்படி சீனாவுக்கு எதிரான சக்திகள் யாவும் ஒன்றிணைக்கப்படுகின்றன, தைவானைக் கூட தனிநாடு என்று அமெரிக்கா கருதியிருக்கிறது, 1970 தைவான் தொடர்பான அமெரிக்கக் கொள்கைகள் மாறியுள்ளன.

உலகத்தின் மிக மிக பெரிய சிக்கலை இருவரும் இணைந்து தீர்ப்போம் என்று ரஸ்ய அதிபர் டொனால்ட் ரம்பிற்கு எழுதியுள்ள நத்தார்தின வாழ்த்து மடல் பெரிய பிரச்சனை என்பது ஐ.எஸ் அல்ல சீனாதான் என்பதை சொல்லாமல் சொல்கிறது.. இது சீனாவுக்கும் தெரியும்.

ரஸ்யாவின் புதிய அணுசக்தி கட்டமைவை உளவு பார்த்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எப்போதுமே இரண்டாவது நிலையில் இருப்பதே ஆபத்தானது முதலும் மூன்றும் ஒன்று சேர்ந்து இரண்டாவதை வீழ்த்தும் என்பார்கள் அதுதான் நடக்கப்போகிறது, சீனா இரண்டாவது இடத்தில் இருப்பதால் வரும் சிக்கல்கள் இப்படியுள்ளன.

இதன் உச்சக்கட்டமாக ஈரானுக்கு உல்லாசப்பயணிகளை அனுப்ப ஐ.நா பகீரதப்பிரயத்தனம் எடுத்து வருகிறது, சவுதி தொடக்கம் சுனி முஸ்லீம் நாடுகள் பின்தள்ளப்படப் போகின்றன, ஈரான், சிரியா, ஈராக் என்ற சியா முஸ்லீம் நாடுகள் அமெரிக்க – ரஸ்ய ஆதரவாளராக மாறப்போகின்றன.

இதை சுனி முஸ்லீம் நாடான சவுதி எதிர்க்கும் இதை முன்னரே எதிர்பார்த்து சவுதிக்கான ஆயுத ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்தி செப் 11 தாக்குதலுக்கு சவுதியும் ஒரு காரணமெனக்கூறி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவுதி நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளது.

2030 ல் இருந்து பெற்றோல் கார்கள் உற்பத்தி நிறுத்தப்படுமென சுவீடனை வைத்து அமெரிக்கா பிரகடனப்படுத்தியதால் மத்திய கிழக்கு எண்ணெய் வள அதிகார காலம் முடிந்து அங்கு பஞ்சம் கடைவிரிக்கப்போகிறது.

நிலமை முற்றாக மாற்றமடையப்போவது தெரிகிறது.. ஜேர்மனிய இரும்புப் பெண்மணி அங்கீலா மேர்க்கல் தோல்வியடையப் போகிறார் என்று இப்போதே எழுத ஆரம்பித்துவிட்டார்கள், பிரான்சிய அதிபர் ஒலந்த் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனையும் இழந்து, முக்கிய இரும்புத்தூண்களான தலைவர்களையும் இழந்து தடுமாறப்போகிறது, இதற்குள் ஜேர்மனிய பிரதான வங்கிகள் 16 ன் மீது அமெரிக்கா பாரிய தண்டம் விதித்துள்ளது, டொச் பாங்க் பாரிய அடி வாங்கி நேற்றோடு பங்குகளின் பெறுமதி 50 வீதம் ஒரு நொடியில் காற்றாகிவிட்டது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிந்த பிரிட்டன் இந்த புதிய அணியுடன் ஒட்டி புதிய கூட்டை ஏற்படுத்த வழியிருக்கிறது – அமெரிக்கா – பிரிட்டன் – ரஸ்யா – இந்தியா ஓரணியில் கூடும் காலம் தெரிகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் – சீனா என்ற இன்னொரு அணி தோன்றவும் இந்த நகர்வுகள் காரணமாகிவிடலாம்..

மாறும் உலகில் இன்றைய நத்தார் தினத்தில் இஸ்ரேலிய யூதர்கள் அடைந்திருக்கும் தோல்வி இன்னொரு காலத்தை பிறப்பிக்கப்போகிறது.

பாதுகாப்பு சபையில் இஸ்ரேலுக்கு விழுந்த முதல் அடி இது சாதாரண அடியல்ல இதுதான் இந்த நூற்றாண்டின் மாற்றத்திற்கான புதிய காலடி..!

அலைகள் வாராந்த சர்வதேச விவகார ஆய்விற்காக

கி.செ.துரை

0 comments :

Post a Comment

 
Toggle Footer