Wednesday, December 28, 2016

தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் வருமானவரித் துறையினர் வளைத்து வளைத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தவர்களை சோதனை செய்து கைது நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலகம் வரை நுழைந்தது மோடி அரசின் கீழ் இயங்கும் வருமானவரித் துறை.

"கறுப்புப் பணத்தை ஒழித்து ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன்' எனக்கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் வாங்கி தனக்கு ஒரு நாயக அந்தஸ்தை ஏற்படுத்திக் கொள்ள நினைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதில் அவருடைய அரசு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், தலையணையை வைத்து முகத்தை அழுத்துவதுபோல, பெரும் வணிக நிறுவனங்களான சகாரா, பிர்லா குழுமங்களிட மிருந்து 55 கோடி ரூபாய் பணம் பெற்றதாக மோடிமீது காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் குற்றம்சாட்டியிருப்பது அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

"மோடி கங்கை நதி போல புனிதமானவர்' என்றார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். மோடியோ, "ராகுல் இப்போதுதான் பேசக் கற்றுக்கொள்ளும் குழந்தை' என்றார். பதிலுக்கு ராகுல், "என்னை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்' என்கிறார். "காங்கிரஸ் ஆட்சிக் காலத்து ஹெலிகாப்டர் ஊழல் வெளிவருவதால் பதிலுக்கு குற்றம்சாட்டு கிறார்கள்' என்கிறார்கள் பா.ஜ.க.வினர். "உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா' என்ற ரீதியில் பதிலடி தருகிறார்கள் எதிர்க் கட்சியினர்.

கடந்த சில மாதங்களாகவே புது டில்லியில் மெலிதான தொனியில் பேசப்பட்டுக் கொண்டிருந்த விவகாரம்தான் இது. தற்போது ராகுலின் குற்றச்சாட்டின் மூலம் நாடெங்கும் பேசப்படத் தொடங்கியுள்ளது. மோடி மட்டுமின்றி மத்தியப் பிரதேச முதல்வரான பா.ஜ.க சிவ்ராஜ் சிங்சௌகான், சத்தீஸ்கர் முதல்வரான பா.ஜ.க. ராமன்சிங், மகாராஷ்டிர பாரதிய ஜனதா பொருளாளர் சாய்னா, டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சித் பெயர்களும் இந்த விவகாரத்தில் அடிபடுகின்றன.

கறுப்புப்பணம் -லஞ்சப்பணம் என பிறரை மடக்கிய வருமானவரித் துறையின் சோதனையின் போதுதான் மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிரான இந்த பூதம் வெளிக் கிளம்பியது. நவம்பர் 22, 2014-ல் டெல்லி சகாரா குழுமத்தின் பல்வேறு வளாகங்களில் நடந்த சோதனையின்போது சில ஆவணங்கள் சிக்கின. ஆவணங்களைக் கைப்பற்றிய வருமான வரி (புலனாய்வுப் பிரிவு) இணை இயக்குநர் அங்கீதா பாண்டே மற்றும் இதர அதிகாரிகளின் கையெழுத்தும் இந்த ஆவ ணங்களில் இடம்பெற்றிருக்கிறது. இதிலும் பிர்லா  குழுமத்தில் நடந்த  சோதனையில்  கிடைத்த  ஆவணங்களிலும்தான் யாருக்கு, எவ்வளவு, எப்போது என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கும் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன், ""எனக்கு இந்த விவகாரத்தைப் பற்றி சொன்னது பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பியும் பிரபல வழக் கறிஞருமான ராம்ஜெத்மலானிதான்'' என்கிறார்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் ஜே.எஸ்.கேகர் மற்றும் அருண் மிஸ்ரா, "ஆவணங்கள் போதுமானதாக இல்லை'யென்று கூறியதோடு, டிசம்பர் 14-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். டிசம்பர் 14-ல் ‘"யார் வேண்டு மானாலும் பிரதமர் அல்லது முதல்வருக்கு எதிராக கம்ப்யூட்டரில் பணம் கொடுத்ததாக பதிவு செய்யலாம். அதை ஆதார மாக வைத்து நாங்கள் விசா ரணைக்கு உத்தரவிட முடியுமா?'’என கேட்டுள்ள னர்.

1996-ல் இதேபோன்ற ஒரு விவகாரம் கிளம்பியது. "ஜெயின் டைரிஸ்' என பிரபலமாக பேசப்பட்ட அந்த டைரியில், ஹவாலா பிரமுகர் சுரீந்திர குமார் தனது டைரியில் அத்வானி, மதன் லால் குரானா, மாதவ ராவ்சிந்தியா உள்ளிட்ட பிரமுகர்களுக்கு பணம் கொடுத்த விவரம் இடம் பெற்றிருந்தது. சி.பி.ஐ. விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் குரலெழுப்ப, உயர்நீதிமன்றமோ "தேவை யில்லை' என்றது.

வழக்கு உச்சநீதிமன் றத்துக்குப் போனபோது... ‘அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளுக்கு சட்டவிரோத மாக பணம் கொடுக்கப் பட்டதாக அரசு விசாரணை அமைப்புகளால் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டால் முழுமை யான, சுதந்திரமான விசா ரணை நடத்தப்படவேண்டும்’ என தீர்ப்பு வந்தது.

தற்போது உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மாறு பட்டிருந்தாலும், மோடிக்கு எதிரான இந்தப் புகாரும், சகாரா நிறுவனத்தில் கைப் பற்றப்பட்ட ஆவணங்களில் மோடிக்குத் தரப்பட்ட பணம் பற்றிய விவரங்கள் குறிப் பிடப்பட்டிருப்பதும் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரலை ஓங்கி ஒலிக்க வைத்திருக்கிறது.

க.சுப்பிரமணியன்
nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer