Tuesday, December 27, 2016

சுனாமி அனர்த்தத்தின்போது உயிரிழந்த மக்களின் நினைவாக ஒட்டுச்சுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் நினைவு தூபி அமைக்கப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இந்த நினைவு தூபி இன்று திறந்துவைக்கப்பட்ட நிலையில், ஆழிப்பேரலையின் போது காவுகொள்ளப்பட்ட மக்களுக்கு அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இது குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்ததில் உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்ட உறவுகளில் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவாலயம் அழிக்கப்பட்டது.

இந்நிலையில், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அந்த இடத்தில் நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer