Wednesday, December 7, 2016

திரைப்படத்தின் ஆளுமையை அரசியலில் பிரதிபலித்த பெண் பாத்திரம்..

தமிழகத்தின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான காலஞ்சென்ற ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் காலடி பதித்தவர் செல்வி. ஜெயலலிதா ஜெயராம்.

கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்திய அந்தக்காலத்தில் கேவா கலரில் வந்த வெண்ணிற ஆடை திரைப்படத்தில் நிர்மலா, சிறீகாந்த், மூர்த்தி என்று பல புது முகங்களை அறிமுகம் செய்தார் ஸ்ரீதர், அந்த வரிசையில் திரையுலகப் பிரபலத்தால் முதல்வர் பதவியை ஐந்து தடவைகள் தனதாக்கிக் கொண்டவர் ஜெயலலிதா.

வெண்ணிற ஆடை திரைப்படம் அக்காலத்தில் வயது வந்தோர் மட்டும் பார்க்கும் திரைப்படம் என்ற அறிவிப்புடன் வந்தது, அதன் காட்சிகள் ஆபாசமானவை என்றும் கூறப்பட்டன, அந்தப்படத்தில் புது முகங்கள் எல்லோருடைய முகங்களிலும் அச்சமும் வசன ஒப்படைப்பில் ஒருவித தயக்கமும் தென்படும், ஆனால் எந்த அச்சமும் முதலாவது படம் என்ற தயக்கமே இல்லாமல் அந்தப்பாத்திரத்தில் முத்திரை பதித்த பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

அன்று அப்படத்திலே அவர் முற்றிலும் தேர்ந்த நடிகைபோலவே தரிசனமானார் இதற்குக் காரணம் அவருடைய தாயார் சந்தியாவும் ஒரு திரைப்பட நடிகையாக இருந்ததால் வந்த துணிச்சலும் அனுபவமும் அவருக்கு கைகொடுத்தது என்று கூறலாம்.

நீச்சல் உடையில் அவர் வழங்கிய வர்ண நடனத்தால் கொள்ளை போனார் எம்.ஜி.ஆர் என்று இருவர் திரைப்படத்தில் ஒரு காட்சியை வைத்திருப்பார் இயக்குனர் மணிரத்தினம்.

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப்போகும்.. என்று பாடியபடி நீரில் பம்பரமாய் சுழன்று தேனும் தந்து அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ என்றபடி புயலாக திரையுலகிற்குள் புகுந்தார்.

அவருடைய வரவை தடுக்க அன்றைய முன்னணிக் கதாநாயகிகளால் எவராலுமே முடியவில்லை.. ஸ்ரூடியோவில் அவர் நடந்து போவதைப் பார்த்தால் ஒரு சிறிய புயலே வீசிப்போவதைப் போலிருக்கும் அவர் ஒரு பெண் சூப்பர்ஸ்டார் என்று இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஓரிடத்தில் கூறியிருக்கிறார்.
முதலாவது படத்தில் இருந்தே தனக்கான திரையுலக ஆளுமையை அவர் நன்கு திட்டமிட்டு வகுத்துக்கொண்டார் 127 திரைப்படங்களிலும் அவருடைய ஆளுமை அவர் நடித்த ஒவ்வொரு திரைப்படத்திற்குமே புது வலு கொடுத்தது என்றால் அதை யாரால் மறுக்க முடியும்.

அன்று திராவிட முன்னேற்றக்கழகத்தில் ஜெயலலிதாவை கொண்டுவர எம்.ஜி.ஆர் எடுத்த முயற்சியும் அதற்கு ஏற்பட்ட உள்ளகத் தடையும் அதிமுக உருவாக்கத்திற்கு முக்கிய காரணமென்று அன்றே பல நூல்களில் எழுதினார்கள்.

அதிமுகவிற்கு விசை கொடுத்தது மட்டுமல்ல திமுகவின் வெற்றி திரையுலகால் எழுதப்பட்டபோது முக்கிய இடம் பிடித்த திரைப்படம் அரசகட்டளை, எம்.ஜி.ஆர் துப்பாக்கிச் சூடுபட்டிருந்தபோது திரைக்கு வந்தது.

இதில் எம்.ஜி.ஆருக்கு நாயகிகளாக இரண்டு கன்னடத்து பைங்கிளிகள் நடித்தார்கள் ஒருவர் சரோஜாதேவி இன்னொருவர் ஜெயலலிதா, அந்தத் திரைப்படத்தில் சரோஜாதேவியின் மரணக்காட்சியையும் ஜெயலலிதா எம்.ஜி.ஆரை மணப்பது போலவும் காட்சியமைத்து இளம் கன்னடத்து பைங்கிளியான ஜெயலலிதாவுக்கு முதன்மை கொடுத்திருப்பார் எம்.ஜி.ஆர் 1967 திமுக ஆட்சியமைக்க காரணமான அந்தத் திரைப்படத்தில் கழகக் கண்மணிகளுக்கு புது விசை கொடுத்தவர் ஜெயலலிதா.. அவரின் முதல்வருக்கான வரவுக்கு அரசகட்டளையிலேயே அச்சாரம் கொடுத்துவிட்டார்.

முகத்தைப் பார்த்ததில்லை அன்பு மொழியை கேட்டதில்லை இந்த மனதைக் கொடுத்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன..

அரசகட்டளையில் வரும் இந்தப்பாடல் வரிகள் தற்செயலாக எழுதப்பட்டவையல்ல வெண்ணிற ஆடையை பார்த்த எம்.ஜி.ஆர் அசப்பில் தனது காலஞ்சென்ற முதல் மனைவியை போன்ற சாயலிலேயே ஜெயலலிதா இருந்தார் என்று அவரை விரும்பியதற்கான காரணத்தை கூறுவதாக இருவர் படத்தில் காட்சி வைத்திருப்பார் மணிரத்தினம் அதுதான் அரசகட்டளை பாடலின் வரிகளாக வருகிறது.

முகத்தைப் பார்த்ததில்லை அன்பு மொழியை கேட்டதில்லை இந்த மனதைக் கொடுத்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன.. அதற்கு பதில் எம்.ஜி.ஆரின் முதல் மனைவியின் உடலத்தை அவர் போய் சேர முன்னரே புதைத்துவிட்டார்கள்… அந்த முகத்தை தேடிக்கொண்டிருந்தார்.. திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ என்று ராமன் தேடிய சீதையில் ஜெயலலிதாவைப்பார்த்து பாடினார் எம்.ஜி.ஆர்.

ஆகவே திராவிடக்கட்சிகளின் அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் வரலாறு தற்செயலானது என்று கூறிவிட முடியாது எம்.ஜி.ஆருடன் இணைந்து படிப்படியாகவே வளர்ந்து வந்ததாகவே கூற வேண்டும்.

இவர் 127 படங்களில் நடித்தாலும் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் 27 ஆகும் எம்.ஜி.ஆருடன் இவ்வளவு பெருந்தொகையான படங்களில் அவர் நடித்ததே திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தைக் கொடுத்தது.

அதில் முக்கியமான திரைப்படம் அடிமைப்பெண் அந்தத் திரைப்படம் எம்.ஜி.ஆரின் சொந்தப்படம் வழமையாக தனது படங்களில் தானே இரட்டை வேடங்களில் நடித்து இரண்டு கதாநாயகிகளை போடுவது எம்.ஜி.ஆர் பாணியாகும் ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக ஜெயலலிதாவுக்கு இரட்டை வேடத்தை கொடுத்து அவர் தான் ஒரே வேடத்தில் நடித்தபோது திரையுலகமே ஜெயலலிதாவை நின்று திரும்பிப் பார்த்தது.

அந்தப்படத்தில் இரண்டு விதமான பாத்திரங்களாக அவரை வடிவமைத்திருப்பார், ஒருவர் கர்வம் பிடித்த அரசி ஜீவா இன்னொருவர் அம்மா என்றால் அன்பு என்று பாடும் தாய்போன்ற குணமுடையவர்.

இந்தப்படத்தில் சொந்தக்குரலில் பாடும்படியும் அவருக்கு வாய்ப்பளித்தார், அதன் பொருட்டு அவர் பாடியதுதான் அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி அவனே உலகின் தெய்வம் என்ற பாடல் அவரை ஒரு புறம் அன்புள்ள அம்மாவாக உருவாக்கியது.

இன்று தமிழகத்தில் அவர் தொண்டர்கள் அம்மா என்று அவரை கொண்டாடி உயிரும் கொடுக்க முன்வருகிறார்கள் என்றால் அதற்கான அடிப்படையை அவர் பெற்றுக்கொள்ள அடிமைப்பெண்ணிலேயே வழி செய்கிறார் எம்.ஜி.ஆர்.

மறுபுறம் இரக்கமில்லாத ஆணவம் மிக்க பெண்ணாக அடிமைப்பெண்ணில் வரும் ஜீவா பாத்திரமாகவே அவர் தன்னுடைய அரச அதிகாரத்தை அமைத்துக் கொண்டார், அவர் ஆசனத்தில் இருக்கும்போது அனைவரையும் நிறுத்தினார், அவர் வரும்போது மேடையில் ஒரேயொரு கதிரை மட்டுமே இருக்கும் சுற்றவர எல்லோரும் கைகட்டி நிற்பார்கள் இது, அடிமைப்பெண்ணிலும், ஆயிரத்தில் ஒருவனிலும் எம்.ஜி.ஆர் அவருக்குக் காட்டிய அதிகார ஆளுமையாகும்.

அதேபோல எம்.ஜிஆரையும் அவர் நேசித்தார், அதை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றால் நாம் எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம்..

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன் என்ற பாடல் அதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

இவ்வாறு வளர்ந்த அவருடைய திரையுலக ஆளுமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 11 திரைப்படங்களில் நடித்தார், திரையுலகில் மிகப்பெரும் ஆளுமை கொண்ட நடிகர் திலகமே ஸ்ரூடியோவுக்கு முன்னதாக வந்து ஜெயலலிதாவுக்காக காத்திருந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு, அந்தளவுக்கு எம்.ஜிஆர் ஒருவரைத்தவிர மற்றெல்லா நடிகர்களுமே தனக்குப் பின்னால் நிற்கும்படியாக தனித்துவமிக்க ஒரு நடிகையாக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

புராணப்படங்களில் வள்ளி பாத்திரத்திற்கு மிகவும் பொருந்திய ஒரு நடிகையாக அவர் திகழ்ந்தார் கந்தன்கருணையில் வள்ளியாக தோன்றிய அவருடய பக்திப்பரவசமான துடினமிக்க தெய்வீக நடிப்பு நடிப்பில் அவரது பல்வேறு பரிமாணங்களையும் காட்டியது.

அது மட்டுமல்ல பெண்கள் உயர்வானவர்கள் என்ற பாத்திர வடிவமைப்பை பல படங்களில் வெளிப்படுத்தினார் அதில் ஒன்று சூரியகாந்தி படமாகும் அங்கு கணவனைவிட உயர்ந்து செல்லும் பாத்திரமாக திரையுலகில் தன்னை ஆளுமைப்படுத்தினார்.

சந்ரோதயம், தனிப்பிறவி, எங்கிருந்தோ வந்தாள், பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி, குடியிருந்த கோயில், ரகசியபோலீஸ் 115, திக்குத்தெரியாத காட்டினிலே, அன்னை வேளாங்கணி, ஒளிவிளக்கு, அவருடைய 100 வது படமான திருமாங்கல்யம் என்று அனைத்துப்படங்களிலும் தமிழகத்திற்கு ஓர் ஆளுமையுள்ள பெண்ணாக தன்னை அடையாளப்படுத்திவிட்டே அவர் 1981 அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக அரசியலுக்கு வந்தார்.

வாங்கையா வாத்யாரையா என்று எம்.ஜி.ஆரை அவர் அரசியல் வானில் தனது ஆளுமையால் உயர்த்தினார்.

திரையுலகில் நாயகனாக வந்தால் முதல்வர் ஸ்தானத்தை பிடித்துவிடலாம் என்று கனவு காணும் நடிகர்கள் பலர் எம்.ஜி.ஆருக்கு பிறகு வந்தார்கள், ஆனால் ஒரு நடிகை வரமுடியுமா என்று யாருமே கற்பனையே செய்யாத வேளையில் ஐந்து தடவைகள் முதல்வராகி சாதனை படைத்தார்.

ஏற்கெனவே திரை நடிகை ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக இருந்தாலும் அவரால் ஒரு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று முதல்வராக முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது, ஆகவே ஒரு நடிகையாக முதல்வராகிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

முதல்வராகி பல தேர்தல்களில் எம்.ஜி.ஆர் படைக்காத சாதனைகளையே படைத்தார்.. தமிழீழத்தை தமிழக சட்டசபையில் பிரகடனம் செய்தார், சிறீலங்கா மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்றார்.. ஈழத் தமிழர் விவகாரம் பற்றி கிளரி கிளிண்டனுடன் நேருக்கு நேர் பேசினார்.

சினிமாவால் அரசியலை வென்றார் அரசியலால் மக்களை வென்றார்.. இன்று ஒரு மகத்தான பெண்மணியாக தமிழ் திரையுலகிற்கு மகத்தான பெருமை தேடிக் கொடுத்து இவருக்கு பின் இன்னொரு நடிகை இவருடைய வரலாற்றை எழுத முடியாது என்றளவுக்கு பொற்கால வரலாற்றை எழுதி விடை பெற்றுள்ளார்.

இன்று அவரை நினைத்து தமிழகமே அழுகிறது.. அழுவோருக்கு அவர் சொல்லும் பதில்தான் என்ன..

யார் நீ படத்தில் என் வேதனையில் உன்கண்ணிரண்டும் அழுவதேன் கண்ணா என்று கேட்டார், இன்றைய தினத்திற்காக அவர் நடித்து வைத்த பாடலும் இதுதான்.

இன்று அதிகாரத்திற்கு வருவோர் நாளை அவருடைய புகைப்படத்தைப்பார்த்து யார் நீ என்று கேட்கலாம் அத்தகையோருக்காகவும் அவர் நடித்திருப்பதுதான் எத்தனை சுவாரஸ்யமானது..

கால தேவன் வாசல் வழியே போகிறேன் இன்று நான் யாரோ
போகும் வழியில் அன்பு முகத்தை பார்க்கிறேன்
நாளை நான் யாரோ.. என்வேதனையில் உன் கண்ணிரண்டும் அழுவதேன் கண்ணா..

திரையுலகம் மட்டுமல்ல.. இன்று தமிழ் கூறும் நல்லுலகே அவருக்காக அழுகிறது சென்று வாருங்கள்.. தங்களை தமிழகமும் தமிழீழமும், உலகத்தமிழினமும் மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறது.

கி.செ.துரை

0 comments :

Post a Comment

 
Toggle Footer