Tuesday, December 27, 2016

தந்தைக்கு  மகள்கள் எப்போதும் தேவதைகள்தான். எந்த பொருள் கேட்டாலும் தங்களால் முடிந்த வரை மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி விடவே தந்தையர்கள் முயல்வார்கள். பணக்கரத் தந்தையாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும்...சரி மகள்கள் கேட்டால் ஏன்... எதற்கு என்ற கேள்வி எழாது. சத்தம் காட்டாமல் வாங்கிக் கொடுத்து விட்டு கமுக்கமாகப் போய் விடுவார்கள். பெரும்பாலான வீடுகளில் மகன்கள் அம்மா செல்லம் என்றால் மகள்கள் அப்பா செல்லமாக இருப்பார்கள். மகள்கள் தங்கக் கொலுசுக் கேட்டால் கூட, வாங்கிக் கொடுத்து விட்டு, 'உங்க அம்மாட்ட சொல்லிடாத அப்புறம் உன் தம்பிட்டயும் மாட்டிவிட்டுடாதனு' சொல்ற தந்தையர்களும் இருப்பார்கள். தந்தையுடனான மகள்கள் உறவு அப்படி.

தந்தை- மகள் உறவுக்கு எடுத்துக் காட்டாக கேரளத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இந்த தந்தையும் மகளின் ஆசையை நிறைவேற்றிதான் வைத்துள்ளார். ஆனால், மகள் இறந்த பிறகு என்பதுதான் சோகத்திலும் சோகம். கேரள மாநிலம் மால்மோட்டம் நகரைச் சேர்ந்தவர் அனில். இவரது மகள் அனகா. துருதுருவென இருக்கும் அனகா அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். படிப்பு, விளையாட்டு என எதிலும் அனகா கெட்டி. தந்தை அனில் அனகா மீது உயிரையே வைத்திருந்தார். மகள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவது அனிலின் சுபாவம்.  பன்னிரென்டாம் வகுப்பு மாணவியான அனகாவுக்கோ தங்க நகைகள் மீது ஈடுபாடு இல்லை. ஆனால், காலில் தங்கக் கொலுசு அணிய வேண்டுமென்பது ஆசை. தங்கக் கொலுசு வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டிருந்தார்.

எளிய குடும்பம் என்பதால் மகளின் ஆசையை உடனடியாக அனிலால் நிறைவேற்றி விட முடியவில்லை. மகளின் ஆசையை நிறைவேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். 'கிறிஸ்துமஸ் தினத்தன்று தனக்கு கிஃப்டாக தங்க கொலுசு வாங்கி தந்து விடவேண்டுமென்று' தந்தையிடன் அனல்கா கண்டிப்புடன் கூறியிருந்தார். அனிலும், நிச்சயம் கிறிஸ்துமஸ் பரிசாக தங்கக் கொலுசு வாங்கிக் தந்துவிடுவேன் " என மகளிடம் வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கிடையேதான் அந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது.

கடந்த 16ம் தேதி சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த அனகா மீது டெம்போ வேன் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட. அனகா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அனகா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அனில் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீரும் கம்பலையுமாக மருத்துவமனையில் தவம் கிடந்தனர்.  மகளுக்கு நினைவு எப்போது நினைவு திரும்பும் என்ற பரிதவிப்புடன் டாக்டர்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அனகாவுக்கு சில சமயங்களில் நினைவு திரும்பும். அறைக்கு வெளியே காத்திருக்கும் தந்தை அனில் மகளிளடம் பேச ஆசையுடன் ஓடி வருவார்.

ஆனால், அதற்குள் அனகா திரும்பவும் மயக்க நிலைக்கு சென்று விடுவார். இப்படியாக கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த அனகா கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்து போனார். அனில் உள்பட குடும்பத்தினர் கதறினர். மால்மோட்டம் நகர அரசு பள்ளியில் அனகாவின்உ டல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. மகளின் உயிரற்ற உடலை துக்கம் தாளாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அனில். திடீரென்று அனிலுக்கு மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தங்கக் கெலுசு பரிசளிப்பதாக கூறியது நினைவுக்கு வந்தது. உயிருடன் இருக்கும் போதுதான் அவளுக்கு வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இறப்பிலாவது மகளின் இறுதி ஆசையை நிறைவேற்றி வைக்க, அனில் முடிவு செய்தார்.

பதறியபடி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வேக வேகமாக ஓடிப் போனார். இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாகினர். 'மகளின் சடலத்தை விட்டு விட்டு எங்கே ஓடுகிறார்' என பலரும் பதறினர். சிலர் அவரது பின்னால் ஓடினர். வேக வேகமாக ஓடிய அனில்ந கைக் கடை ஒன்றுக்குள் புகுந்தார். மகளின் இறுதிச் சடங்குக்கு வைத்திருந்த பணத்தில் இருந்து தங்கக் கொலுசு வாங்கினார். மகளின் உயிரற்ற உடல் அருகே சலமற்று வந்த அனில்,  அவரது சலனமில்லாத கால்களில் இரு தங்கக் கொலுசுகளையும் கண்ணீர் மல்க மாட்டி விட்டார். இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் கண்கள் குளமாகின.

அனகாவின் உயிரற்ற உடலை மண்ணுக்குள் புதைக்கும் போதும், அவரது கால்களில் கொலுசுகள் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer