Wednesday, December 28, 2016

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அமெரிக்காவின் நடவடிக்கை கிளர்ச்சிப் படைக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இலகுவில் கிடைக்கச் செய்யும் என்றும் இது சிரியாவிலுள்ள ரஷ்யப் படைகளுக்கு அச்சுறுத்தல் ஆகையால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே விரோதத்தை வளர்க்கும் என்று ரஷ்யா அமெரிக்காவைச் சாடியுள்ளது.

கடந்த வருடம் கிளர்ச்சிக் குழுக்களிடம் உள்ள சில பகுதிகளைக் கைப்பற்ற சிரிய அரச தலைவர் பஷார் அல் அசாத்துக்கு உதவியாக ரஷ்யா வான் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சில கிளர்ச்சிக் குழுக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்து வந்தது. இந்நிலையில் கிழக்கு அலெப்போ அண்மையில் அரச தரப்பின் வசம் வீழ்ந்த பின்னர் சிரிய கிளர்ச்சிக் குழுக்கு ஆயுதம் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியிருப்பது விரோதத்தை வளர்க்கும் செயல் என ரஷ்ய வெளியுறவுத் துறை பேச்சாளர் மரியா ஷக்கரோவா தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை கூர்மையான சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக அமெரிக்க அதிபர் ஒபாமா பார்ப்பதுடன் கடந்த வாரம் வருடாந்த பாதுகாப்பு கொள்கையிலும் இதனை நிலைநாட்டியுள்ளார். ஆயினும் சிரிய எதிரணியினருக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை ஏதும் வழங்கவில்லை என அமெரிக்க மாநிலத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனெர் மறுத்துரைத்துள்ளார். இதேவேளை உக்ரைன் விவகாரத்தினால் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை கடந்த சில வாரங்களாக ஒபாமா தலைமையிலான நிர்வாகம் அதிகரித்து இருந்தது. மேலும் அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சார சமயத்தில் மாஸ்கோவுடனான உறவை வலுப்படுத்துவேன் எனவும் விளாடிமிர் புட்டினின் தலைமையிலான மாஸ்கோ அரசு சிறப்பாக இயங்கி வருவதாகவும் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer