Thursday, December 29, 2016

தேசிய அரசாங்கத்தை கவிழ்த்து ஐக்கிய தேசியக் கட்சியை ஓரங்கட்டுவதற்கு யாராவது நினைத்தால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒத்துழைக்கும் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

தேசிய அரசாங்கத்தின் மூலமே நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனும், இணைத்தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரமும் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

மனோ கணேசன் கூறியுள்ளதாவது, “2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட வெற்றியை சீர்குலைக்கும் நபர்கள் தற்போது துரதிஷ்டவசமாக அரசாங்கத்தில் பதவி வகிக்கின்றார்கள். இவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தவர்கள். அவர்களில் அமைச்சர் டிலான் பெரேரா, எஸ்.பி.திசாநாயக்க ஆகியோர் முக்கியமானவர்கள்.

இவர்கள் திடீரென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி என்று வெறுமனே இரட்டிப்பு பதவிகளைப் பெற்றுக் கொண்டு தேசிய அரசாங்கத்தில் இணைந்தவர்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டவர்கள் அனைவரும் புண்ணியத்துக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள், பாவிகள் என்றெல்லாம் அமைச்சர் டிலான் பெரேரா அண்மையில் தெரிவித்துள்ளார். உண்மையில் அவர்களே புண்ணியத்துக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள். நாங்கள் அவ்வாறு பதவிக்கு வந்தவர்கள் அல்ல. மக்கள் பலத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள்.

கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்ப்போமேயானால் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்கும் போது பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்று அதை எதிர்க்கும். எனவே தான் புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கும் நோக்குடன் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைத்தது.

ஆனால் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் யாப்பு என விமர்சித்து அதன்மூலம் அரசைக் கவிழ்க்க முயற்சிக்கின்றார்கள். அது மட்டுமின்றி அதற்கு ஆதரவாக அமைச்சர் டிலான் பெரேராவும் பேசுகிறார். டிலான் பெரேரா என்னுடன் அரசியல் யாப்பு வழிநடாத்தும் குழுவிலும் இருக்கின்றார். எனவே உண்மையில் புதிய அரசியல் யாப்பு அவ்வாறானதொரு யாப்பு அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இரகசிய தொடர்பு ஒன்று இருப்பதாகக் கூறுகின்றார்கள். உண்மையில் பஷில் ராஜபக்ஷவுக்கும் டிலான் பெரேராவுக்குமிடையில்தான் இரகசிய தொடர்பு ஒன்று இருப்பது தெரிகின்றது.

தமிழ் முற்போக்குக் முன்னணி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகளவான ஆதரவுகளை வழங்கியது. கொழும்பிலும் மலையகத்திலும் அதிகளவான வாக்குகளை பெற்றுக்கொடுத்தோம். அதற்குக் காரணம் அவர் மூலமாக தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையினால் ஆகும்.

ஆகவே, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கவேண்டுமாயின் 2020ஆம் ஆண்டு வரை இந்தத் தேசிய அரசாங்கம் நடைமுறையில் இருக்க வேண்டும். அதையே நாம் விரும்புகின்றோம்.” என்றுள்ளார்.

பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளதாவது, “ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதை தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 105 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டியது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தனியாக அரசாங்கமொன்றை அமைக்காது ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்து கொண்டு செல்லும் போது அரசாங்கத்தில் இருக்கும் சில அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாக குறைகளை கூறி அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கின்றார்கள்.

அப்படி நடந்து மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வருவாராயின் அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இந்த அரசாங்கத்தை கவிழ்க்க தற்போது சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அண்மையில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை அமைக்க மஹிந்த ராஜபக்ஷவின் உதவியை தேடுவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் அமைச்சர் டிலான் பெரேரா, ஜக்கிய தேசிய கட்சிக்கு சேறு பூசிவருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாக அரசாங்கமொன்றை அமைப்பது பெரிய விடயமில்லை. விருப்பமில்லாதவர்கள் இந்த அரசாங்கத்தை விட்டு வெளியே செல்லலாம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer