Tuesday, December 27, 2016

கல்வியின் புதிய கதவுகளை திறக்க பாடசாலைகளுக்கு வழங்கப்படுகிறது ஒளியரசி..

தாயகத்தில் இருந்து வெளிவரும் ஒளியரசி சஞ்சிகை இன்று 15.000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிறது, பெண்களால் வடிவமைக்கப்பட்டு அவர்களாலேயே சந்தைப்படுத்தப்படும் ஒளியரசி புதிய தடத்தில் நடைபயில்கிறது.

டிசம்பர்மாத ஒளியரசியில் வெளியான அர்ச்சனா செல்லத்துரையின் நேர்காணல் இங்கு தரப்படுகிறது..

உங்களைப்பற்றிய அறிமுகம் ஒன்றை எமது வாசகர்களுக்கு தாருங்கள்?

எனது பெயர் அர்ச்சனா செல்லத்துரை தற்போது நான் டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறேன், எனது பெற்றோர் தாயகத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள், நான் பிறந்தது டென்மார்க் நாட்டில், படித்தது டேனிஸ் மொழியில் கூடவே தமிழ் மொழியையும், கலைகளையும் சிறுவயது முதலே இடைவிடாது விருப்புடன் பயின்று வருகிறேன்.

பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தேன், பின் கர்னாடக சங்கீதத்தை முறைப்படி பயின்றேன், டேனிஸ் இசைக்கல்லூரியில் வயலின், புல்லாங்குழல் போன்ற வாத்தியங்களை படித்தேன் இது எனது இன்னொரு பக்கம்.

டென்மார்க்கில் அட்வாண்ஸ்லெவல் தரத்தை படித்தவுடன் தமிழர்களின் கனவுக்கல்விகளுக்குள் போக வழியிருந்தது ஆனால் நான் போகவில்லை.

என்னைப்பற்றிய அறிமுகத்தில் இதுதான் முக்கியமானது நாம் யாருக்காக படிக்க வேண்டும், எதற்காக படிக்க வேண்டும், ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்விகள் மனதில் எழுந்தன.

அந்தக்கேள்விக்கு விடைதேடி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை சென்று நான்கு வருடங்கள் படித்து டேனிஸ் மொழி ஆசிரியராக இளமானிப்பட்டம் பெற்றேன்.

அதன் பின்னரும் நான் பாடசாலை ஒன்றுக்கு ஆசிரியராகப் போகவில்லை டென்மார்க்கில் தஞ்சம்கோரி வரும் வெளிநாட்டவர்களுக்கு டேனிஸ் மொழியை கற்பிக்கும் மொழிக்கல்வி பாடசாலையில் என்னை இணைத்து தஞ்சம்கோரி வந்த பல்வேறு கண்டங்களையும் சேர்ந்த மக்களுக்கு கற்பித்தேன்.

அப்பொழுதுதான் சுதந்திரமற்ற வாழ்வு வாழும் உலக மக்கள் பற்றியும், ஆபிரிக்க, மத்திய கிழக்கு பெண்களின் வாழ்க்கைத்தரங்கள் பற்றியும் அறிந்து கொண்டேன். பெண்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்காத ஓர் உலகம் இருப்பதை கண்டு கொண்டேன்.

அவ்வளவுதான் சுதந்திரமே உயர்ந்ததென எண்ணினேன், விமானியாக முடிவு செய்தேன், வேலையை துணிந்து இராஜினாமா செய்தேன்.

இந்த இடைவெளியில் மூன்று திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்தேன், பல இசைத்தட்டுக்களில் பாடினேன், காணொளி பாடல்களில் நடித்து பரிசு பெற்றேன் பல மேடைகளில் நடனமாடினேன், இப்படியே கலைவாழ்வும் கல்வியும் இணைந்து வாழ்க்கை நகர்ந்தது.

அமெரிக்கா, சுவீடன், டென்மார்க், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் கல்விகற்று வர்த்தகத்துறை விமானங்களுக்கான கல்வியை முடித்து, இப்போது பிரிட்டீஸ் எயார்வேய்ஸ்சில் உள்ள சன் எயாரில் விமானியாக பணியாற்றுகிறேன்.

இதுவே இதுவரை என் வாழ்வின் தோற்றங்கள் எனது அண்ணன் இசையமைப்பாளர் திரைப்பட நடிகர் வஸந்த் செல்லத்துரை டென்மார்க் ஒல்போ பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்து இப்போது பி.எச்.டி செய்கிறார், எனது இளைய சகோதரி மிதிலா செல்லத்துரை ஊடகத்துறையில் கல்வி கற்று வருகிறார், அலைகள் ரி.வி என்ற செய்தி ஊடகத்தையும் நடத்தி வருகிறார். அம்மா பவானி, அப்பா கி.செ.துரை பல்வேறு திறமைகளின் வெளிப்பாடக இருப்பவர்.

கேள்வி: முதலாவது ஈழத்து விமானியாய் சிறந்த சாதனை படைத்துள்ளீர்கள், அது பற்றி?

பதில்: டென்மார்க்கில் உள்ளவர்கள் டென்மார்க்கின் முதல் தமிழ் பெண் விமானி என்கிறார்கள், தமிழகத்தில் தமிழ் பெண் விமானி என்று போற்றுகிறார்கள், நமது ஊரில் வல்வை பெண் விமானி என்று போற்றுகிறார்கள், தாயகத்தில் இலங்கையின் முதல் தமிழ் பெண் விமானி என்கிறார்கள், உலக ஊடகங்கள் உலகத்தமிழ் பெண் விமானி என்கிறார்கள். நாம் அடிமனதில் மறைந்து கிடக்கும் இலட்சிய வழியில் பயணப்பட்டால் உலகம் நம்மை போற்றும், ஈழத்திற்கு இப்படி நாம் பெருமை சேர்த்துக் கொடுத்தது பெரியதோர் இன்பம் இதுபோல மகிழ்வு வேறெதுவும் கிடையாது. ஒவ்வொரு ஈழத்துத் தமிழ் பெண்களுக்கும் ஒரு பெருமை கொடுத்துள்ளேன் என்று ஆத்ம திருப்தியடைகிறேன்.

கேள்வி: விமானி ஆவது என்பது உங்கள் சிறுவயதுக்கனவாக இருந்ததா?

பதில்: சிறிய வயதில் எனது பெற்றோர் படி என்று கூட கட்டாயப்படுத்தவில்லை, முதலில் சிறு பராயத்தின் இன்பங்களை அனுபவித்து மகிழ்வோடு வாழ அனுமதித்தார்கள் இதனால் எனக்குள் கனவுகள் இருக்கவில்லை. எனக்கு யாதொரு குறையும் இருக்கவில்லை அதனால் இலட்சியக் கனவுகள் இருக்கவில்லை.. அந்தக் கனவை கண்டு பிடிக்கத்தான் நான் போராடினேன்.

கேள்வி: வித்தியாசமான உங்கள் இலட்சியத்தின் அடித்தளம் யாது?

பதில்: நமது சமுதாயத்தை எடுத்துப்பாருங்கள் ஒரு தொலைக்காட்சி பெட்டி வாங்குவதானால் கூட பக்கத்து வீட்டில் இருக்கும் அதே பெட்டியைத்தான் வாங்குவோம், சரியோ தவறோ மற்றவர் போகும் பாதையில் போனால் சிக்கல் இல்லை என்பதுதான் நமது சமுதாய இயங்கியலாக இருக்கிறது.

ஆனால் மேலை நாடுகளில் டாக்டராக படிக்க வாய்ப்பிருந்தாலும் சாதாரண கூலித்தொழிலுக்கு போவார்கள் ஏனென்றால் தமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்பதற்காக.

நானும் வித்தியாசமாக சிந்தித்தேன், எனது நண்பிகளில் பலருக்கு வித்தியாசமாக சிந்திக்க குடும்பத்தில் இடமிருக்கவில்லை, எனக்கு பரிபூரண சுதந்திரம் இருந்தது காரணம் பெற்றோரின் துணிச்சலான பரந்த மனது எனக்கு வாய்ப்பாகிவிட்டது.

அதனால் நான் வித்தியாசமாக சிந்தித்தேன் என்னை உதாரணம் காட்டி எனது நண்பிகளும் தங்கள் வீடுகளில் சுதந்திரத்தை பெற முன்னுதாரணமாகத் திகழ்ந்தேன், அதுதான் என்னை மிக வேகமாக வேகமாக முன் தள்ளியது.

பறக்க குடும்பத்தில் அனுமதி இருந்தது.. பறந்தேன். மேலும் நமது சமுதாயத்திற்கு டாக்டர்கள், பொறியியலாளர்கள் வேண்டும் அத்துறைகளில் படிப்பது நல்லது, விரும்பினால் படியுங்கள் ஆனால் நமது குடும்பத்திற்கு அவை வேண்டாம் என்று என் தந்தை கூறுவார், காரணம் மற்றவர் வீட்டில் இருக்கும் அதே மார்க் தொலைக்காட்சியையே நாமும் வேண்டுமென போராடுவது வாழ்வல்ல என்றார்.

கேள்வி: உங்கள் ஆளுமைக்கு வழிகாட்டியாய் இருந்தவர் யார்?

பதில்: முதலில் என் தாய், தந்தை என்று கூறலாம் என் தந்தை மிகவும் துணிச்சலான மனிதர், எழுத்தாளர் கலைஞர் என்று பல கோணங்களில் நமக்கு யதார்த்தமாக வாழ்ந்து காட்டுகிறார். பிள்ளைகளுக்கு பெற்றோர் புத்திகளையும் உப கதைகளையும் சொல்வது நல்லது ஆனால் அவர்கள் அருகில் ஆளுமையுடன் வாழ்ந்து காட்டினாலே பிள்ளைகளால் பின்பற்ற முடியும். ஆளுமை என்பது ஓர் அன்றாட வாழ்க்கை, அதிலிருந்து வளரும் அழகிய செடி. எனது அண்ணன், குடும்பத்தில் பலர் ஆளுமை மிக்க மனிதர்களாக இருந்ததே எனது வெற்றிக்கு முக்கிய காரணமாகும். மேலும் எனது நடன ஆசிhயை சுமித்திரா சுகேந்திரா நல்ல குருவாக இருந்து எனக்கு வழிகாட்டினார்.

கேள்வி: உங்கள் இலட்சியப்பாதையில் உங்கள் குடும்பத்தின் பங்களிப்பு எத்தகையது?

பதில்: விமானியாக படிப்பதற்காக தனி ஒரு பெண்ணாக அமெரிக்கா சென்று அங்கேயே தங்கியிருந்து கற்க வேண்டும், அதற்கான உற்சாகத்தை தந்தது குடும்பம். நான் சுயமாக பல ஆண்டுகள் சம்பாதித்து அதன் மூலம் விமானியாக படிக்க சேர்த்த பணத்தை ஒருவர் கடனாக வேண்டி ஏமாற்றிவிட்டார், ஏமாளியானேன் உலகத்தை படித்தேன், அந்த நேரம் கவலை வேண்டாமென பெரும் பணத்தை முதலிட்டு புது வலு தந்தது என் குடும்பமே.

அப்போது என் தந்தையார் சிரித்தார், பணத்தை பறி கொடுப்பது நல்ல பயிற்சியாக அமையும் என்று கூறி, பணத்தின் அருமையைப் புரியும் வாழ்க்கைப் பாPட்சை முடிந்துவிட்டதென தெரிவித்து பணத்தை வழங்கினார்கள், இருந்தது எல்லாவற்றையும் வழங்கினார்கள் சலிக்கவில்லை.

பிள்ளைகளால் வெறுமனே படித்துத்து திருந்த முடியாது இதுபோன்ற அனுபவங்களை பட்டுத்திருந்த வேண்டும், மறுபுறம் அதை வைத்து குத்திப்பேசி கேலி செய்யாது தோல்விகளை வாழ்க்கை படிக்கட்டாக்கி உயர்வடைய குடும்பம் தோள் கொடுத்ததே எனது வெற்றியின் இரகசியங்களில் முக்கியமானது.

கேள்வி: நீங்கள் பதவியேற்றபோது இருந்த பூரிப்பான தருணம் பற்றி?

பதில்: நான் விமானியாக படிக்கச் சென்றபோது பட்ட வலிகள் கொஞ்சநஞ்சமல்ல விமானியாக படித்தாலும் வேலை வாய்ப்பு கிடையாது என்று மறைவாக கேலி செய்தவர்கள் ஏராளம்பேர் உண்டு. எத்தனையோ விமானிகள் எல்லாம் வேலை நீக்கம் செய்யப்படும்போது இது தேவைதானா.. கல்யாணம் கட்டுவது எப்போ, பிள்ளை பெறுவது எப்போ.. இப்படியான சமுதாய நெருக்கடி ஒரு புறம்..

ஒரு பெண்ணை செலவழித்து விமானியாக படிப்பிப்பது ஒரு செலவு, அதுபோக பின் திருமணத்திற்கும் சீதணம் கொடுக்க வேண்டுமே இரட்டிப்பு செலவல்லவா.. இவளுடைய பெற்றோருக்கு மூளை இல்லையா.. பெண்களின் கல்வியில் முதலிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்று சிலர் பொருளாதாரம் பேசினார்கள்.

விமானியாக படித்தாலும் வேலை வாய்ப்பை பெறுவது கடினம் காரணம் இது பலருடைய உயிர்களுடன் சம்மந்தப்பட்ட காரியம் ஆகவேதான் கடுமையான தளராத உறுதி கொண்ட மனம் இருக்கிறது என்பதை நாம் விமான நிறுவனங்களுக்கு நிறுவ வேண்டும்.

அதற்காக பல மாதங்கள் விமானங்களை துப்பரவு செய்வது, வண்டி மூலம் விமானங்களை இழுத்துவந்து நிறுத்துவது என்று இரவு பகலாக பாடுபட்டேன் கடுமையான குளிரில் விமான நிலையங்களில் போராடினேன்.

அப்படியிருக்க வேலையில் இருந்து நீக்கிப்பார்த்தார்கள், எதற்குமே தளராத உறுதி இருந்த காரணத்தினால் இறுதியில் விமானியாக வேலை கிடைத்தது, எனக்கு முன்னால் ஆறு பேர் இருக்க அவர்களை எல்லாம் முந்தி என்னை தேர்வு செய்தார்கள்.

வேலை கிடைத்ததும் பட்ட துயரெல்லாம் காற்றாக பறந்து போய்விட்டது. முட்டையில் இருந்து வெளி வந்த ஒரு பறவை முதல் முதலாக சுதந்திரமாக ஆகாயத்தில் பறப்பதைப்போல பறந்தேன், ஆகாயத்தில் இருந்து பறவை போல மகிழ்வுடன் பூமியைப் பார்த்து ஆனந்தமடைந்தேன்.

என்னைப்பற்றிய செய்தியை உலகின் பெரிய ஊடகங்கள் எல்லாமே வெளியிட்டு உலகப்புகழை தந்தபோது நான் ஒரு பறவைபோல மகிழ்ந்து நின்றேன்.

கேள்வி: வானவெளியில் பறந்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: ஒரு பறவைக்கு எப்படி உணர்விருக்குமென்பதை சொல்ல பறவையிடம் மொழியில்லை ஆனால் அது சொல்லவருவதை ஒரு விமானியின் ஸ்தானத்தில் இருக்கும்போது எளிதாக புரிந்து கொள்ளலாம்.

கேள்வி: உங்களைப்போன்ற இளையோருக்கு யாது கூறவிரும்புகின்றீர்கள்?

பதில்: உங்களுக்குள் ஓர் ஒலி கேட்கும் அதை உற்றுக் கேளுங்கள், அது நீங்கள் செல்ல வேண்டிய இலட்சியப்பாதை எதுவென்பதை சொல்லிக்கொண்டே இருக்கும். அதன்வழி சென்றால் உலகம் உங்களைத்திரும்பிப் பார்க்கும். இல்லாவிட்டால் நீங்கள்தான் இந்த உலகத்தைப் பார்த்து மலைத்து நிற்க வேண்டும்.

ஒரு வாழ்க்கை ஒரு முறைதான், இந்த மைதானத்தில் இன்னொரு முறை நமக்கு ஆடச் சந்தர்ப்பம் கிடைக்காது ஆகவே மற்றவர்களுக்காக வாழ்ந்து வாழ்க்கையை வீணடிக்காது இதோ இக்கணமே செயற்படுங்கள், பிறந்தேன் வாழ்ந்தேன், செத்தேன் என்று வாழ்வை அவமதிக்கக்கூடாது, ஒவ்வொரு இளைஞனும், யுவதியும் கிடைத்த வாழ்விற்கு எவ்வளவு பெருமை கொடுக்க முடியுமோ அவ்வளவு பெருமை கொடுக்க போராட வேண்டும்.

அனைவருக்கும் தமிழ் வணக்கம்.

நேர்காணல் : கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம்

0 comments :

Post a Comment

 
Toggle Footer