Wednesday, December 28, 2016

புத்தாண்டு தினத்தில் பங்களாதேஷில் நடத்தப் படவிருந்த பாரிய தீவிரவாதத் தாக்குதல் ஒன்று முறியடிக்கப் பட்டிருப்பதாகவும் இதைத் திட்டமிட்ட JMB என்ற தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கிகளுடனும் 30 Kg எடையுடைய வெடிகுண்டுகளுடனும் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் பங்களாதேஷ் போலிசார் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

டாக்கா மெட்ரோபாலிட்டன் போலிஸான DMP இன் அறிக்கைப் படி டாக்காவின் மிர்பூர் பகுதியிலுள்ள டருஸ் சலாமில் நடத்தப் பட்ட ரெயிடில் ஜமாத் உல் முஜஹிடீன் பங்களாதேஷ் (JMB)என்ற போராளிக் குழுவைச் சேர்ந்த 5 பேர் நேற்றிரவு கைது செய்யப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப் பட்டவர்கள் மீது நடத்தப் பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போதே அவர்கள் டிசம்பர் 31 ஆம் திகதி நள்ளிரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்த கூற்றின் பிரகாரம் கைது செய்யப் பட்ட ஐவரும் வடமேற்கே உள்ள ராஜ்ஷாஹி மாவட்டத்தைச் சேர்ந்த 3 தலைவர்களின் உத்தரவுப் படி பணியாற்ற முனைந்தார்கள் எனத் தெரிய வருகின்றது. ISIS உடன் தொடர்புடைய Neo-JMB என்ற குழு ஜூலை 1 ஆம் திகதி தலைநகர் டாக்காவில் உள்ள கஃபே ஒன்றின் மீது தொடுத்த தாக்குதலில் 17 வெளிநாட்டினர் உட்பட 22 பேர் கொல்லப் பட்டிருந்தனர். பலியானவர்களில் ஒரு இந்தியப் பெண்ணும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer