Tuesday, December 27, 2016

செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு 10.30 மணி.... போயஸ் கார்டனில் இருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றது.

அந்த ஆம்புலன்ஸில் இருந்தது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாதான்.! காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு 75 நாட்கள் கழித்து, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். ஜெயலலிதா அப்போலோவில் இருந்த 75 நாட்களில் அவருக்கு என்ன நடந்தது? என்பது குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது.

சென்னை அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற இந்த 75 நாட்களில், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிலும், உலக அளவிலும் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறின.

அவை எல்லாம், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்குத் தெரியுமா? தெரியாதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.. அநேகமாக ஜெயலலிதா அறிந்திருக்க வாய்ப்பில்லாத சில சம்பவங்கள் இங்கே...

ஹிலாரி தோல்வி

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டனுக்கும் ஜெயலலிதாவுக்கும் நல்ல நட்பு இருந்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை வந்த ஹிலரி கிளிண்டன், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

அதிபர் தேர்தலுக்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலாரி அறிவிக்கப்பட்டவுடன், "அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரிக்கு எனது வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இரண்டு அரசியல் கட்சிகளில் நீங்கள்தான் முதல் பெண் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்ற வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள்" என்று தெரிவித்து, ஹிலாரிக்கு ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

ஆனால், ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்-யிடம் தோல்வியடைந்தார். டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.

ஹிலாரி தோல்வியடைந்த செய்தி, மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பணத்தடை

இந்தியாவில் 86 சதவிகிதம் அளவுக்கு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார்.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக, இந்த நடவடிக்கையை எடுத்ததாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பால், வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் காத்திருந்து, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.

மக்களின் துயரத்திற்கு அளவே இல்லை. மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்னையானாலும் மத்திய அரசை துணிச்சலாக எதிர்க்கும் ஜெயலலிதா, மோடியில் நோட்டு செல்லாது அறிவிப்பின்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வானாலும் மத்திய அரசுக்கு எதிராக குற்றம்சாட்டும் ஜெயலலிதாவிற்கு. 'டீமானிட்டைசேஷன்' அறிவிப்பு பற்றி தெரிந்திருக்காது.

முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு ஆதரவு

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உணவுப் பாதுகாப்புச் சட்டம், மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நாடு தழுவிய அளவிலான 'நீட்' தேர்வு முறை, சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி சட்டம் ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, மத்திய அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

மேலும், வரும் கல்வியாண்டில் இருந்து நீட் போட்டித் தேர்வும் கொண்டுவரப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தவை. தற்போது தமிழக அரசு ஆதரவு அளித்தது ஏன்? என்பது விடை தெரியாத கேள்வி.

ஆக, நீட், ஜி.எஸ்.டி, உணவுப் பாதுகாப்பு சட்டம் அமல் ஆகியவை ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

சசிகலா- ராசாத்தி சந்திப்பு

ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, தி.மு.க தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள், அப்போலோ சென்று சசிகலாவைச் சந்தித்து ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.

எதிரும், புதிருமாக இருந்த கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை மிகக் கடுமையாக விமர்சித்தவர் ஜெயலலிதா.

ஆனால், அப்படிப்பட்ட கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாளின் அப்போலோ வருகையை ஜெயலலிதா அறிந்திருந்தால் கடும் அதிர்ச்சியடைந்திருப்பார்.

ஃபிடல் காஸ்ட்ரோ மரணம்

பொதுவுடைமைப் புரட்சியாளரும், கியூபாவின் அதிபர் மற்றும் பிரதமராகவும் இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி தனது 90-வது வயதில் காலமானார்.

உலகம் போற்றும் போராளியான காஸ்ட்ரோவின் மரணத்திற்கு, இந்தியாவில் பல்வேறு கட்சிகள் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

ஆனால், அ.இ.அ.தி.மு.க சார்பில், எந்தவொரு இரங்கலும் வெளியாகவில்லை. ஃபிடல் காஸ்ட்ரோவின் மரணம் பற்றி ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer