Monday, November 28, 2016

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பொதுமக்கள் தமது உள்ளக் குமுறல்களை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி வந்து கொட்டித் தீர்த்தனர். அஞ்சலி செலுத்தி அழுது புரண்டனர்.

இறந்தவர்களை நினைவுகூர்வதும், அவர்களுக்காக பெரும் குரலெடுத்து அழுது தீர்ப்பதும் மனிதனின் அடிப்படை உரிமை. அதனை, தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் தடுத்து வந்திருக்கின்றன. அல்லது, பாதுகாப்புக் கெடுபிடிகளை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்திருந்தன. அந்த நிலையில், நேற்றைய மாவீரர் தின நிகழ்வுகள் மக்களின் பெரும் பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, இறுதி மோதல்களுக்குப் பின்னராக கடந்த காலத்தில் மாவீரர்களை மாத்திரமல்ல, போரில் கொல்லப்பட்ட பொதுமக்களைக் கூட நினைவுகூர்வதற்கு தடை விதிக்கப்பட்டது. புலனாய்வாளர்களும், இராணுவமும் வீடுகள் வரை வந்து அச்சுறுத்தல் விடுத்துச் சென்ற வரலாறு உண்டு.

அந்த நிலையில், தமிழர் தாயகப் பகுதிகளில் ஒருவிதமான மன அழுத்தம் நீடித்து வந்தது.  அது, போருக்குப் பின்னரான சமூகம் ஒன்று எதிர்கொள்வதுதான். ஆனால், அழுவதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் கூட தடை விதிப்பது என்பது பெருமளவான மக்களை நடைப்பிணங்களாக மாற்றிவிட்டிருந்தது. அந்த நிலையில், மாவீரர்களை நினைவு கூருவதற்காக நேற்று விடுவிக்கப்பட்ட வெளி முக்கியமானது. அதனை, இலங்கை அரசும் அதன் இயந்திரமும் வேண்டாவெறுப்பாக அனுமதித்திருக்கின்றது. அதற்கு, சர்வதேச அழுத்தமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகளும் காரணமாக இருக்கலாம். ஆனால், வேண்டாவெறுப்பாக அனுமதித்தாலும், அது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லாடிப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நீண்ட நாட்களின் பின்னர் பெரும் ஆசுவாசத்தோடு உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கள்.

போருக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வடக்கு- கிழக்கில் குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் எவ்வளவு அச்சுறுத்தல்களை வழங்கியது என்பதை அறிவோம். அந்த அழுத்தங்களை விலக்கி சிறிய இடைவெளியொன்றின் தேவையை தமிழ் மக்கள் பெருவாரியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாய்ப்பினூடு பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த முடிவு, மனதிலுள்ள அழுகையை ஓங்கி ஒப்பாரியாக கொட்டுவதற்கானதும் ஆனது. அதனை நிராகரித்தலும், அதனை அடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டிருப்பதும் எம் மக்களை மனநோயோடும், அடுத்த கட்டங்கள் குறித்து சிந்திப்பதையும் தடுத்து ஒரேயிடத்தில் தங்கியிருக்க வைக்கும். அது, காயங்களை குணப்படுத்தி புதிய பயணத்தை ஆரம்பிப்பதைத் தடுத்து, சீழ் பிடித்த காயங்களோடு அவஸ்தைப்படுவதற்கு ஒப்பானது.

தமிழ் மக்கள் எப்போதுமே தமது விடுதலைப் போராட்டம் குறித்து பெரும் நம்பிக்கையோடும், அர்ப்பணிப்போடும் இருக்கின்றார்கள். அதுவும், தாயகத்திலிருக்கின்ற மக்களின் ஓர்மம் அபரிமிதமானது. அதனை சரியான வழியில் கொண்டு செல்வதுதான் இப்போதுள்ள தேவை. அதை, மாவீரர் தின நிகழ்வுகள் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.

இலங்கை அரசும், அதன் பாதுகாப்புத் தரப்பும் கண்கொத்திப் பாம்புகளாக பார்த்துக் கொண்டிருக்க அலை அலையாக மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள், பொது இடங்கள், பல்கலைக்கழகங்கள், கோயில்கள், தேவாலயங்கள் என்று ஒருங்கிணைந்தார்கள். அது, அரசியல் வேற்றுமைகளுக்கு அப்பாலானது. அதனை, தனிப்பட்ட அரசியலுக்காக யார் பாவித்தாலும் அது அற்பமானது. அது, பிணங்களை விற்றுப் பிழைப்பதற்கு ஒப்பானது.

ஆனால், இந்த இடத்தில் ஒரு விடயத்தினைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. மாவீரர்களை பகிரங்கமாக நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்பட்ட விடயம் தென்னிலங்கையிலுள்ள இனவாதத் தரப்புக்களுக்கும், தமிழ் மக்களுக்குள் உள்ள சில குழுக்களுக்கும் பெரும் எரிச்சலை ஊட்டியிருக்கின்றது. தென்னிலங்கையின் இனவாதக் குழுக்களுக்கு புலிகள் மீதான வெறும்பும், தமிழ் மக்களினை அடக்கி ஆளவேண்டும் என்கிற மனநிலையின் சார்பில் அது எழுந்திருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களுக்குள் இருக்கின்ற சிறு குழுக்களுக்கு தனிப்பட்ட அரசியல் மற்றும் தனிமனித விரோதங்கள் சார்ந்து எழுந்திருக்கின்றது.

ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் உண்டு என்பது யதார்த்தம். எமது உரிமைகளையும் அரசியல் சதிராட்டத்தில் வென்றே அடைய வேண்டியிருக்கின்றது. அதன்போக்கில், மாவீரர் தினத்தினை ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கு கிடைத்துள்ள வெளியும் நாம் போராடிப் பெற்றது. அதன்பின்னால், வேறு தரப்புக்களும் பல்வேறு அரசியல் இருக்கலாம். அதனையெல்லாம் தாண்டி நாம் பெற்றது, எமது உறவுகளை நினைவு கூருவதற்கான கூட்டுரிமை. அது, எமது அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனை யாருமே நிராகரிக்க முடியாது.

4tamilmedia.com

0 comments :

Post a Comment

 
Toggle Footer