Monday, November 28, 2016

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

27-11-2016

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ் மக்களே! இன்று மாவீரர் நாள். பூமிப் பந்தில் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை முரசறைந்து வெளிப்படுத்தியவர்களைப் பூசிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கப் போர்க் கோலம் கொண்டு, களமாடிய காவிய நாயகர்களை நினைவு கொள்ளும் நாள். வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கவென படையெடுத்து வந்த படைகளை எதிர்த்துக் களமாடி காவியமான மறவர்களை நினைவுகொள்ளும் நாள்.

உயரொழுக்கமும் கட்டுப்பாடும் நிரம்பிய எமது விடுதலை இயக்கத்தின் மரபைப் பேணி இறுதி வரை உத்தமர்களாய் வாழ்ந்து உயிர் நீத்த எம்மண்ணின் மைந்தர்களை நினைவு கூர்ந்து சபதமெடுக்கும் நாள்.

இந்தக் கண்மணிகளை எமது நாட்டுக்கு ஈந்தளித்த பெற்றோரும் அவர்தம் குடும்பத்தினரும் என்றும் எம் தேச வரலாற்றில் மதிப்புக்குரியவர்களே. தொடர்ச்சியான அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத் தமிழினம் தனது மீட்சிக்காகப் பல்வேறு வழிகளிலும் முயன்று இறுதியில் வந்தடைந்த வழி முறைதான் ஆயுதப் போராட்டம். வரலாறுதான் எமது இனத்தின் கைகளில் ஆயுதத்தைத் திணித்தது. உலக விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் நிகழ்ந்தது போலவே எமது இனத்தின் விடுதலைப் போராட்டச் சுழற்சியிலும் இந்தப் போராட்டப் பொறிமுறை ஒரு வீரியமிக்க பாத்திரத்தை எடுத்துக் கொண்டது. உலகில் ஆயுதப் போராட்டத்தை வரித்துக் கொண்ட அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் இருக்கும் நியாயத்தன்மை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உண்டு.

ஆனால், மாறி வந்த உலக ஒழுங்கும் பூகோள அரசியலில் இலங்கைத் தீவின் முக்கியத்துவமும் எமது விடுதலை இயக்கத்தின் தனித்துவமான பேரெழுச்சியும் உலக அரங்கில் வல்லரசுகளின் பார்வையில் எம்மை விரோதிகளாக்கின. எமது விடுதலை இயக்கத்தின் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டதுடன் அம்முத்திரை வழியாகவே எமது மக்களின் அரசியல் வேட்கையும் முடக்கப்பட்டது. தமது நலன்களுக்காக எமது விடுதலைப் போராட்டத்தையும் எமது மக்களையும் பயன்படுத்தத் தொடங்கியது உலகம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது இனம் வல்லரசுகளின் பகடைக் காயாக மாறிப் பந்தாடப்பட்டது.

இந்தப் பகடையாட்டத்தைப் பயன்படுத்தி மானுட வரலாற்றின் மிகப் பிந்திய மனித அவலத்தை ஏற்படுத்தி எமது மக்களையும் விடுதலை இயக்கத்தையும் சிதைத்தது சிங்களப் பேரினவாத அரசு.

அன்பார்ந்த தமிழ் மக்களே! போர் முடிவடைந்த பின்னரும் கூட இந்த ஏழரை ஆண்டு காலத்தில் உலக வல்லரசுகளின் சதுரங்க ஆட்டத்தில் எமது மக்களும் அவர்களின் அரசியல் வேட்கையுமே பலியிடப்பட்டு வருவதையும் பார்க்கின்றோம். தமக்குப் பிடிக்காத ஆட்சியை அடிபணிய வைக்கவும் எமது மக்களின் அவலங்களே கருவிகளாயின. பின்னர் ஆட்சியை மாற்றவும் எமது மக்களின் வாக்குகளே பயன்படுத்தப்பட்டன. இப்போதும் ஆட்சிமாற்றத்தைத் தக்கவைக்க எமது மக்களின் அரசியல் அபிலாசைகளே அடகு வைக்கப்படுகின்றன.

எப்போதும் எமது மக்களை வைத்தே தமது நலன் சார்ந்த அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் உலக வல்லரசுகளின் மனச் சாட்சியை உலுக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் எம்மிடமுண்டு. தற்போது ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழர்களுக்கு நீதி அளிக்கப்பட்டு விட்டது என்ற ஒரு மாயை உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ளது. சிறு சலுகைகள் சிலவற்றை அளித்துவிட்டு தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படுவதான ஒரு தோற்றப்பாடு திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்றது. முன்னெப்போதுமில்லாத அளவுக்கு புத்தர் சிலைகளும் விகாரைகளும் அமைக்கப்டுகின்றன. ஒரு வழியாக சொற்ப நிலங்கள் தமிழர்களுக்கு விடுவிக்கப்பட இன்னொரு வழியால் ஆக்கிரமிப்பு நிகழ்த்தப்படுகின்றது. தமிழர்களின் மீன்பிடி, விவசாய வளங்கள் திட்டமிட்டு சுவீகரிக்கப்படுவதுடன் தொழில் முறைசார் வலிந்த குடியேற்றங்கள் தமிழரின் பொருண்மிய பலத்தைச் சிதைக்கின்றன.

கடந்த ஆட்சியின் போது கொஞ்ச நஞ்சமிருந்த பன்னாட்டு அழுத்தமும் கண்காணிப்பும் இன்று அகன்று வருவதால் எமது மக்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பற்ற தன்மையை அதிகம் எதிர்கொள்கிறார்கள். போதைப் பொருள் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு தமிழர் தாயகமெங்கும் சமூகச் சீர்கேடுகளுக்கு வழி கோலப்படுகின்றது. பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. வாள்வெட்டுக் குழுக்களும் பல குற்றச் செயல்களும் அரச படைகளின் ஆதரவோடு முடுக்கிவிடப்படுகின்றன. எமது மக்களின் ஜனநாயக வழி எழுச்சியை அடக்க இக்குற்றச் செயல்களைக் காரணம் காட்டி அடக்கு முறைகள் ஏவப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர் கொலையும் அதைத் தொடர்ந்து கைதுகளும் இவற்றையே சுட்டுகின்றன.

இன நல்லிணக்கம் குறித்துச் சிந்திப்பதற்கான எந்த வித சூழ்நிலையும் எம் மக்கள் மத்தியில் சிங்கள ஆளும் தரப்பால் விட்டு வைக்கப்படவில்லை. இவ்வாறாக தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய கூறாக எமது மொழியையும் பண்பாட்டையும் சிதைத்து வருகின்றது சிங்கள அரசு. மேலும், தமிழர்களை அடக்குவதற்கென்றே உருவாக்கப்பட்ட சட்டங்களின் மூலம் பல்லாண்டுகளாக வதைபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையும் ஆயிரக்கணக்கில் காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் விசாரணைகளும் இன்னமும் அப்படியேதான் இழுத்தடிக்கப்படுகின்றன. போர் முடிவடைந்த பின்னரும் கூட தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவல்ல மிகச் சாதாரண விடயங்களைக் கூட ஆளும் தரப்பு செய்யத் தயாராக இல்லை.

இன்னொரு புறம் எமது மக்களின் அரசியல் எழுச்சியும் கோரிக்கைகளும் சிங்களப் பேரினவாதிகளை கோபம் கொள்ள வைக்கின்றன. மிகச் சாதாரண கோரிக்கைகளைக் கூடச் செவிமடுக்க அவர்கள் தயாரில்லை. யுத்த வெற்றி மமதையிலிருந்து இன்னமும் சிங்களப் பேரினவாதம் விடுபடவில்லையென்பதும், தமிழர்களை அடக்கியாளவே அவர்கள் தொடர்ந்து முயல்கிறார்கள் என்பதும் வெளிப்படையாகத் தெரிய வருகின்றது. பன்னாட்டுச் சமூகத்தின் பாராமுகமும் இதற்கு ஒரு காரணம் என்பது கசப்பான உண்மையாகும். ஒரு புறத்தே இலங்கைத் தீவில் நடைபெற்றது போர்க் குற்றமென்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றமென்றும் இன அழிப்பு என்றும் கூறிக் கொள்ளும் உலக அரசியல் தலைவர்களும் பொது அமைப்பினரும் இருக்கிறார்கள்.

இலங்கைத் தீவில் இப்போதும் அரச அடக்கு முறையும் சிறுபான்மையினர் மீதான புறக்கணிப்பும் அதிகரித்த படைப் பிரசன்னமும் இருப்பதாக அறிக்கைகள் விடப்படுகின்றன. இரகசிய வதை முகாம்கள் தொடர்பான செய்திகளும் அறிக்கைகளும் வெளிவந்த வண்ணமுள்ளன. ஆனால் மறுபுறத்தே பன்னாட்டு அரசுகளின் தூதுவர்களும் அரசியல்வாதிகளும் இலங்கைத் தீவுக்குப் பயணம் மேற்கொண்டு விட்டு அளிக்கும் கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பனவாகவும் பாராட்டுபவையாகவும் உள்ளன. மகிந்த இராஜபக்சவை வழிக்குக் கொண்டு வரவென ஒப்பீட்டளவில் கடுமையான தொனியில் தொடங்கிய ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரின் முன் மொழிவுகள் ஒவ்வோராண்டும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு இன்று உப்புச்சப்பற்ற தீர்மானங்களாகவே கிடப்பிலுள்ளன.

இறுதித் தீர்மானத்தில் கூறப்பட்டு சிறி லங்கா அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய நீதி விசாரணையைக் கூட உறுதிப்படுத்த பன்னாட்டுச் சமூகம் தவறி விட்டது.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பன்னாட்டு விசாரணையை வேண்டி நின்ற எமது மக்களுக்கு இன்று வரை அது எட்டாக் கனியாகவே இருக்கின்றது. கால இழுத்தடிப்பின் ஊடாக சிறிலங்கா அரசு நழுவிச் செல்வதற்குப் பன்னாட்டுச் சமூகத்தின் இந்த இரட்டை அணுகுமுறை துணை போய்க் கொண்டிருக்கிறது என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகின்றோம். இதன் தொடர்ச்சியாக யாப்புச் சீர்திருத்தம் என்ற ஏமாற்று நகர்வை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க, அதையே இனப் பிரச்சினைக்கான தீர்வுப் புள்ளியாக எம் மக்கள் மீது திணிக்கும் நயவஞ்சகத் திட்டத்துக்குத் துணை போய்க் கொண்டிருக்கிறது பன்னாட்டுச் சமூகம்.

வரலாறு தான் எமக்கு வழி காட்டி. இலங்கைத் தீவின் இனப் பிரச்சினையை அதன் மூலத்திலிருந்து வரலாறு வழியாகப் புரிந்து கொண்டாலன்றி நிரந்தரத் தீர்வை ஒரு போதும் எட்டிவிட முடியாது. விசாரணை ஆணைக் குழுக்களும் மேம்போக்கான தீர்வுத் திட்டங்களும் சட்டச் சீர்திருத்தங்களும் யாப்பு மாற்றங்களும் ஒரு போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்கவில்லை. மாறாகத் தமிழர்களின் உரிமைகளைப் படிப்படியாகப் பறித்துக் கொண்டே வந்துள்ளன என்பதே இலங்கைத் தீவின் வரலாறாக அமைந்துள்ளது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை இருந்த கருத்துச் சுதந்திரத்தை அதற்குப் பின் வந்த யாப்புத் திருத்தம் தமிழர்களிடமிருந்து பறித்தது.

அது போல், இனி மேல் தமிழர்கள் தமது உயர்ந்த பட்சக் கோரிக்கைகளை வெளிப்படுத்த முடியாதபடி செய்யும் பொறியாகவே இப்போது பேசப்படும் யாப்புச் சீர்திருத்தமும் அமையக் கூடும் என்ற புரிதலோடு நாம் விழிப்பாக இருக்க வேண்டும். இந்நிலையில் வளைந்து நெளிந்து சலுகைகளைப் பெற்றுக் கொள்வதை உரிமைப் போராட்டமாகப் பறைசாற்றி பாசாங்கு செய்து கொள்வோர் இதற்கு முன்பும் நிகழ்ந்த ஏமாற்றங்களை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ள முயல வேண்டும். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகத்தான் கடந்த காலத்தில் இணக்க அரசியல் முயற்சிகள் நடந்து முடிந்தன. எமது மக்களின் அரசியல் வேட்கையைத் தெளிவாக முன் வைத்து அரசியல் செய்யத் தவறி ஒரு மூடு மந்திரமாக இதை அணுகுவது பொருத்தமற்றது.

உண்மையில், நிகழ்கால அரசப் பொறி முறைக்குள் நின்று கொண்டு எமது இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதென்பதே முட்டாள் தனமான செயலாகும். எமது விடுதலைப் போராட்டமானது அரச இயந்திரத்தை, அதன் இயங்கு முறையை, அதன் நிர்வாகமுறையை எதிர்த்து எழுந்ததே ஆகும். நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஒரு பொறி முறைக்குள்ளிருந்து எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியுமா? மொத்த உறுப்பினர்களில் கிட்டத்தட்ட ஐந்து வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் நாம் அந்த நாடாளுமன்ற முறைமைக்குள் எமது தீர்வைத் தேடுவது எவ்வாறு?

அதுவும் மகாவம்சப் புனைவுகளால் பல நூறு ஆண்டுகள் நஞ்சூட்டப்பட்டு வளர்த்து வரப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத சிந்தாந்தத்தை அவர்களின் வட்டத்துள் நின்று கொண்டு எதிர் கொண்டு வெல்வது எவ்வாறு? இந்த வரலாற்று ரீதியான ஐயங்களையும் நம்பிக்கையீனங்களையும் தாண்டித் தமிழினம் வேண்டி நிற்கின்ற நியாயமான உரிமைகளை இந்த அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தினூடாகக் கொண்டு வர முடியுமா என்ற தமிழ் மக்களின் ஐயம் முற்றிலும் நியாயமானதென்பதை உலகம் உணர வேண்டும்.

எனவே, தற்போதிருக்கும் அரச இயந்திரத்தின் நிர்வாகப் பொறி முறைக்குள் நின்று கொண்டு ஒரு போதும் எமது உரிமைகளைப் பெற முடியாது. மாறாக பன்னாட்டுத் தளத்தில் எமது உரிமைக் குரலை தொடர்ந்தும் ஓங்கி ஒலிப்பதன் ஊடாகவும் எமது அரசியல் அபிலாசைகளை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி உரிமைக் குரல் எழுப்புவதன் மூலமாகவுமே எமது உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும்.

உலகம் ஒரு புதிய பூகோள அரசியற் சூழலுக்குள் பிரவேசிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேற்றமும் அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலும் இனி வரும் காலத்தில் உலக, பிராந்திய வல்லரசுகளின் பொருளாதார அணுகுமுறையிலும் போர் நடவடிக்கைகள், பிறநாட்டு அரசியல் தலையீடுகள் என்பவற்றிலும் கணிசமான மாற்றங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்த வல்லன. இம்மாற்றங்களோடு ஐரோப்பாவுக்கான அதிகரித்த ஏதிலிகள் வருகையும் முக்கியமான செல்வாக்கைச் செலுத்தும் காரணிகளாக அமையும். இம்மாற்றங்களைப் புரிந்து கொண்டு அவதானமாகச் செயற்பட வேண்டிய தேவை ஈழத் தமிழினத்துக்குண்டு.

அத்தோடு அண்மைக் காலங்களில் எமது அமைப்புத் தொடர்பிலும் எமது விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் உலக நாடுகள் சிலவற்றின் நீதித்துறையில் ஏற்பட்ட சாதகமான எண்ணமாற்றங்களையும் நாம் மிகுந்த கரிசனையோடு கவனத்திற் கொள்கிறோம். இம்மாற்றங்களுக்காக அயராது உழைத்தவர்களையும் அமைப்புக்களையும் நாம் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவிற் கொள்கிறோம்.

இதே வேளை, புதிதாக அமையப் போகும் அமெரிக்க அதிபர் நிர்வாகம், கடந்த காலத்தில் அமெரிக்கா எமது விடுதலைப் போராட்டம் தொடர்பில் கைக் கொண்ட பாதகமான நிலைப்பாடுகளை மீள் பரிசீலனை செய்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். எமது விடுதலை இயக்கம் சுதந்திரமாகவும் ஜனநாயக வழியிலும் எமது மக்களுக்கான விடுதலை நோக்கி நகர்வதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற எமது அமைப்பின் மீதான தடையையும் பயங்கரவாத முத்திரையையும் அகற்றுவதற்கு இந்தப் புதிய அதிபர் நிர்வாகம் முயல வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த ஏழரை ஆண்டுகளாக எமது இயக்கம் அமைதி காத்து வந்துள்ளது. எமது மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை உலக ஒழுங்கிற்கேற்ப ஜனநாயக வழியில் முன்னெடுப்பதற்கான பாதை திறக்குமென்ற நம்பிக்கையோடு நாம் காத்திருக்கின்றோம். எந்தவோர் அரச நிர்வாகத்துக்கும் குந்தகம் விளைவிக்காமல் நாம் இதுவரை அமைதி காத்தே வந்திருக்கின்றோம். எமது அமைப்புக்கான வழி திறக்கும் என்றும் உலகம் எம்மைச் சுதந்திரமாக இயங்கவிடும் என்றும் நம்பிக்கையோடு நாம் காத்திருக்கின்றோம். இன்று நாம் சுதந்திரமாக ஜனநாயக வழியில் இயங்குவதற்குரிய முட்டுக் கட்டையாக எமது அமைப்பு மீதான தடை காணப்படுகின்றது. பயங்கரவாதத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் வேறு பிரித்து அறியக் கூடிய சூழலை நோக்கி உலக ஒழுங்கு திரும்பி வருகின்ற இந்நேரத்தில் எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி எமது மக்களுக்கான பணியைச் செய்ய விடுமாறு உலகை நோக்கி வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குறிப்பாக, பிராந்திய வல்லரசான இந்தியா எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையைப் புரிந்து கொண்டு தனக்கான நம்பிக்கையான நட்புச் சக்தி ஈழத் தமிழினம்தான் என்ற வரலாற்று உண்மையையும் ஏற்றுக் கொண்டு நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். அரச பயங்கரவாதத்தை எதிர் கொண்டு, சொந்த மண்ணில் இன்னும் வேரூன்றி நின்று வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தாயக உறவுகளே எமது தேசத்தின் ஆணி வேர்கள். நீண்ட காலப் போரின் வடுக்களைச் சுமந்து கொண்டு, இன்றும் அரச அடக்கு முறையை எதிர்கொண்ட வண்ணம் வாழ்ந்து வரும் எமது மக்களே எம்தேசக் காவலர்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் எமக்கான உரிமைக் குரலை துணிந்து வெளிப்படுத்தும் இவர்களே எமது போராட்டத்தின் அச்சாணிகள். நீண்ட காலப் போர், தொடந்துவந்த இடப் பெயர்வுகள், உயிரிழப்புகள், பொருளிழப்புகள் என்று அல்லலுறும் எமது தேசத்து உறவுகளின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் கடமையாகும்.

இதே வேளை, சிங்கள ஆளும் வர்க்கமும் அதற்குப் பக்கபலமாக நிற்கும் பேரினவாதச் சக்திகளும் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்பதையும் நியாயமான தீர்வுக்கு இணங்கப் போவதில்லை என்பதையும் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யச் சிங்கள ஆட்சியாளர்கள் தயாரில்லை என்பதையும் சலிப்பின்றித் தொடர்ந்து உலகத்துக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் எமது மக்கள் அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் நாம் கவனத்திற் கொள்கின்றோம். எமது உரிமைப் போராட்டத்திற்கு உலகத்தின் ஆதரவைத் திரட்ட வேண்டிய பாரிய பொறுப்பு புலம் பெயர்ந்த தேசங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அமைப்புக்களையும் குறிப்பாக இளையோர்களையுமே சாரும்.

நீண்டு வந்த எமது உரிமைப் போராட்டத்தில் உங்களின் ஆதரவும் பங்களிப்பும் அபரிதமானது. ஆயுத வழியிலான எமது போராட்டக் குழந்தையின் தொடக்க காலத் தொட்டிலாக விளங்கியவர்களும் எமது உரிமைப் போராட்டத்தை உலக அரங்கில் ஒலிக்கச் செய்ய முதல் முரசை அறைந்தவர்களும் நீங்களே. இன்றும் உங்கள் கரிசனையையும் ஆதரவையும் கண்டு ஆறுதலடைகின்றோம். கட்சி பேதங்கள் கடந்து இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எமது போராட்டத்தின் நியாயத்தைப் பரப்பவும் ஆதரவைத் திரட்டவும் மென்மேலும் நீங்கள் முயல வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எமக்கான உரிமைப் போராட்டத்தை நாம்தான் நிகழ்த்த வேண்டும். எமது இனத்தின் அரசியல் வேட்கையைத் தொடர்ந்தும் உலக முற்றத்தில் முரசறைந்து எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம். எமது போராட்டம் நீதியானது. நியாயமானது. இதற்காக ஆயிரமாயிரம் மாவீரர்களும் மக்களும் உயிரைக் கொடுத்துள்ளார்கள். எமது மாவீரர்களினதும் மக்களினதும் தியாகங்கள் என்றும் வீண் போகாது.

என்றோ ஒரு நாள் காலச் சூழல் எமக்கிசைவாக மாறி வரும் பொழுதில் எமது மாவீரர்களின் கனவை நனவாக்குவோம். அதுவரை தமது உள்ளம், உயிர், உடல், உடைமை அனைத்தையும் ஈந்து எமது மக்களுக்காகத் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் இலட்சிய உறுதி எம்மை வழி நடத்தும் சத்திய வேள்வியில் தம்மை அர்ப்பணித்தவர்களின் நினைவுகளைச் சுமந்து நாம் தொடர்ந்தும் போராடுவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer