Friday, November 25, 2016

யுத்தத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த கடந்தகால அரசாங்கத்தில்  தடைவிதிக்கப்பட்டமையே, இன்று  ஆவேசத்துடன் தமிழர்கள்   மாவீரர் தினத்தை  நினைவுகூர்வதற்கு  காரணமாக அமைந்துள்ளதாக   வட மாகாணசபை உறுப்பினர்  பசுபதிப்பிள்ளை சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின்போது உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளுக்குச் சென்று, அவர்களுக்கு   அஞ்சலி செலுத்த ஆட்சியளர்கள்  அனுமதி அளிக்காததால் மாவீரர் குடும்பங்கள் உள ரீதியாக   பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்ளைச் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

சிரமதானப் பணிகளில் அப்பகுதி மக்கள் மற்றும் வடமாகாண கல்வியமைச்ச குருகுலராசா ஆகியோரும் பங்கேற்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய பகுதிகளில் மொத்தமாக   மூன்று மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்ற போதும், அதன் பின்னரும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் வசம் காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, கனகபுரம், முழங்காவில் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில்  மக்கள் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழ் மக்களினால்  அஞ்சலி செலுத்தப்படுகின்றது.

இந்த நிலையில், போரின்போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூறுவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், யுத்ததின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளதாக நேற்று முன்தினம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதே கருத்தினை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.




0 comments :

Post a Comment

 
Toggle Footer