Tuesday, November 29, 2016

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர்களின் ஒருவர் தான் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும், கருணா.

பல்வேறு போர்க்களத்திலும் வெற்றி வாகை சூடி பிரபாகரனின் பாராட்டுக்களைப் பெற்றிருந்தவர் கருணா.

கருணாவின் துணிச்சலான செயற்பாடுகள் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருந்தது.

எவ்வாறான களத்தாக்குதலாக இருந்தாலும், அதனை சமாளிக்கும் வல்லமை கொண்ட புலி உறுப்பினர்களில் கருணாவும் ஒருவர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, வடக்கின் முக்கிய மோதல்களிலும் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால், கிழக்கின் வரை படமும், வடக்கின் வரை படமும் போர்த்தளங்களும் கருணாவுக்கு நன்கு பரிச்சயம்.

போரியல் ரீதியில் பிரபாகரனிடத்தில் நற்பெயரைப் பெற்றுக் கொண்டதன் பயனாக, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, நோர்வேயில் நடைபெற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சென்ற குழுவினரில் கருணா இடம்பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தான் அவர் தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதாகவும், தனித்து இயங்குவதாகவும் அறிவித்திருந்ததோடு, விடுதலைப் புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியிருந்தார்.

தொடர்ந்து மகிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவியும் பெற்றுக் கொண்டார்.

இவரோடு இணைந்து பிரிந்து வந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் என்பவரும் முன்னாள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தின் போது கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்தார்.

இந்நிலையில் இணைந்து பிரிந்து வந்தவர்களுக்கிடையில் அதிகாரப் போட்டியும், பதவியாசையும் பிளவை ஏற்படுத்தியிருந்தாலும், இருவரும் மகிந்த விசுவாசியாக இருந்தனர்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கிழக்கு, வடக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளின் நிலைகளை தேடி அழிக்கவும், அவர்களின் நிலைகளின் வரைபடத்தை கண்காணிக்கவும் கருணா அரசாங்கத்திற்கு உதவினார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்ததோடு,

அவரின் படைப்பிரில் இருந்த சில போராளிகளும் இறுதிக் கட்டப் போரில் அரசாங்கத்திற்கு சார்பாக அரச படையில் இணைந்து புலிகளை அழிக்க உதவினர்.

அதாவது நடைபெற்ற இனவழிப்பில் கருணாவிற்கும் பாரிய பங்களிப்பு உண்டு என்கிறார்கள் விமர்சகர்கள்.

இதனால் பல்வேறு சலுகைகள் கடந்த ஆட்சியில் இவருக்கு கிடைத்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று அறிவித்த இலங்கை அரசாங்கம், அவரின் உடலை அடையாளம் காண்பதற்காக கருணா வையும், தயா மாஸ்டரையும் தான் அழைத்துச் சென்றது.

எனினும் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தோடு கருணாவும், பிள்ளையானும் அனுபவித்த சுகபோக வாழ்வு முடிவிற்கு வந்தது.

சரணடைந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்றுத் திரும்பிய வேளை,

அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்த கருணா, சுகபோக வாழ்க்கையில் மயங்கியிருந்தார். அதிகாரங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடான வகையில் அரச சொத்துக்களை பயன்படுத்திக் கொண்டதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதேவேளை இன்றைய தினம் அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பிலான முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸ் நிதிமோசடி பிரிவினால் விநாயகமூர்த்தி முரளிதரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கிஹான் பலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை பிறப்பித்திருக்கிறார்.

முன்னதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு விசேட ஜுரிகள் சபை முன்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணையிலும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக கொலை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் மகிந்த ராஜபக்சவின் சகோதர்கள், மகன்கள் என தொடர்ந்து விசாரணைகள், கைதுகள் என்று நடந்து வந்திருந்த நிலையில், இன்று கருணாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் இராணுவ ஆட்சிக்கு நாடு செல்லலாம் என நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகவே கருத்து வெளியிடப்பட்ருந்ததோடு, மத, இனக்கலவரங்கள் வெடிக்கலாம் என எச்சரிக்கைகளும் அவ்வப்போது விடுக்கப்பட்டு வந்திருந்தன.

இந்நிலையில் இன்றைய தினம் கருணாவின் கைது நடவடிக்கையும், அவரின் விசாரணைகளும் இடம்பெற்றுவருகின்றன.

நாட்டில் அசாதாரண சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு கருணாவும் உடந்தையாக மாறலாம், மகிந்த தரப்புக்கு உதவி செய்யலாம் என்று கருத்துக்கள் வெளிவந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer