Wednesday, November 23, 2016

சுமார் 52 வருட காலமாக கொலம்பியாவில் நிலவி வரும் குழப்பநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் நாளை வியாழக்கிழமை அந்நாட்டின் ஃபார்க் (FARK) கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப் படும் என கொலம்பிய அதிபர் ஜுவான் மானுவேல் சந்தோஷ் செவ்வாய்க் கிழமை அறிவித்துள்ளார்.

நாளை கையெழுத்தாகி காங்கிரஸில் தாக்கல் செய்யப் படவுள்ள இந்த அமைதி ஒப்பந்தம் கடந்த முறை பொது மக்களால் நிராகரிக்கப் பட்டதால் இம்முறை பொது மக்களின் அபிப்பிராயத்துக்கு விடப்படாது எனத் தெரிய வருகின்றது. கடந்த மாதம் இவ்வருடத்துக்கான அமைதிக்கான நோபல் பரிசைத் தனது சமாதான நடவடிக்கைகள் காரணமாக சுவீகரித்திருந்த கொலம்பிய அதிபர் ஜுவான் மானுவேல் சந்தோஷ் மற்றும் ஃபார்க் கிளர்ச்சிக் குழுத் தலைவர் றொட்ரிகோ லொண்டொனோ ஆகியோருக்கிடையே பொகோட்டாவில் நாளை இந்த புதிய அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது.

220 000 இற்கும் அதிகமான உயிர்களைப் பலி கொண்டு மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயரக் காரணமான கொலம்பிய குழப்பநிலை தீர்க்கப் படுவதற்காகக் கடந்த 4 வருடங்களாக கியூபாவின் ஹவானா நகரில் கொலம்பிய அரசு மற்றும் ஃபார்க் கிளர்ச்சியாளர்களிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்த போதும் எதிர்பார்த்த அமைதி கிட்டவில்லை. 2 மாதங்களுக்கு முன்பு உலகத் தலைவர்கள் மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் முன்னிலையில் இவ்விரு தரப்பினருக்கும் இடையே கைச்சாத்தான ஒப்பந்தமும் பொது மக்கள் வாக்கெடுப்பில் நிராகரிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய அமைதி ஒப்பந்தமும் எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்தும் என்று சொல்ல முடியாது எனவும் ஆனால் தவற விடப்படும் சந்தர்ப்பங்கள் நாட்டைப் பிளவு படுத்தும் அளவு அபாயத்துக்கு இட்டுச் செல்லலாம் எனவும் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer