Sunday, November 27, 2016

சிறிலங்கா அரசிற்கும் – விடுதலைப் பேரியக்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களினடிப்படையில் இந்திய வல்லாதிக்கப் படைகள் 1990 பங்குனியுடன் இலங்கையிலிருந்து முற்றாக வெளியேறிய நிலையில் வட-கிழக்குப் பிராந்தியத்தியம் முழுவதும் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வர ஸ்ரீலங்காப் படைகள் ஆங்காங்கே முகாம்களுக்குள் முடங்கிக் கொண்டனர்.

வரிப் புலிச் சீருடை தரித்த புலிகளின் ஆண், பெண் போராளிகள் அணியணியாக நகரங்களில் வந்திறங்குகின்றனர். மக்கள் ஆழ்ந்த வியப்புடன் இக் காட்சிகளை திரண்டு சென்று பார்க்கின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் உள்ளிட்ட பெரும் பிரதேசங்களில் புலிகள் நிர்வாக நடவடிக்கைகளை வீச்சுடன் தொடங்குகின்றனர். இளைஞர்களும் யுவதிகளும் அணியணியாக இயக்கத்துடன் இணைந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் பிரேமதாஸ-புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைய 1990 ஆனி மாதம் 10ம் நாள் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகின்றது. அந் நேரம் வடபிரதேசத்தின் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்க படையினர் தங்கியிருந்த சில முகாம்களை புலிகள் சுற்றிவளைத்து தமது இறுக்கமான முற்றுகைக்குள் கொண்டுவருகின்றனர். யாழ் கோட்டை, ஆனையிறவு, பலாலி, மற்றும் மாங்குளம் ஆகிய முகாம்கள் இவ்வாறு முற்றுகை வளையத்துள் வந்தன. இவ் இராணுவ முகாம்களிற்கான விநியோகங்களை ஹெலிகொப்டர்கள் மூலமாகவே இராணுவம் மேற்கொண்டுவந்தது. இவற்றுள் யாழ் கோட்டை இராணுவ முகாமை கடுமையான சமர்களின் பின்னர் 1990 புரட்டாதி மாதம் 26ம் திகதி தியாகச் செம்மல் திலீபனின் மூன்றாவது நினைவு நாளன்று புலிகள் முற்றாக மீட்கப்படுகின்றது.

இந் நிலையில் வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தை போன்று அமைந்திருந்த மாங்குளம் இராணுவ முகாமை தகர்த்து அழித்து அப்பிரதேசத்தை விடுவிப்பதற்கு புலிகள் திட்டமிட்டனர். அப்போதைய வன்னிப் பிராந்தியத் தளபதி பால்ராஜ், உதவித் தளபதி தீபன் ஆகியோருடன் வன்னியின் மாவட்டத் தலைவர்கள், குழுத்தலைவர்களும் சேர்ந்து மாங்குளம் முகாமின் அமைப்பு, அதன் பலம்-பலவீனம் ஆகிய இராணுவ விடயங்களை நுணுகி ஆராய்ந்து தாக்குதலுக்கான திட்டங்களை வரைந்தனர்.

21.11.1990 மாவீர்ர் வாரத்தின் தொடக்க நாள். மண்ணுக்காக மரணித்த வீரமறவர்களை தாய்மண் நினைவு கூர்ந்து கொண்டிருக்க புலிகளின் பீரங்கிப் படையணிகள் சுறுசுறுப்பாக தமது வேலையை ஆரம்பித்தன. முகாமையும் அதன் பிரதான காவலரண்களையும் குறிபார்க்கும் வண்ணம் தமது தயாரிப்பான பசிலன்-2000 ஏவுகணைகளை நிலைநிறுத்திக் கொண்டனர். முகாம் தகர்ப்பிற்கான தாக்குதலணிகளும், பக்கபலமாக செயற்படுவதற்கான உதவித் தாக்குதல் அணிளும், இவர்களிற்கான ஆயுத-வெடிமருந்துகளை வழங்க விநியோக அணிகளும், தாக்குதலில் காயமடையும் போராளிகளை அப்புறப்படுத்த மீட்புக் குழுக்களும், அவர்களுக்கு சிகிச்சை வழங்கவென 18-22 வயதேயான சீருடை தரித்த இளம் மருத்துவ அணியினரும் பிரிக்கப்பட்ட அவரவர்களுக்குரிய கடமைகளும், கட்டளைகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

கார்த்திகை 22ம் நாள் கதிரவன் மறையத் தொடங்க அணிகளும் தத்தமது கடமை இடங்களுக்கு நகரத்தொடங்குகின்றன. மீண்டும் தாம் சந்திக்க முடியாமல் போகலாம் என்பதை நன்கறிந்து கொண்டவர்களாய் வேறு வேறு தாக்குதலணிகளில் இருந்த நண்பர்கள் பரஸ்பரம் விடைபெற்றுக் கொள்கின்றனர். சரியாக இரவு 7.00 மணிக்கு முகாமைச் சுற்றியிருந்த அனைத்து பீரங்கிகளும் இயங்க வைக்கப்படுகின்றன. 23ம் நாள் விடிகாலைப் பொழுதில் பெரும்பாலான காவலரண்களும் மினிமுகாம்களும் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வருகின்றன. பின்வாங்குதலும் முன்நகர்தலுமாக பகல்பொழுது அமைந்திருக்க மாலை 4.00 மணியளவில் பிரதான முகாம் தவிர்ந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு 57 போராளிகளின் இழப்புடன் முதலாவது தாக்குதல் திட்டம் நிறைவிற்கு வருகின்றது. இவ்வாறு வீரச்சாவடைந்தவர்களில் கப்டன் ஜெகன், கப்டன் வதனன், மேஜர் திலீப் ஆகியோர் இணைபிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர். பல தாக்குதல்களில் ஒன்றாகப் பணியாற்றியிருந்திருக்கின்றார்கள். புகைப்படக் கருவியை வைத்திருந்த சக போராளியை பார்த்து ஜெகன் கூறினானாம் ”மச்சான்! எங்கள் மூன்று பேரையும் ஒரு படம் எடுத்து விடு. நாளைக்கு சுவரில தான் நிப்பம்” என. 23.11.1990 முகாமைச் சுற்றியிருந்த அனைத்து பீரங்கிகளையும் முன்னோக்கி நகர்த்திய அணிகள் பிரதான முகாமை குறிவைத்து சரியாக இரவு 8.00 மணிக்கு சகல பீரங்கிகளையும் இயக்கின.

பேரொசைகளுடன் முகாம் பகுதி அதிர்கின்றது. நள்ளிரவு தாண்டி 1.00 மணிக்கு பீரங்கிகளின் அனைத்து இயக்கமும் நிறுத்தப்பட யாழ்-வவுனியா பிரதான வீதியிலே வெடிமருந்து வண்டியுடன் தயாராக கரும்புலி லெப்.கேணல் போர்க். முகாமைச் சுற்றியிருந்த அனைத்து அணிகளுக்கும் வெடிமருந்து வண்டி செல்லப் போகும் செய்தி இரகசிய பாசை வழியாக அறிவிக்கப்படுகின்றது. போராளிகள் பாதுகாப்பாக நிலையெடுத்துக் கொள்கின்றனர். துணைத் தளபதி தீபனிடம் இறுதி விடைபெற்றுக் கொண்ட இரண்டாவது தரைக்கரும்புலி தன் இலக்கு நோக்கி நகர்ந்து சென்று பிரதான முகாமின் மையப்பகுதியில் வெடிக்கின்றான். மாங்குளம் பிரதேசம் முழுவதுமே அதிர போர்க் காற்றோடு கலந்தான். புகைமண்டலமாக காட்சியளித்த முகாம் பகுதியை நோக்கி நிலையெடுத்திருந்த புலியணிகள் விரைந்து சென்று சல்லடை போட்டு முகாமை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றன. இத் தாக்குதல்களில் பங்கு கொண்ட போராளிகளில் மொத்தமாக 108 பேர் வீரச்சாவடைந்தனர்.

இவ்வாறாக விடுதலையை அவாவி நின்ற எம் இளைஞர்களின் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் வார்த்தைகளில் அளவிட முடியாதவை. சொற்களில் வர்ணிக்க முடியாதவை. இவர்கள் விடுதலை வேண்டி பட்ட துன்பங்கள், இழப்புகள், வேதனைகள் எண்ணிறைந்தவை. என்றோ ஒரு நாள் இவர்களின் உயிர்விலைக்கான அறுவடை பெறப்படும். அப்போது வருடத்தின் இந் நாட்களில் இன்றைய இளைஞர்களிற்கான வழிகாட்டிகளாக இவர்கள் ஒளிவீசிப் பிரகாசிப்பர்.

பாலசிங்கம் செவ்வேள்

0 comments :

Post a Comment

 
Toggle Footer