Tuesday, November 29, 2016

இன்று மாவீரர் தினம் சிறப்புக்கட்டுரை..

இன்று தமிழர் வாழ்வில் மகத்தான திருநாள், மாவீரர்களைப் போற்றும் பொன்னாள்.

இந்த உலகத்தில் உள்ள எல்லா இனங்களுமே தாம் ஓர் புகழ் பெற்ற இனம் என்ற இறுமாப்புடன் எழுந்து நிற்க அந்த இனங்களில் தோன்றிய மாவீரர்களையே ஆதாரமாகக் கொள்கின்றன.

இரண்டாவது உலக மகாயுத்தத்தை நினைவு கூரும் டீ டே என்பது மேலை நாடுகளால் வருடந்தோறும் மிகப்பெரிய நினைவாக அனுட்டிக்கப்படுகிறது, தமது சுதந்திரத்தின் வெற்றியின் பெருமையை அதனால் நிலைநாட்டுகின்றார்கள், இது உலக மக்களுக்கான சர்வதேச உரிமையாகும்.

இதை தடுக்கவோ சட்டத்தால் தடைபோடவோ யாருக்கும் உரிமை கிடையாது.. அதை தடுப்பதாக இருந்தால் மாவீரர்களின் கதைகளால் நிறைந்த உலக வரலாற்று ஏடுகளை தீயிட்டுத்தான் கொழுத்த வேண்டும்.

உலக வரலாறு எழுதப்பட்டதே மாவீரர்களின் கதைகளால்தான், ஆகவேதான் உலக இனங்களைப் போல தானும் சுதந்திரமாக எழுந்து நிற்க ஆசை கொண்ட தமிழினமும் மாவீரர்களை போற்றி மகிழும் உன்னதத்திருநாள் இந்நாளாகும்.

இதற்கு மூன்று உலக சம்பவங்களை முதலில் உதாரணத்திற்கு எடுப்போம்..

இரண்டாம் உலகயுத்த காலத்தில் அன்றைய சோவியத் ரஸ்யா சர்வாதிகாரி ஹிட்லருக்கு எதிராக நடத்திய லெனின்கிராட் போர் ஒரு முக்கிய உதாரணமாகும், இந்தப் போர் 1000 தினங்கள் நடைபெற்றது சுற்றி வளைப்பை முறியடிக்க பத்து இலட்சம் ரஸ்யர்கள் தங்கள் இன்னுயிர்களைக் கொடுத்து மாவீரர்கள் ஆனார்கள்.

அன்று திரும்பிய போர்தான் உலகயுத்தத்தில் ஜேர்மனியை தோற்கடித்து சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து உலகத்தை காப்பாற்றியதாக வரலாறு கூறுகிறது.

அந்த மாவீரர்களால் எழுதப்பட்டதுதான் 2ம் உலக யுத்தத்திற்கு பிற்பட்ட இன்றைய அழகான உலகம்.

அந்த வெற்றியின் அடையாளமாக அமைக்கப்பட்டதுதான் ரஸ்யாவின் வொல்கா நகரத்தின் முடிவில் உள்ள மதர்லேன்ட் சிலையாகும், 80 மீட்டர் உயரமான இந்தச் சிலைதான் ரஸ்ய சுதந்திரத்தின் பெருமையாகும்.

இந்தப் பெருமையே இன்றும் அவர்களை உலக வல்லராசாக எண்ண வைக்கிறது, அண்டங்கடந்து சாதனை புரிய வைக்கிறது.

ஓர் இனம் சாதனை இனமாக எழுந்து நிற்க அந்த இனத்திற்கு முதுகெலும்பாக நிற்பதே அந்த இனத்தின் மாவீரர் வரலாறுதான்.

ரஸ்யர்களுக்கு மட்டுமா இல்லை அமெரிக்காவைப்பாருங்கள் நியூயோர்க் நகரத்தில் உள்ள லிபர்டி தீவில் 152 அடி உயரத்தில் எழுந்து நிற்கும் சுதந்திரசிலை அமெரிக்கர்களின் போராட்ட வெற்றியின் அடிப்படையாகும்.

பார்த்தோல்டி என்ற பிரான்சிய சிற்பியால் வடிக்கப்பட்ட 225 தொன் எடையுள்ள சுதந்திரச்சிலை 1886 அக்டோபர் 28ம் திகதி அன்றைய அமெரிக்க ஜனாதிபதி குறோவர் கிளீவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன் அடியில் 1776 யூலை 4 என்று எழுதப்பட்டுள்ளது, அதுதான் அமெரிக்கா சுதந்திரம் பெற்ற தினமாகும்

அதுபோல தமிழ் மக்களும் தமது சுதந்திரத்திற்காக அமைக்கும் ஈடு இணையற்ற திருநாளே மாவீரர் நாளாகும்.

இவ்வளவுதானா..?

உலகில் சுதந்திரத்திற்கு பெயர் பெற்ற நாடு பிரான்ஸ் அந்த நாட்டின் தலைநகரிலே எழுந்து நிற்கிறதே ஐபிள் கோபுரம் அதுவே பிரான்சியப் புரட்சியின் இரும்பு நினைவுச்சின்னமாகும்.

1789 நடைபெற்ற பிரான்சிய புரட்சியின் நூற்றாண்டு விழா 1889 ம் ஆண்டு நடத்தப்பட்டபோது முழுக்க முழுக்க இரும்புக் கேடர்கள், எஃகு கம்பிகள், தண்டவாளங்கள் ஆகியன கொண்டு 984 அடி உயரத்தில் 1672 படிக்கட்டுக்களுடன், 9700 தொன் எடையில் 70 இலட்சம் இரும்புத்துளைகளுடன் 10.416 பேர் ஒரே நேரத்தில் ஏறி நிற்கக் கூடிய பலத்துடன் அலக்சாண்டர் குஸ்தாவ் ஐபிள் என்பவரால் அமைக்கப்பட்டதே இந்த சுதந்திர சின்னம்.

மேகங்களை மேய்க்கும் இடைச்சாதி பெண் என்று இந்த சுதந்திரக் கோபுரத்தை வர்ணித்தான் ஒரு புகழ் பெற்ற பிரான்சிய கவிஞன், பிரான்சிய மக்கள் இன்றும் ஓர் உலக வல்லரசாக வீட்டோ அதிகாரத்துடன் நிமிர்ந்து நிற்க அன்றாடம் வலு கொடுப்பது இந்தச் சிலைதான்.

ரய்யாவில் உள்ள மதர்லாண்ட் சிலை , அமெரிக்க சுதந்திர சிலை, பிரான்சிய ஐபிள் கோபுரம் இவைகளால் நாம் உணர்வது என்ன..?

மாவீரர்களை போற்றி மகிழ்வதே ஓர் இனத்தின் வெற்றிக்கும் எழுச்சிக்கும் அடிப்படையாக அமையும் என்பதுதான்.

இதுபோன்ற உன்னதத்தையும் சுதந்திரத்தின் மீதான பற்றையும் வளர்ப்பதற்குக் கொண்டாடப்படுவதுதான் மாவீரர்நாளாகும்.

ஆகவேதான் இதை சுதந்திர வானில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நாகரிகமுள்ள மனிதர்களால் முன்னெடுக்கப்படும் அரியதோர் முயற்சியாக தமிழர்கள் போற்றுகிறார்கள்.

இந்த நூற்றாண்டை எழுதிய உலக வரலாற்றிலே சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த அதிகமக்கள் வாழ்ந்த இனமாக புகழ் பெற்று நிற்பது ஈழத்தமிழினம் என்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

அந்த மாவீரர்களின் சுதந்திர வேட்கையின் சின்னமாக திகழ்வதுதான் கார்த்திகை 27 வரும் மாவீரர்நாளாகும்.

சங்கர் என்ற முதலாவது மாவீரனுடன் சகர்ப்பம் எடுத்து விளையாடிய மகத்தான போர்க்களத்தின் மீது இதயத்தால் விளக்கேற்றும் இமாலயத்திருநாள் இன்று.

கார்த்திகை மலர்கள் கண்களை சிமிட்டி அழைக்கும் காவியத்திருநாள் இன்று..

ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி ஓடும் உலக வீரன் போல.. மாவீரரை அஞ்சலிக்க ஒவ்வொரு தமிழனும் தீபத்துடன் நிமிர்கிறான்..

அவன் முகத்தில் விழும் அந்தத் தீபத்தின் ஒளியில்..

மாவீரன் சிரிக்கிறான்..

மணியோசை கேட்கிறது
மலர்கிறது மாவீரர் நாள்..

கல்லறையில் விளக்கேற்றி பணிகிறோம்.. உங்கள் கனவுகளை நனவாக்கி தருகிறோம்..

வாழ்க மாவீரர் புகழ்..

அலைகள்

0 comments :

Post a Comment

 
Toggle Footer