Sunday, October 30, 2016

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சுப் பதவியொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

முப்படைகளினதும் பிரதம தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி இத்தகையதொரு பதவியை உருவாக்குவது தொடர்பாக ஆட்சிப் பொறுப்பையேற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆலோசனை நடத்த தொடங்கியிருக்கிறார்.

பாதுகாப்புத் துறைக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டு வருகின்ற இடைவெளிதான் இதற்குக் காரணம்.

இராணுவப் புரட்சி ஒன்றுக்கு மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச தரப்பு முயற்சிகளை முன்னெடுத்தாலும் ஆச்சரியமில்லை என்று அண்மையில் தான் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையில் விரிசலை தோற்றுவிக்கின்ற வகையில் மகிந்த ராஜபக்ச அணியினர் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் மற்றும் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மாத்திரம் இத்தகையதொரு கருத்தை அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிடுவதற்கு காரணமாக இருந்திருக்காது.

இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் அதிகரித்து வருகின்ற இடைவெளி தொடர்பாக தோன்றியிருக்கும் அச்சமும் கூட இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.

இத்தகையதொரு இடைவெளியின் விளைவினால் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்திருக்கலாம்.

சீருடை அணிந்த தளபதிகள் விசாரணைக்காக அழைக்கப்படுவது வேதனையளிப்பதாக ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் படைத் தளபதிகளுக்குஆதரவாக ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார்.

அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் படையினர் குற்றம் இழைத்திருந்தால் அவர்களைப் பிணையில் விடுவித்து விட்டு வழக்கை நடத்துமாறு தாம் அதிகாரிகளிடம் கோரியதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளியானதன் பின்னர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரான லெப்.கேர்ணல் சம்மி குமாரரத்ன உள்ளிட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இராணுவத் தரப்புடனான இடைவெளி அதிகரித்து வருவதை உணர்ந்து வெளியிட்ட கருத்துகளாகவே ஜனாதிபதியின் இலங்கை மன்றக் கல்லூரி உரை அமைந்திருக்கின்றது.

இத்தகையதொரு பின்னணியில் தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை தனியாக கவனிப்பதற்கு ஒரு அமைச்சரை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

அரசியலமைப்பு சட்டத்தின் படி பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி இருந்தாலும் அவரால் பாதுகாப்பு அமைச்சரின் பணிகளை முழுமையாக ஆற்ற முடியாது.

பாதுகாப்பு அமைச்சு என்பது முப்படைகளையும் சேர்ந்த மூன்று லட்சத்துக்கும் அதிகமான படையினர் மற்றும் பணியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய கட்டமைப்பு. அதைவிட பெரிய பொறுப்பாகவும், உன்னிப்பாகவும் கவனிக்கப்பட வேண்டிய அமைச்சும் கூட.

பாதுகாப்புக் கட்டமைப்புகளை கட்டுக்கோப்புடன் வழிநடத்தல், ஒருங்கிணைத்தல், அவற்றின் பிரச்சினைகளைக் கையாளுதல் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான புலனாய்வு தகவல்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தல் என்று விடயங்களை அதிக பொறுப்புடன் கையாள வேண்டிய அமைச்சு இது.

அதிக பணிச்சுமைகளைக் கொண்ட ஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சருக்குரிய கடமைகளை முழுமையாகவும் திருப்தியாகவும் மேற்கொள்ள முடியாது. இது கடந்த கால அனுபவமும் கூட.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்திய முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடக்கம் மகிந்த ராஜபக்ச வரையிலான எல்லா ஜனாதிபதிகளுமே பாதுகாப்பு அமைச்சின் மீது தாம் அதிகாரம் செலுத்தியதில்லை.

அதற்குப் பொறுப்பாக ஒரு பிரதியமைச்சரை அல்லது இராஜாங்க அமைச்சரை அல்லது பாதுகாப்புச் செயலரை நியமித்தே இந்த விடயத்தைக் கையாண்டிருக்கின்றனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் அதிகாரபூர்வமற்ற பாதுகாப்பு அமைச்ராக இருந்தவர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க.

1962ம் ஆண்டு இராணுவப் புரட்சிக்கான முய்றசியொன்று மேற்கொள்ளப்பட்ட போது அதனை ஆரம்பத்திலேயே முறியடிப்பதில் அப்போது 31 வயதேயான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தான் முக்கிய பங்காற்றியிருந்தார்.

ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் பதில் பாதுகாப்பு மற்றும் தேசிய பந்தோபஸ்து அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலிதான் ஒட்டுமொத்த பாதுகாப்பு விடயங்களையும் கையாண்டார்.

ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையில் அவர் நேரடியாகச் சென்று வழி நடத்தியிருந்தார்.

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த போது ஜெனரல் ரஞ்சன் விஜேரத்ன சக்தி வாய்ந்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக விளங்கியிருந்தார்.

ரஞ்சன் விஜேரத்ன 1991ல் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு விவகாரங்களை வலுவாகக் கவனிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

ஆர். பிரேமதாச 1993ம் ஆண்டு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த டி.பி.விஜேதுங்கவின் காலத்தில் பாதுகாப்பு விவகாரங்களை ஒருங்கிணைத்த பாதுகாப்பு பிரதியமைச்சர் ஜோன் அமரதுங்கவும் கவர்ச்சியான ஒருவராக விளங்கவில்லை.

எனினும் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியானதும் தனது மாமனாரான கேர்ணல் அனுருத்த ரத்வத்தயை பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான அவரே போர் தொடர்பான எல்லா முடிவுகளையும் எடுத்தார். போர் முனைகளுக்குச் சென்று படையினரை உற்சாகமூட்டினார். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதற்காக அவருக்கு ஜெனரல் பதவியுயர்வும் சந்திரிகாவினால் அளிக்கப்பட்டது.

சந்திரிகாவுக்குப் பிறகு பதவியேற்ற மகிந்த ராஜபக்சவுக்கு யார் மீதும் நம்பிக்கையில்லை. அதனால் அமெரிக்காவிலிருந்த தனது சகோதரர் லெப்.கேர்ணல் கோத்தபாய ராஜபக்சவை வரவழைத்து அவருக்கு பாதுகாப்புச் செயலர் பதவியை வழங்கினார்.

இதற்கு முன்னர் அரசியல்வாதிகள் அல்லது இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் அரசியல்வாதிகளாக மாறியவர்கள் தான் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்டிருந்தனர்.

ஆனால் அமைச்சர் பதவியில் இல்லாமல் பாதுகாப்பு செயலர் பதவியை வைத்துக் கொண்டே பாதுகாப்பு அமைச்சை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க முடியும் என்பதை நிரூபித்தவர் கோத்தபாத ராஜபக்ச.

இவர் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் சக்தி வாய்ந்தவராக 2005 - 2014 காலகட்டத்தில் கணிக்கப்பட்டிருந்தார். பாதுகாப்புச் செயலர் பதவி என்பது ஒரு அரச அதிகாரிக்குள்ள பதவி. அத்தகைய பதவியிருந்த கோத்தபாய ராஜபக்ச அமைச்சர்களை விட அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினார்.

இவ்வாறாக பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் தான் கையாண்டு வந்திருப்பது கடந்த கால வரலாறு. அத்தகையவர்கள் திறமை உள்ளவர்களாக மாத்திரமன்றி ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.

ஜே.ஆர். ஜெயவர்த்தன தனது அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியை நம்பினார். பிரேமதாசாவும் அவ்வாறே ஜெனரல் ரஞ்சன் விஜயரத்னவை நம்பினார். ஆனால் சந்திரிகாவும், மகிந்த ராஜபக்சவும் தமது அமைச்சரவைச் சகாக்களை நம்பத் தயாராக இருக்கவில்லை. மாமனாரையும் தம்பியையுமே இந்தப் பொறுப்பில் வைத்திருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சை தனி ஆளாகக் கையாள்வதில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஐதேக வின் இளம் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெறாமகனுமான ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்ட போது அவர் பாதுகாப்பு அமைச்சை முழுமையான அதிகாரத்துடன் கையாள்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பதவியேற்ற சில வாரங்களிலேயே வடக்கு படைவிலக்கம் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்த, அவரது சிறகுகள் வெட்டப்பட்டன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவான் விஜேவர்தன பெயரளவில் தான் பாதுகாப்பு அமைச்சுக்கு வந்து போகிறாரே தவிர அதிகாரம் அவரிடத்தில் இல்லை.

படையினர் நலன்புரி சார்ந்த அதிகாரசபைகளை மாத்திரமே அவரால் கையாள முடிகிறது. ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களையும் கையாளும் திறன் அவருக்கு இல்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது.

அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலராக இருந்த பஸ்நாயக்கவும் சரி, இப்போதைய பாதுகாப்புச் செயலரான கருணாசேன ஹெட்டிஆராச்சியும் சரி, சிவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதற்காக நியமிக்கப்பட்டவர்களே தவிர, பாதுகாப்புத்துறை சார் நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லை. இவர்களால் பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்த முடியாதிருக்கிறது.

இப்படியான சூழலிலும், பாதுகாப்புத் தரப்புக்குள் குழப்பத்தையும் விரிசலையும் ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரம் பெற்றுள்ள ஒரு கட்டத்திலும் தான் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஒரு பதவியை உருவாக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது அதில் பங்களித்தவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இத்தகையதொரு பதவியைத் தான் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அதனால் விலகிச் சென்று தனித்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவர் மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்த போதிலும் அவருக்கு பாதுகாப்புடன் தொடர்புடைய அமைச்சு பதவி வழங்கப்படவில்லை.

இப்போது பாதுகாப்பு அமைச்சை முழுமையாக கையாளும் ஒரு அமைச்சுப் பதவியை உருவாக்க ஜனாதிபதி முடிவு செய்தால் அந்தப் பதவிக்கு யாரை நியமிப்பார் என்ற கேள்வி எழுகிறது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொருத்தமானவராக இருந்தாலும் அவரை அரசாங்கம் முழுமையாக நம்புமா? இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுபவரிடம் ஆளுமையை விட அதிகளவாக நம்பகத்தன்மை, குறிப்பாக ஜனாதிபதி மீதான விசுவாசத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அவ்வாறான ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பாரா அல்லது ஐதேக வைச் சேர்ந்தவராக இருப்பாரா? என்ற சிக்கலும் உள்ளது.

பாதுகாப்புத் தரப்பைக் கையாளும் பதவியொன்றை உருவாக்கினால் மாத்திரம் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. அந்தப் பதவி யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பதைப் பொறுத்தே அது தீருமா அல்லது நீளுமா என்பது தெரியவரும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer