Monday, October 31, 2016

“தமிழ் திரையுலகிற்கு, ரொம்ப நாள் கழிச்சி நடிக்கக்கூடிய நடிகை கிடைச்சிருக்காங்க”னு என்னை பற்றி பாரதிராஜா சார் சொன்ன வார்த்தைகள் தான், இன்றைக்கும் நடிகையா இருக்குதுக்கு ஊக்கமா இருக்க இருக்க காரணம். விருதுகளையும் தாண்டிய அந்த பரிசை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது” காத்தோட தூத்தல் போல பூரிக்கிறார் இனியா. இவரின் நடிப்பில் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் “திரைக்கு வராத கதை”. கொஞ்ச நேரம் மொக்க போட்டதில்..

ஸ்ருதி, இனியாவா மாறிய கதையைச் சொல்லுங்க?

வாகைசூடவா படத்தில் நடிச்சிட்டு இருக்கும்போது, சற்குணம் சார் தான் உங்க பெயரை மாத்தணும்னு சொல்லிட்டு இருந்தாரு. டைட்டில்ல கூட பெயரைப் போடாம நிறுத்திவைச்சிருந்தாங்க. ஒரு நாள் சற்குணம் சார் போன் பண்ணி, இனியா இருக்காங்களானு கேட்டாரு. எனக்கு எதுவுமே புரியலை. அதுக்கப்புறம் ஷூட்டிங் ஏரியாவிலும் எல்லோருமே இனியானு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. காலப்போக்கில் இனியாவே, என்னுடைய பெயரா மாறிடுச்சி. என்னுடைய ஒரிஜினல் ஸ்ருதியும் அழகாதான் இருக்கு. ஆனால் ஸ்ருதி ராமன், ஸ்ருதிநாயர், ஸ்ருதிஹாசன்னு நிறைய ஸ்ருதி சினிமாவில் இருக்காங்க. நான் தனியா தெரியணும்னா பெயர் மாற்றம் முக்கியமா இருந்தது. இனியானு பெயர் மாறினதும் தான், நிறைய நல்ல விஷயங்களும் நடந்தது. நிச்சயமாவே, பெயர்மாற்றம் நிறைய நம்பிக்கையையும், நிறைய உறுதியையும் தரும்.

யார் இந்த இனியா? எப்படி சினிமாக்குள்ள வந்தாங்க?

எட்டு வயசுலயே, “கூட்டுலேக்கி”னு ஓர் குறும்படத்துல நடிச்சதுக்கு நேஷனல் விருது வாங்குனேன். தொடர்ந்து ஸ்டேஜ் டிராமா நடிக்க ஆரம்பிச்சேன். அப்படியே க்ளாசிக் டான்ஸ் கத்துக்கிட்டு, வெஸ்டன், டாங்கோ, ப்ரேக் டான்ஸ்னு நிறைய கத்துக்கவும் ஆரம்பிச்சேன். லக்கிலி எட்டு படிக்கும் போதே, மாடலிங்.  “அழகிய ராணி”னு பட்டம் வாங்குனேன்.  ஒன்பது படிக்கும்போதே, கன்னடா, பாலிவுட்லருந்து நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. படிப்புக்காக நடிப்பை தள்ளி வச்சிட்டேன். வாகைசூடவா நடிக்கும்போது +2 படிச்சிட்டு இருந்தேன் பாஸ்.  மம்முட்டியோடு, என் அப்பா நிறைய படங்கள் நடிச்சிருக்காங்க. தம்பி சிங்கர், அக்கா தாரா  15 சீரியல்களுக்கு மேல மலையாளத்துல நடிச்சிருக்காங்க. இவர்களின் என்கரேஜ் தான், இப்போ சினிமாவில் இன்னும் இருக்கேன். 

“திரைக்கு வராத கதை” என்ன ஸ்பெஷல் படத்தில்?

மலையாளத்துல நிறைய வெற்றிப் படங்களை இயக்கிய துளசிதாஸ் இயக்கியிருக்கும், க்ரைம் த்ரில்லர் படம் தான் திரைக்கு வராத கதை. முழுக்க முழுக்க பெண்கள் நடிச்சிருக்குற படம்.  ஒரு சின்ன காட்சியில கூட ஆண் கேரக்டர் வரமாட்டாங்க. என்னுடைய கேரக்டர் பெயர் ஷோபி. ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஸ்டூடன்ட்.  டாக்குமென்ட்ரி எடுக்குறதுக்காக ஒரு பங்களாவிற்கு போறோம். அங்க நடக்குற அசம்பாவிதமும், நிறைய ப்ளாஸ்பேக் கடைசியில நடக்குற க்ரைம் த்ரில்லரை என்னங்குறது தான் கதை. போலீஸ் அதிகாரியா நதியா மேம் நடிச்சிருக்காங்க. நதியா மேன், ஒரு பக்காவான ஆர்டிஸ்ட். ஒவ்வொரு சீன்னும் நடிக்கிறதுல இருந்து, அந்த கேரக்டருக்காவே உழைக்கிறவரைக்கும் இப்படியொரு சீனியர் ஆர்டிஸ்டை நான் பார்த்ததே கிடையாது.  அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். நிமிஷத்துக்கு நிமிஷம் காமெடியா சொல்லிட்டே இருப்பாங்க. ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு அவங்க வந்தாலே கலகலப்பா இருக்கும். என்ன சொன்னாலும் கவுண்டர் கொடுப்பாங்க. பொதுவா ஸ்கிரிப்ட்ல இருக்குறது தான் ரிகசல் பண்ணுவாங்க. ஆனா ஷூட்டிங்கில் வேற லெவல்ல, ஸ்கிரிப்ட இல்லாததுலாம் சிறப்பா பண்றது கோவை சரளா மேம் தான். டைமிங்ல நடிக்கிறதுல அவங்க தான் பெஸ்ட்.

தமிழில் உங்க கூட நடித்த ஹீரோஸ் பற்றி சொல்லுங்க?

வில்லேஜ் பையன் மாதிரி விமல், அவரோட நடிக்கிறதே ஜாலியா இருக்கும். அருள்நிதி எப்போதுமே சீரியஸ். படத்துல என்ன கேரக்டரோ அப்படியேத்தான் ஷூட்டிங் ஸ்பார்ட்டுலயும் நடத்துப்பாங்க. டான்ஸ், பாட்டுனு  சாந்தனு எப்போதுமே ஜாலி, அரட்டையானவர். பரத்துக்கு நிறைய திறமைகள் இருக்கு. பெருமையா, பக்குவமா பேசுவாங்க. பிரசன்னா ரொம்ப அமைதியா தான் இருப்பாங்க. அவங்க பேசுறதுக்கு நாம காசு கொடுக்கணும். கடைசியா  ஒரு தாரிப்பாளர்னு எந்த பந்தாவும் இல்லாமதவர் விஷால். யார் எப்போ கேட்டாலும் உதவி செய்யுறவர். மொத்தத்துல, இவங்க எல்லோருமே ரொம்ப ஜெனியூன். நடிக்கணும்னு சினிமாவில் காலெடுத்து வைக்கும் போது, அதிகப்படியான வரவேற்பு கிடைத்த இடம் தமிழ் தான். என்னோட நடித்த நடிகர்களால், தமிழில் நடிப்பதை பெருமையாவும், பாதுகாப்பாகவும் நினைக்கிறேன்.  அதுமட்டுமில்லாம, தமிழில் கிடைச்ச விருதுகளும் பாராட்டுகளும் தான், மலையாளத்துலயும் படம் பண்ண காரணம்.

 உங்க தமிழ் உச்சரிப்பு நல்லா வருதே?

தமிழ் படங்கள் நிறைய வேலை தமிழ் காத்துகிட்டேன்.  ஷுட்டிங் இல்லாத நேரத்துல தமிழ் புக்கெல்லாம் வாங்கி படிச்சி, நானே எழுதவும் கத்துக்கிட்டேன்.  இப்பெல்லாம் மலையாளத்துல பேசும்போது கூட தமிழ் சாயல்தான் வருது.  

வாகைசூடவா படத்துல கிடைத்த வெற்றி, அடுத்தடுத்து நீங்க தக்கவைச்சிக்கலையே?

உண்மை தான். வாகை சூடவா படத்துல வந்த மதி கேரக்டர் மாதிரியான கணமான ஒரு கதாபாத்திரம் அடுத்தடுத்து எனக்கு கிடைக்கவில்லை. மாசாணி, நான் சிகப்பு மனிதன்னு நிறைய குட்டி குட்டி கதாபாத்திரங்கள் தான் கிடைச்சது. என்னை இம்ப்ரெஸ் பண்றமாதிரி கதை வரும் போது, நிச்சயம் மிஸ் பண்ணாம நடிப்பேன். வேற எனக்கு என்ன சொல்லனு தெரியலை.

அடுத்து என்னென்ன படங்கள் நடிச்சிட்டு இருக்கீங்க?

மலையாளத்துல பிஜூமேனனோட  “ஸ்வர்ணகடுவா” தீபாவளிக்கு ரிலீஸாகுது. அடுத்ததா ராணுவ அதிகாரியா அங்கேயே இன்னொரு படம் நடிக்கபோறேன். தமிழ்ல பரத்தோடு “பொட்டு”னு நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். இடையிடையே கேரக்டர் ரோல், பாடலுக்கு நடனமாடனும்னாலும் நடிக்க போய்டுவேன். என்னா, ஹீரோயின்னா மட்டும் தான் நடிக்கணும்னு எனக்கு விருப்பம் கிடையாது. நடிக்கிறதுக்கு வாய்ப்பிருக்குற கேரக்டரா தேடி நடிக்கணும், அதுமட்டுமே என் ஆசை. “நான் சிகப்பு மனிதன்” சின்ன சீன் தான் பண்ணிருப்பேன், ஆனா எல்லோர் மனசுலையும் இடம் பிடிச்சேன். அதான் எனக்கான பெருமையா நினைக்கிறேன்.

சரி, நீங்க நடிக்கணும்னு நினைக்கிற கேரக்டர் எப்படி இருக்கணும்?

நான் ரொம்ப ஹோம்லியான பொண்ணு. என்னுடைய கண்ணும், சிரிப்பும் தான் எனக்கான ப்ளஸ்னு சொல்லுவாங்க. நான் ரொம்ப தைரியமான பொண்ணு. இதையெல்லாம் வச்சி பார்க்கும்போது, ஜான்சி ராணி, அருந்ததி மாதிரி ஆக்‌ஷன், சண்டைனு நடிக்கணும்னு ஆசை. அப்புறம் டான்ஸர், பழிவாங்குற கேரக்டர்னு வெரைட்டியா நடிக்கணும், பழிவாங்குற கேரக்டர் மாதிரிலாம் நடிக்குறது தான் என் கனவே. 

புதுப்புது நடிகைகள் பற்றி என்ன நினைக்குறீங்க?

இப்போ நடிக்கவர நடிகைகள் எல்லோருமே பணத்துக்காகவும், புகழுக்காகவும் தான் நடிக்க வாராங்க. யாருமே நடிக்கணும்னு நடிக்கவரவில்லை. ஜாலிக்காகவும், பொழுதுபோக்காகவும் நடிக்க வந்துட்டு, கொஞ்ச நாள்ளயே காணாம போய்டுறாங்க. நடிப்பு, கலை எல்லோருக்கும் எளிதில் அமையுற விஷயம் கிடையாது. என்னை பெருத்த வரைக்கும் நடிப்பு தெய்வீகமான விஷயம்.

ஹோம்லி நடிகையாகவே நடிக்கிறீங்க, கவர்ச்சியா நடிக்கிறவாய்ப்பு வந்தால்?

கிளாமர் ரோலும் நடிக்க நிச்சயம் தைரியம் வேணும். கேரக்டருக்கு எந்த அளவுக்கு கிளாமரோட நடிப்பேன். கண்டிப்பா நோ சொல்ல மாட்டேன். இது தப்புனுலாம் ஏதும் கிடையாது.

காதல்?

ஸ்கூல்ல பப்பி லவ்வுலாம் இருந்தது, காதல்லாம் இப்போதைக்கு இல்லை. ஆனா, நிறைய பசங்க, ஸ்ருதிய கல்யாணம் பண்ணித்தாறீங்களானு வீட்டுக்கே வந்து கேட்பாங்க. கண்டிப்பா காதல் திருமணம் தான். ஆனா எப்போ, எப்படினு நோ ஐடியா.

0 comments :

Post a Comment

 
Toggle Footer