Sunday, October 30, 2016

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்று தெரிவித்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான விசா அனுமதியை அந்நாடு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியமை மற்றும் பாதத்தில் சிகிச்சை பெற வேண்டும் என நீதிமன்றத்தில் கூறிய அடுத்த நாட்களில் மரதன் போட்டியில் யோசித்த ராஜபக்ஷ கலந்து கொண்டமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டே, அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்பதால், அவரது விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தூதரக  தகவல்கள் கூறுகின்றன.

கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி தனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு முழங்கால் மற்றும் கணுக்காலில் காயம் உள்ளமையினால் வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் ஊடாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை விடுவிப்பதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. எனினும், கடந்த ஒக்டோபர் 02ஆம் திகதி 42 கிலோ மீட்டர் மரதன் போட்டியில் யோசித்த ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer