Monday, October 31, 2016

மூட நம்பிக்கைகளையும் மூட அரசியலையும் வர்த்தகமாக்கிய படங்கள்..

உலகம் அறிவியல் ரீதியாக பெரு வளர்ச்சியடைந்தாலும் பிற்போக்கு பா.ஜ.க ஆட்சியில் இந்திய உபகண்டம் மிக மோசமான கற்கால மூட நம்பிக்கைகளுக்குள் போகிறது என்ற கருத்து இன்று பரவலாக பேசப்படுகிறது, அதற்காக காங்கிரஸ் முற்போக்கென கருதிவிடக்கூடாது.

பசு மாட்டு இறைச்சி சாப்பிட்டவன் அடித்துக் கொல்லப்படுவதுவரை அந்த நாடு இன்று மிக மோசமான மதப்பொறை இல்லாத ஒழுக்கத்திற்குள் போக ஆரம்பித்துவிட்டது என்று அமெரிக்கா பல தடவைகள் கூறியிருக்கிறது.

இதே பாணியில் போருக்கு பிந்திய இலங்கையின் வட கிழக்குப் பகுதியும் சிவசேனை அமைக்குமளவுக்கு போயிருக்கிறது, இந்த பின்னணிகளை ஆதாரமாக வைத்து கொடி, காஸ்மரோ ஆகிய இரு படங்களையும் அவதானித்தால்…

இரண்டு திரைப்படங்களுமே இன்றைக்கு எது தேவையோ அதைத்தர முயன்றுள்ளன, காலத்தால் பாராட்டப்பட வேண்டிய சேவையை கணிசமான அளவு செய்திருக்கின்றன, இந்த இரண்டு படங்களும் சிறந்த படங்கள் என்ற கணிப்பிற்குள் வர முடியாவிட்டாலும் எடுத்த கதையின் சில பகுதிகள் மட்டும் பாராட்டப்பட வேண்டியவை.

முதலாவது கொடி.. இரண்டு திரைப்படங்களிலும் பார்க்கக்கூடிய படம் கொடிதான், இதில் த்ரிஷாவின் பாத்திரம் மிக முக்கியமானது.

தமிழக அரசியலில் இன்றுள்ள பெண் பாத்திரங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி, அதற்கு ஒரு குறியீட்டு வடிவம் கொடுத்து அதன் அக வடிவத்தை அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

அதிமுக – திமுக – காங்கிரஸ் – பாஜக கட்சிகளில் உள்ள பெண் பாத்திரங்கள் இதைவிட வேறொரு வடிவத்தில் இருக்க நியாயமில்லை என்று ரசிகன் உறுதியாகவே வந்துவிடுமளவுக்கு மிகச்சிறப்பாக அந்தப்பாத்திரம் புனையப்பட்டுள்ளது, இதைவிட சிறப்பாக நடித்திருக்க 40 வீத இடம் இருந்தாலும் த்ரிஷா தன்னளவில் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

இன்றைய தமிழக அரசியல் அதிகாரத்திற்காக தனது புருஷனையே கொல்லுமளவுக்கு உக்கிரம் பெற்று நிற்பதை துணிச்சலுடன் கொடியில் தந்துள்ளார்கள்.

தமிழக அரசியல், போலீஸ், வட்டம், மாவட்டம், பதவி, கொள்கை வகுப்பு யாவுமே ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கியிருப்பதை படம் தெளிவாகக் காட்டுகிறது.

உலகத்தின் ஜனநாயகத்தில் முன்னேறிய நாடுகளிலும் இன்று ஜனநாயகம் கேலிக்குரிய வஸ்த்து ஆகிவிட்டாலும், உலகின் மூத்த மொழியும், நாகரிகமும் கொண்ட தமிழினத்தின் வரலாற்றை அணி செய்த எல்லா பெருமைக்குரிய மக்களும் தலை குனிந்து நிற்குமளவுக்கு இவர்களுடைய அரசியல் கோணங்கியாகப் போயிருப்பதை ரசிகன் பார்த்து கண்ணீர் வடிக்கிறான்.

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – ஜானகி – குஸ்பு – மு.கருணாநிதி – அழகிரி – மு.க ஸ்டாலின் – சசிகலா – இளவரசி – தினகரன் – கனிமொழி – ராசா – அன்பழகள் – துரை முருகன் – ஓ. பன்னீர்செல்வமென்று பல முகங்கள் கண்களில் வந்து போகின்றன.

தனுஷ் இடைக்கிடை எம்.ஜி.ஆர் குரலில் பேசுவது மிகச்சிறந்த குறியீடாகும்.

ஏறத்தாழ ஓர் இருவர் படம் போல உருவாக்க முயற்சித்துள்ளார்கள், கழக ஆட்சிகளின் இன்றைய அவல நிலையையும் தமிழினத்தின் பரிதாப நிலையையும் படம் பிடித்து காட்டுகிறது கொடி.

பெண்கள் என்றால் வில்லிகள் மட்டுமா என்று ஒரு கேள்வி எழலாம் ஆனால் அரசியல் ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் வில்லிகளாக மாற்றும் என்பதுதான் படத்தின் தகவலாக இருக்கிறது.

அதிகாரமும், ஊழலும் அண்ணன், தம்பி, கணவன், மனைவி என்ற பாசத்தை எல்லாம் தூக்கி வீசி நிர்வாணக் கோலமாக பேய் நடமிடுகிறது என்பதை துணிந்து சொல்கிறார்கள்.

கொடி அரசியல் என்றால் காஸ்மோரா மதம்..

காஸ்மரோ திரைப்படம் மதத்தை ஆதாரமாக வைத்து நடைபெறும் மோசடிகளை தெளிவாக போட்டுடைக்கிறது.

கார்த்தி – விவேக் இருவரும் தமிழகத்தின் மூட நம்பிக்கையை இதயத்தால் விளங்கி நடித்துள்ளார்கள்.

காஸ்மோரா என்ற கிராபிக்ஸ் காட்சி கொண்ட கதை கோமாளித்தனமான அம்புலிமாமா கதையை விட கேவலமாக இருந்தாலும் படத்தின் முன்பகுதி ஜீவனுள்ள கதையாகும்.

போலிச்சாமியாரை நம்பி அரசியல் நடத்தும் முட்டாள் தன ஜனநாயகம், மதவேடதாரித்தனங்களின் தலைவிரி கோல அவலங்களை அருமையாக பதிவாகியிருக்கின்றார்கள், அதற்கேற்ப கொடுக்கப்படும் பின்னணி இசை அபாராமாக இருக்கிறது.

மூட நம்பிக்கையை உண்மையென நம்பி போலியான கார்த்தியின் கால்களில் இரண்டு போலீஸ்காரர்கள் விழுவார்கள், அது கடைந்தெடுத்த ஏமாற்று, அயோக்கியத்தனம், பொய் என்று தெரிந்த பின்னும் இரண்டு பேர் விழுந்த பின் தான் விழாமல் இருந்தால் அது தப்பென இன்னொரு போலீஸ்காரனும் காலில் விழுகின்ற காட்சி எண்ணற்ற புலம் பெயர் தமிழர்களை அப்படியே படம் பிடித்துக்காட்டியது.

அதைவிட சுவாரஸ்யமான விடயம் இந்து மதத்தை சேர்ந்த ஏமாற்றுக்காரர் முஸ்லீம் – கிறீத்தவ சமயங்களின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுவதாக வரும் காட்சிதான்.

இந்துக்கள் இந்துக்களையும், கிறீத்தவர் கிறீத்தவர்களையும், முஸ்லீம்கள் முஸ்லீம்களையும் மதம் என்ற மாயவித்தையால் ஏமாற்றி வயிறு வளர்க்க வேண்டும்.

இதற்காகவே நாம் மதக்கடைகளை திறந்து வருகிறோம்..

ஆகவே ஒரே மதம் மற்றய மதங்களின் கில்லாடிகளின் பிழைப்பு முழுவதையும் தனியே கொள்ளையடிக்கக் கூடாது என்ற இடம் அபாரமாக உள்ளது, விவேக் கார்த்தி இருவரும் கைதட்டல் வாங்குகிறார்கள், இன்றய பா.ஜ.க மத வேடதாரிகள் மற்ற மத வேடதாரிகளின் வளங்கள் அனைத்தையும் தனியாக தாமே சுரண்டிவிட்டார்கள் என்பதை குறியீடாகக் காட்டுகிறார்கள்.

பாம்பு புற்றில் முட்டை ஊற்ற அது பின் வழியாக பறோட்டா கடைக்கு போவது, பால் வார்க்க அந்தப்பால் மறுபுறத்தில் டீக்கடைக்கு போவது போன்ற அனைத்து மூட நம்பிக்கைகளையும் தோலுரித்துக் காட்டுகிறார்கள்.

இன்று புலம் பெயர் நாடுகளில் மோசமாக வளரும் மூட நம்பிக்கைகளை கருவறுக்க இந்தப்படம் உதவினாலும் உதவலாம், காரணம் அறியாமை வெள்ளம் இன்று தலைக்கு மேல் ஓடுகிறது, புகத்தறிவு படு தோல்வியடைந்திருக்கிறது.

இந்த அவலமான நிலையில் இரண்டு தீபாவளி படங்களும் ஓரளவுக்கு சிறந்த சேவை செய்துள்ளன, அதுவும் இந்தியா போன்ற ஆபத்தான ஒரு நாட்டில் இருந்து செய்துள்ளன.

அதேவேளை இரண்டு படங்களின் மற்றய பகுதிகளை எடுத்துக் கொண்டால் கொடி படம் கூடிப்பிறந்த இரட்டையரை வைத்து சொல்லும் செய்தி மறுபடியும் படத்தை படுகுழிக்குள் வீழ்த்துகிறது.

அதுபோல காஸ்மரோ படம் சொல்லும் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை இப்படத்தை உருவாக்கியோரும் மூட நம்பிக்கையின் கூலிகளே என்பதை தெளிவாகக் காட்கிறது.

இதுவே இரண்டு படங்களின் தோல்விப்பகுதிகளாகும்.

அதேவேளை மறக்க முடியாத மறக்கக் கூடாத பல சிறந்த தகவல்கள் இரண்டு படங்களிலும் இருப்பதையும் மறுக்க முடியாது.

தேவை கருதி இரு படங்களையும் பல்லைக்கடித்தபடி பார்த்து முடிக்கலாம்.

அலைகள்.

2 comments :

  1. மிகக் கேவலமான விமர்சனம்

    ReplyDelete
  2. Your review not at all a worth one..

    When the king becomes stronger the controls d nation, thief, terrorist & traitors feel the heat & complain of intolerance in the society. - Chanakya


    ReplyDelete

 
Toggle Footer