Wednesday, October 26, 2016

மத வெறியா இல்லை மது வெறியா எது வேண்டும்..

மதுவே ஜீவநாடி மதுவை அருந்தாதவன் பேடி என்ற நிலைக்கு உலக மக்களை தள்ளி மக்களை மதுவுக்கு அடிமையாக்கிவிட்ட உலக வர்த்தக சமுதாயத்தில் மதுபானத்திற்கு முற்றாக தடை விதிக்கும் அறிவித்தல் ஒன்று ஈராக்கில் வெளியாகியிருக்கிறது.

விதம்விதமான மது வகைகளை தயாரித்து வயிறு வளர்க்கும் நாடுகள் ஈராக் பாராளுமன்றம் எடுத்துள்ள முடிவை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளன.

ஈராக்கில் ஒருவர் மதுபானம் குடித்தால் 55.000 குறோணர்கள் தண்டம், மதுபான சட்டத்தை மீறினால் 140.000 குறோணர்கள் தண்டம் விதிக்கப்படும்.

இஸ்லாத்தின் சட்டப்படி மதுபானம் அருந்துவது தவறான செயலாகும், இஸ்லாத்தை பாராளுமன்றின் அடிப்படைச் சட்டமாக்கிவிட்டு மதுபானத்தையும் கூடவே அரசு ஊற்றினால் அது பொய்யான செயலாகிவிடும்.

இது மட்டுமல்ல மது அருந்துவது பின்வரும் சமுதாய சிக்கல்களையும் ஏற்படுத்துவதாக ஈராக்கிய பாராளுமன்ற உறுப்பினர் அமர் ரோமா கூறுகிறார்.

01. சமுதாயத்தை மதுபானம் ஏழ்மை நிலைக்குள் தள்ளுகிறது.
02. போதை வஸ்த்து பாவனைக்கு பாலமிட்டுக் கொடுக்கிறது.
03. பயங்கரவாதிகள் உருவாக காரணமாக அமைகிறது.
04. பல்வேறு சமூக சீரழிவுகள் தோன்ற வழி சமைக்கிறது.

இதனால் மதுபானத்தை குடிப்பது, விற்பது மட்டுமல்ல இறக்குமதி செய்வதும் தடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்தச் சட்டமானது இஸ்லாத்தில் இருந்து உருவாகி வருகின்ற காரணத்தினால் இஸ்லாமியர் அல்லதவர்களுக்கு இதிலிருந்து தளர்வு வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது, அதனால் விவகாரம் நீதிமன்று போகிறது.

மத வெறி ஒரு பக்கம் மது வெறி மறுபக்கமுமாக இரு பெரும் வெறிகளில் மக்கள் தள்ளாட முடியாது மதம் வேண்டுமா மதுவை நிறுத்து, மது வேண்டுமா மதத்தை நிறுத்து.. இரண்டில் ஒன்று..! இரண்டையும் ஊற்றி நெருப்பை வளர்க்காதே..!

ஈராக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமானது தற்செயலானதல்ல நன்கு திட்டமிட்ட சமுதாய வியூகமாகவே தெரிகிறது, ஈராக்கிய அரசுக்கு இவ்வளவு மூளை வேலை செய்யுமா என்பதும் கேள்விக்குறியே.

எதிர்வரும் 2030 ற்கு பின் பெற்றோல் கார்களை உற்பத்தி செய்வது நிறுத்தப்படும் என்று சுவீடிஸ் சுற்றுப்புற சூழல் அமைச்சர் இஸபெலா லுவ்வீன் தெரிவித்த கருத்தைவிட இது அபாரமாக இருக்கிறது.

பெற்றோல் அடிக்காத காரும் – போதைக்கு மது என்னும் பெற்றோல் அடிக்காத மனிதனும் சாத்தியமா பொறுத்திருந்தே பார்த்தல் வேண்டும்.

அலைகள்

0 comments :

Post a Comment

 
Toggle Footer