Wednesday, October 26, 2016

கண்ணீர் எடுபட்ட அளவு தன்னம்பிக்கை எடுபடவில்லை..

தமிழக நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ பட விழாவில் கண்ணீர்விட்டு அழுதது அதிகமாக உலகம் முழுவதும் தமிழரிடையே மிக விரைவாக சென்றுள்ளது, இன்று அதுபற்றி தெரியாத தமிழர்கள் இருப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் போலீஸ்காரர்கள் சுட்டதில் விபத்துக்குள்ளாகி பிள்ளைகளைப் பலி கொடுத்த இரண்டு தாய்மார்களின் கண்ணீரைவிட சிவகார்த்திகேயனின் கண்ணீர் புலம் பெயர் தமிழரின் செய்திகளில் வெகு தூரம் ஓடியிருக்கிறது.

சிவகார்த்திகேயன் அழுதாலும் சிரித்தாலும் நமக்கு எதுவும் இல்லை என்றாலும், நமது மக்கள் அதிகம் பேசுவதால் இது குறித்த பார்வை ஒன்று அவசியமாகிறது.

சிவகார்த்திகேயன் ஏன் அழுதார்..? இதற்கு மூன்று நான்கு காரணங்கள் கூறப்படுகின்றன.

01. முன்னர் நாள் சம்பளத்திற்கு நடித்த சிவகார்த்திகேயன் அதுபோல மலிவு விலையில் மேலும் சில படங்கள் நடிப்பதாக அன்று மார்க்கட் இல்லாத நேரத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார், இப்போது மார்க்கட் உயர்ந்ததும் ஏறி வந்த ஏணியை உதைத்துவிட்டார். ( இது தமிழக நடிகர்களின் தேசியக் கதைதான் )

02. இப்போது தயாரிப்புத் துறையில் மிகப்பெரிய தாதா போல பினாமியான ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார், அவரை மீறி இன்று பணம் பண்ண முடியாது ஆகவே அவர்களுடைய நெருக்குதல் இருக்கிறது. ( அவர்கள் கண்ணீருக்கு மசியும் பேர்வழிகள் அல்ல இதயம் செத்துப்போன கந்துவட்டிக்காரர்கள் )

03. ரெமோ படம் பற்றி எதிரான விமர்சனங்கள் கிளம்பியதால் கண்ணீர் விட்டு நாடகமாடி கவனத்தை திசை திருப்பி படத்தை ஓட வைத்தார், இது ஒரு வியாபார தந்திரம் என்று கூறுகிறார்கள், கண்ணீருக்கு பிறகே படம் வேகம் பெற்றிருக்கிறது.

04. சிவகார்த்திகேயன் மட்டத்தில் வளரும் நடிகர்களுக்கிடையே நடைபெறும் ஓட்டப்போட்டியில் அடுத்த கட்டமான ஆளையாள் சரிப்பு வேலைகள் ஆரம்பித்துவிட்டன, ஓடும் குதிரைகளில் முதலாவதாக தலை நீட்ட இது ஒரு வியூகம் என்பது இன்னொரு கருத்து.

இவை இப்படியே இருக்க…

அழுது வடிக்காமல் சிவகார்த்திகேயன் வீறாப்பாக பேசியிருந்தால் விவகாரம் இவ்வளவுக்கு எடுபட்டிருக்குமா என்றும் பார்க்க வேண்டும்… அப்படி பேசியிருக்கிறாரா…?

ஆம் பேசியிருக்கிறார்..

முன்னர் படம் நடிக்க ஒப்புக்கொண்ட இரண்டு மதன்களுக்கும் இனி படம் நடிக்கமாட்டேன் அவர்களை நீதிமன்றில் நேருக்கு நேர் சந்திக்கிறேன் என்று வீர வசனம் பேசியுள்ளார்.

அவர் பேசிய இந்த வீர வசனம் கண்ணீர் எடுபட்ட அளவுக்கு எடுபடவில்லை.. ஏன்..?

உளவியல் ஆய்வொன்றின் கருத்தின்படி மக்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள், அவர்களில் கண்ணீர்கதைகளை நாட்டத்துடன் கேட்கக்கூடியவர்களே அதிகம்.

உலகத்தில் 60 வீதமான பாடல்கள் அடிக்கடி கேட்கப்படுகின்றன, அவை அனைத்தும் சோகப்பாடல்களே, மக்களில் பெரும்பான்மையோர் அதையே விரும்புகிறார்கள்.

காதலில் தோல்வியடைந்த தேவதாஸ் படத்தை திரும்பத் திரும்ப எடுத்தாலும் ஓடுகிறது, காதலிலே தோல்வியுற்றான் புகழ் கல்யாணப்பரிசு கொடிகட்டிப் பறந்தது..

ஆகவேதான் விளம்பரத்தில் மிகமிக முக்கியமானது அழுகையாகும், சிவகார்த்திகேயன் அதை தனது வெற்றிக்கான ஆயுதமாக எடுத்திருக்கிறார்.

இது முதற் தடவையல்ல இதற்கு முன்னரும் தந்தை பற்றி ஒரு காட்சி வர கதறி அழுததாக சென்டிமென்ட் செய்தி ஒன்று வெளியாகி அவருடைய படத்திற்கு அது முக்கிய செய்தி வலுவை கொடுத்திருந்தது.

பல குரலில் மிமிக்கிரி பண்ணி ரசிகர்களை சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் சிரிப்பைவிட அழுகையே காசில்லாத விளம்பரத்திற்கு வசதியானதென நன்கு உணர்ந்து வைத்திருந்தார்.

ரஜினி முருகன் படம் வெளி வந்தபோதும் ஒரு கண்ணீர்கதை வெளியாகி சிவகார்த்திகேயன் சொந்தப்பணத்தை இழந்துவிட்டதாக சென்டிமென்ட் செய்தி வெளியாகியிருந்தது.

அந்தச் செய்தி தரமற்ற ரஜினி முருகனை காப்பாற்றியிருந்தது, ரஜினி முருகன் குறித்து முன் வந்த சோகக்கதை சரியாக இருந்தால் படம் முடிந்ததும் அந்த சோகம் மாறிவிட்டதா என்ற செய்தியை மக்களுக்கு வழங்கியிருக்க வேண்டும், சிவகார்த்திகேயன் அதை நேர்மையாக செய்யவில்லை.. ஆக அது ஓர் ஏமாற்றாக இருக்க வாய்ப்புள்ளது.

ரெமோவிலும் அதுதான் நடந்திருக்கிறது, ஒரே நடிகர் ஒரு விடயத்தை இரண்டு கோணங்களில் பேசி தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.

இப்போது ரஜனி, விஜய், விஷால், சிம்பு போன்றவர்கள் சிவகார்த்திகேயனுக்காக குரல் கொடுத்துள்ளார்கள் என்றபோது அவர்களுடைய ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு அனுதாபம் தெரிவிக்க வழி பிறந்தது.

இவர்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும்.. சென்ற வாரம் வெளியான ஒரு படத்தின் தயாரிப்பாளர் தன் பணத்தை திரையுலகத்தை சேர்ந்த பலர் சூறையாடிவிட்டதாக கண்ணீர்விட்டு கதறினார், தற்கொலை செய்யப்போவதாக அழுதார், ஒருவர் ஏனென்று கேட்கவில்லை.. காரணம் என்ன..?

அவர் ஏழை அதனால் யாருக்கும் இலாபம் இல்லை.. ஏழைகளுக்கு உதவுவதாக படத்தில் மட்டுமே இவர்கள் நடிப்பார்கள், நிஜ வாழ்வு அப்படியல்ல..

சிவகார்திகேயனின் கண்ணீரில் குளிர்காய வந்தவர்களோ ரஜினி, விஜய் என்று அதிகமாகும் இவர்கள் அதில் ஒரு பிரச்சாரம் தேடியுள்ளனர்.

இப்போது சென்டிமென்ட் நாடகங்கள் பார்த்து அழுகைக்காகவே ஒரு கூட்டம் தனியாக இருக்கிறது, இவர்களை எல்லாம் திரையரங்கு இழுக்க அழுகை ஓர் அரிய ஆயுதம் என்று நன்கு தெரிந்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் அழுகை உண்மையானது என்றால் அதை வெளிப்படுத்திய 24 மணி நேரம் முடிய முன்னரே அவர் யூ ரேண் எடுத்து வீர வசனம் பேசியிருக்க முடியாது.

அவர் பேசிய வீர வசனம் உண்மையா இல்லை கண்ணீர் உண்மையா என்றால் இரண்டுமே உண்மையில்லை, இரண்டுமே சினிமா வியாபாரத் தந்திரமே.

தற்போது முன்னணியில் நிற்கும் ரஜினியின் வர்த்தகத்திற்கு அடுத்து விஜய், அஜித் வர்த்தகம் வருகிறது, இதற்கு அடுத்த மூன்றாவது வர்த்தகத்தில் முன்னணி பெற சிவகார்த்திகேயனால் வகுக்கப்பட்ட வியூகமே இது.

சிவகார்த்திகேயனை வைத்து படமெடுத்தவர் தனுஷ் அவர் இந்த அழுகைக்குள் தனது மூக்கை நுழைக்கவில்லை ஆனால் அவருடைய கொடி இப்போது ரெமோவுடன் மோதப்போகிறது.

முன்னணியில் நிற்கும் தனுஷ் பட வர்த்தகம் ஒரு சுற்று பின்வாங்கக் கூடிய நிலை இப்போது தென்படுகிறது, கடைசியாக வந்த இரண்டு படங்களில் தனுஷ் பின்தங்கிவிட்டார், ஆகவே கொடி இன்னொரு மோசமான தளத்திற்கும் போகலாம்.

சென்னையில் போய் தமிழ் திரைப்படம் எடுப்போரில் 99 வீதம் விட்ட பணத்தை பறி கொடுத்து அழ வேண்டிய நிலையிலேயே இருக்கிறார்கள், இனி அவர்கள் உண்மையாக அழுதாலும் அது எடுபடப்போவதில்லை, காரணம் விரைவில் அழுகை ஒரு சினிமா விளம்பர ஆயுதமாகப்போகிறது.

சிவகார்த்திகேயனுக்கு பின் ஒரு நடிகை அழுதுவிட்டார்.. இந்த வரிசையில் மேலும் பலர் வர வாய்ப்புள்ளது..

தமிழ் சினிமாவை இந்த நிலைக்கு கொண்டு வந்தது முதலாவது திமுக, பின் அதிமுக இரண்டு திராவிட கட்சிகளும் சினிமாவால் ஆட்சிக்கு வந்தவை, சினிமாவின் வீழ்ச்சிக்கும் இவையே காரணம்.

இவர்களுக்கு கொடும்பாவி கட்டி ஒப்பாரி வைக்க முன் சிவகார்த்திகேயன் ஒப்பாரி வைத்துவிட்டார், இனி சிவகார்த்திகேயன் போன்றவர்களின் போலிக்கண்ணீரால் உண்மைக்கண்ணீர் எடுபடாமல் போகப்போகிறது.

இவர்களைப் போன்ற பிழைப்புப் போலிகளால் யாழ்ப்பாணத்து தாயின் கண்ணீரும் கவனிப்பாரற்று போய்விடுகிறது.

அலைகள்

0 comments :

Post a Comment

 
Toggle Footer