Thursday, October 27, 2016

நேற்று முன்தினம் திராவிடர் கழகத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

திராவிடர் கழகத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று (24.10.2016) மாலை சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தோழர் தா.பாண்டியன், எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது உடனிருந்து உறுதுணையாக இருந்த டாக்டர் பழனி ஜி.பெரியசாமி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர். 

மன்றம் நிறைகின்ற அளவுக்கு மக்கள் கூடினர். இதுவரை எத்தனையோ நிகழ்ச்சிகளை, விழாக்களை பெரியார் திடல் சந்தித்ததுண்டு. புதிய முகங்களைக் காண முடிந்தது. தாய்மார்களும் கணிசமாகக் கூடியிருந்தனர். 

திராவிடர் கழகம் - எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது ஏன்? எம்.ஜி.ஆர். தலைமையில் தமிழ்நாட்டு ஆட்சி இருந்தபோது, கிட்டத்தட்ட 13 ஆண்டு காலத்தில் திராவிடர் கழகம் அவ்வாட்சிக்கு எதிர்நிலையில்தான் இருந்தது. பல போராட்டங்களை நடத்தியதுண்டு - எதிர்ப்பிரச்சாரம் செய்ததுண்டு. அப்படி இருக்கும்போது, திராவிடர் கழகம் எம்.ஜி.ஆ.ர். நூற்றாண்டு விழாவை நடத்துகிறது என்கிறபோது, அதனைச் சற்று வித்தியாசமாக நினைப்பது எதிர்ப்பார்க்கக் கூடியதே. 

ஆனால், விழாவுக்கு வந்தவர்கள், அங்குப் பேசப்பட்ட உரைகளைக் கேட்ட நிலையில், திராவிடர் கழகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எடுத்ததற்கான நியாயத்தைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. 

ஒரு நடிகராக இருந்து அரசியலில் நுழைந்து, ஒரு குறுகிய காலத்தில் ஆட்சியையும் அமைத்து, தான் மரணம் அடைகின்ற வரையில் ஆட்சியில் இருந்த சாதனை எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே உண்டு என்று தோழர் தா.பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கதாகும். 

எம்.ஜி.ஆர். திரைப்படத்தை கையாண்ட முறை - அதில் அவர் வெற்றி பெற்றதைக் கவனிக்கவேண்டும். திரைப்படத்தில் கதாநாயகனாக இருந்த எம்.ஜி.ஆர். பாடும் பாடல் வரிகள் மிக முக்கியமானதாக இருந்தன. பாடலின் கருத்து எப்படி இருக்கவேண்டும் என்பது கதாநாயகரான எம்.ஜி.ஆருடையதாக இருந்தது. அதனை உள்வாங்கிப் பாடியவர் இன்னொருவர், இசை அமைத்தவர் மற்றொருவர். இந்த ஒட்டுமொத்த துணையோடு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர் கதாநாயகரான எம்.ஜி.ஆர். 

உங்கள் கட்சியைச் சேர்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தானே பாடலை எழுதிக் கொடுத்தவர். அவரை நான் எப்படிப் பயன்படுத்தினேன்? நீங்கள் ஏன் பயன்படுத்தி இருக்கக்கூடாது என்று எம்.ஜி.ஆர். தன்னிடம் கேட்டதை தோழர் தா.பாண்டியன் எடுத்துச் சொன்னது  கவனிக்கத்தக்கதாகும். 

கூட்டத்தில் பேசியவர்கள் முக்கியமாக ஒன்றைத் திட்டவட்ட மாகக் குறிப்பிட்டனர்.  விருந்தோம்பல், மாற்றார்களாக இருந்தாலும் அவர்களை மதித்த மாண்பு என்ற குணநலன்கள் மக்கள் மத்தியில் பொது மரியாதையை அவருக்கு அளித்தது என்பதுதான் அது. 

மக்கள் மத்தியில் உயிரோட்டமும், மக்களின் அபரிமிதமான அபிமானத்தையும் பெற விரும்புவோருக்கு ஒரு முன்னோடியாக எம்.ஜி.ஆர். இருந்திருக்கின்றார் என்பதில் அய்யமில்லை. 

அவருக்கு திராவிடர் கழகம் விழா எடுத்ததற்கான காரணம் முக்கியமானது. தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை அவர் நடத்திய விதம் - தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்குச் சட்ட வடிவம் - மாவட்டந்தோறும் பெரியார் நினைவுச் சுடர் - அவற்றில்  தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழிகள் பொறிப்பு - பொன்மொழிகள் நூல் தடை நீக்கம் - ஈரோட்டிற்குப் பெரியார் மாவட்டம் என்ற பெயர் சூட்டல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். 

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு ஆணை என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார் - ஆண்டு வருமானம் ரூபாய் ஒன்பதாயிரத்திற்கு அதிமாக இருந்தால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வாய்ப்பு கிடையாது என்பதுதான் அவர் பிறப்பித்த ஆணை. 

அதனை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் களம் அமைத்து, சமூகநீதியில் அக்கறை கொண்ட அத்தனைக் கட்சி களையும், தலைவர்களையும் ஒருங்கிணைத்த அடிப்படைப் பணியை திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றார். வெற்றி என்பதற்கு அடையாளம், இந்த ஆணையைப் பிறப்பித்த எம்.ஜி.ஆர். அவர்களின் அ.இ.அ.தி.மு.க. அடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதுவரை கண்டிராத பெருந்தோல்வியைச் சந்தித்தது. மொத்தம் உள்ள 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியைச் சந்தித்தது. 

தமது தோல்விக்குக் காரணம் சமூகநீதியில் கை வைத்ததுதான் என்பதை உணர்ந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அந்த ஆணையை ரத்து செய்ததுடன், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவிகிதம் இருந்த இட ஒதுக்கீட்டின் அளவை 50 சதவிகிதமாக உயர்த்தி உத்தரவிட்டார். 

அதற்காக நன்றி அறிவிப்புப் பொதுக் கூட்டத்தை நடத்தியது திராவிடர் கழகம். இன்றைக்கு இந்தியாவிலேயே 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியாக இருப்பது தமிழ்நாட்டில்தான் இதனால் பலன் அடைந்தவர்கள் சார்பில் நன்றி பாராட்டும் விழாதான் இந்த நூற்றாண்டு விழா என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்ன கருத்து உண்மையானது - சரியானதும்கூட! 

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உதவியும் மிக முக்கியமானது. 

உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் இருந்தபோதுகூட, அமெரிக்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம், ஈழத் தமிழர்களுக்காக செய்யவேண்டிய உதவியை வலியுறுத்தத் தவறவில்லை என்பது கண்டிப்பாக நினைவுகூரத்தக்கதாகும்.

 எதிர்த்திருக்கலாம்; கடுமையாக விமர்சனம் செய்திருக்கலாம்; ஆனால், இவைகளையும் தாண்டி ஒருவரிடம் உயர்ந்த பண்பாடும், செயல்பாடும், சாதனையும் இருக்குமானால், அவை போற்றப்பட வேண்டியவையே - நன்றி கூறக் கடமைப்பட்டவையே என்பதற்கான அணிகலன்தான் திராவிடர் கழகம் நடத்திய வள்ளல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer