Thursday, October 27, 2016

வெள்ளிக்கிழமை விருந்து அமர்க்களம் கட்டியது..

“வெள்ளிக்கிழமை விடியும் வேளை – வாசலில்
கோலமிட்டு.. பாடல் வேறு வானொலியில்…”

சரிகமபதநிச சாம்பனாருக்கு கண்ணீரில் ஜலம் கொட்டாத குறை, அல்டி அரிசியில் வடிக்கப்பட்ட சாதத்துடன் கத்தரிக்காய் குழம்பை மனப்போல பிசைந்து கொண்டபோது மீண்டும் கொஞ்சம் உணர்ச்சிக் கவிஞரானார்..

நண்பன் மனைவி சீதா லெட்சுமி ஊறுகாயை தொட்டு வைப்பதைப்போல கறியை தொட்டு வைப்பதில் தங்கப்பதக்கம் எடுத்தவள் இன்று கத்தரிக்காய் குழம்பையும், பாலாக்கொட்டை பால்கறியையும் அள்ளிப் போடுவதைப் பார்த்தால் அவளுக்கு ஏதாவது சுவீப் விழுந்துவிட்டதோ என்ற ஐயம் ஏற்பட்டது..

அவருடைய சந்தேகக் கண்களைப் பார்த்த மூத்த கணபதி மெதுவாக சிரித்துக்கொண்டார்… அவர்தான் சீதா லெட்சுமிக்கு மாலையிட்ட மணவாளன்.

” ஏன் சிரிக்கிறாய்.. நக்கலோ..?”

” இல்லை ஓசிக்கத்திரிக்காயும், பலாக்கொட்டையும் என்றால் அள்ளித்தானே போடுவாள்..”

” ஓசியோ.. ?”

” தமிழ் கடையில அன்றாடம் காய்ச்ச காய்கறி வேண்டப் போனவளுந்தை பையிலை கத்தரிக்காயையும் பலாக்கொட்டையளையும் எக்ஸ்ராவா இன்னொரு பையிலை சுத்தி வைச்சிருக்கிறாங்கள்…. இவளுக்கு அதிர்ஷ்டம்… ஹி…ஹி… ஹரே ராம் ஹரே கிஷ்ணா.. ஓசிப்பலாக்கொட்டையை ஓங்கிக் கடித்தார்.”

” சபாஸ் தமிழ் கடைக்கார சரவண முருகேசு ஏமாந்துபோனான்…”

” ம்.. ம்…” வாழ்க்கையில் முதல் தடவையாக.. மூத்த கணபதியாருக்கு புரைக்கேறியது..

இப்படித்தான் தன்னுடைய மனிசி எலக்காய் சிவராணியும் போன கிழழை பூசினிக்காய் சுண்டலும், பூசினிக்காய் அலுவாவும் காய்ச்சியது சரிகமபதநிச சாம்பனாருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது..

அவளுடைய பையிலையும் இப்படித்தான் எக்ஸ்ராவா ஒரு பூசினிக்காய் பை இருந்தது.. அதனால்தான் சந்தேகம்…

” அண்ணே கத்தரிக்காயளுக்கும், பலாக்கொட்டைக்கும் பில் போட்டிருப்பான் பாத்தனீங்களே..?” போன வாரம் மனிசி வாங்கின பூசிக்காய்க்கும் பில் போட்டிருந்த அனுபவத்தால் வந்த படிப்பினை..

“பில்…?”

மூத்த கணபதி ஓடிச்சென்று பார்த்தர், கத்தரிக்காய் பலாக்கொட்டைகள் கிடந்த தனியான பையில் அதன் பில் கிடந்தது.. அறிவுக்கொழுந்து சீதா லெட்சுமி அதற்கும் சேர்த்துத்தான் பில் கட்டிவிட்டு வந்திருப்பதை கண்டு கொண்டார்..

“எடி ஆத்தே கத்தரிக்காய்க்கும், பலாக்கொட்டைக்கும் காசெடுத்திருக்கிறான் கவனிக்க இல்லையே.. ?”

” காசு போட்டிருக்கே.. கடையில சனமாக்கிடந்திச்சு அவசரத்தில பாக்க இல்லையப்பா…”

” பழசாப்போன காய்கறியை கட்டியடிக்க இப்பிடி எத்தினை திருட்டு வேலையப்பா.. சீய்க்..” – மூத்த கணபதி

” ஏன் கடைக்காரனை திட்டுறியள்.. மேலதிகமா கத்தரிக்காய் இருந்தால் சொல்லமல் கொள்ளாமல் குழம்பு வைக்கிறது மட்டும் களவில்லையே…? ” சரிகமபதநிச சாம்பனார் கேட்க நினைத்தார் கேட்கவில்லை அவசரமாக எழும்பி கை கழுவப்போனார்…

” எடியேய் கடைக்கு போனால் எவ்வளவு காசு குடுக்கிறாய் எண்டு யோசிக்கிறதில்லையே..?”

” அதைவிடு பையில என்னென்ன சாமான் கிடக்கெண்டுதன்னும் பாக்கிறதில்லையே..?”

” உங்களை மாதிரி ஆக்களை குறி வைச்சுத்தானே சுத்துறாங்கள் ..”

” இனி நீங்களே கடைக்குப் போங்கோ..” சீதா லெட்சுமி கத்திரிக்காய் சட்டியை தூக்கி எறிய அது எங்கோ மோதி விழுவதும்.. அந்தச் சத்தத்தில் மூத்த கணபதி பெட்டிப்பாம்பாய் அடங்கியதும் புலன்களில் தெரிகிறது.

தண்ணீர் பைப்பை சத்தமாக திறந்து விடுகிறார்..

இப்போது முன்னாள் ஈழத்து கவிஞர் சரிகமபதநிச சாம்பனாருக்கு பழைய நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் புதிய வரிகளாக மனதில் கேட்டது..

” நீயும் கள்ளன் – நானும்
கள்ளன்
நினைத்துப் பார்த்தால் – எல்லாம்
கள்ளர்..
கள்ளர் கள்ளர் – கள்ளரில்
கள்ளர்… தின்னும்
சோறும் கறியும் – சொல்வதும்
கள்ளர்..”

போனது பாடல்…

இடையில் ஒரு குரல்..

தோழர்களே..!
குழம்பு கதையை கேட்டு
குழம்பி விடாதீர்கள்..!
இது ஒரு சம்பவம்
எல்லா கடைகளுக்கும்
பொருந்தாது..!
என்று விளக்கும்
பாயாசம் ஊற்றியது….

(யாவும் கற்பனை)

கி.செ.துரை

0 comments :

Post a Comment

 
Toggle Footer