Sunday, August 28, 2016

வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள இராணுவ- பொலிஸ் சோதனைச் சாவடி அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு உரிமையாளர்களில் ஒருவரான செ. சிவபாதசுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்துள்ள ஏ9 வீதியின் இருபுறங்களிலும் அமைந்துள்ள காணிகள் பலருக்குச் சொந்தமான தனியார் காணிகளாகும். அதற்கான காணி ஆவணங்களும் அவர்களிடம் உண்டு. ஆனால், மோதல்கள் நிறைவுற்று 7 வருடங்கள் கடந்துள்ள போதிலும், குறித்த காணிகள் உரிமையாளர்களிடம் பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளர்களில் ஒருவரான செ. சிவபாதசுந்தரம் கருத்து தெரிவிக்கையில், “யுத்த காலத்தில் நாங்கள் இடம்பெயர்ந்து வவுனியாவின் பல பகுதிகளுக்கு சென்று விட்டோம். அன்று தொடக்கம் இன்று வரை 22 வருடங்களாக வாடகை வீட்டிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும்  வாழ்ந்து வருகின்றோம். தற்போது யுத்தம் நிறைவு பெற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் நல்லாட்சி அரசு ஒன்று ஏற்பட்டுள்ளது என சொல்ல்படுகின்ற சூழலில் எங்களுடைய சொந்த காணிகளை இனியாவது மீட்டுதாருங்கள்.

ஓமந்தை சோதனைச் சாவடி எங்களுடைய நான்கு ஏக்கர் காணியையும் உள்ளடங்கியே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது  ஓமந்தை சோதனைச் சாவடியில் முன்னைய காலங்கள் போன்று சோதனை இடம்பெறுவது கிடையாது.  இனியும் நாங்கள் சொந்த மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்த மக்களாக வாழ முடியாது. எங்களது காணிகளை மீண்டும் எங்களுக்கு வழங்குவதற்கு உரிய அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவரை காலமும் காணி ஆவணங்களுடன் பிரதேச செயலகம், மாவட்டச் செலயலகம், அரசில் தரப்புகள்  என பலரையும் சந்தித்து காணியை மீட்டுத்தருமாறு கோரியும் பலன் கிடைக்கவில்லை.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer