Tuesday, August 30, 2016

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் அருண் விஜய்  பரங்கிமலையில் உள்ள தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சரண் அடைந்தார். விசாரணைக்குப் பின்னர் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற பிரபல நடிகையின் மகள் திருமணத்தையொட்டி நடந்த மது விருந்தில் கலந்து கொண்ட அருண் விஜய், அதிகாலை 3 மணி அளவில் தனது மனைவியுடன் காரில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அருண் விஜய் ஓட்டி வந்த கார், தனது கட்டுப்பாட்டை இழந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேன் மீது மோதியது. இதில் போலீஸ் வேனின் பின்பக்கம் சேதமடைந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், அருண் விஜய் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருண் விஜய் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தியது தெரிய வந்தது. இதையடுத்து அருண்விஜய் ஓட்டி வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் மற்றொரு காரில் வருவதாக கூறிய அவர், காவல்நிலையத்திற்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டார்.

அருண் விஜய் விபத்து ஏற்படுத்திய தகவல் அறிந்து, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்நிலையத்திற்கு அவரது தந்தையும் நடிகருமான விஜயகுமார் வந்தார். போலீஸ் வாகனத்தை அவர் சரி செய்து தருவதாக சொன்னதாக கூறப்படுகிறது. பின்னர் வெளியே செல்லும்போது விபத்து சம்பவம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் விஜயகுமார். விசாரணைக்கு வரவில்லை என்றால் கைது நடவடிக்கை இருக்கும் என்று போலீசார் எச்சரித்திருந்தனர். கெடுவும் விதித்திருந்தனர். இந்த நிலையில் பரங்கிமலையில் உள்ள தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer