Tuesday, August 30, 2016

தினமுரசு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் அற்புதன் நடராஜன் உள்ளிட்ட பலரின் கொலைகளுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே (ஈபிடிபி) பொறுப்பு என்று அந்தக் கட்சியில் மூத்த உறுப்பினரான இருந்த சு.பொன்னையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

1990ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் மூத்த உறுப்பினராக கடமையாற்றியதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினூடாக வழங்கப்பட்ட கொடுப்பனவிலும் கட்சித் தலைமை மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சு.பொன்னையா மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பல விடயங்களை வெளிக்கொணர முடியாத சூழ்நிலையில் தான், நல்லாட்சிக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் பல உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தேன்.

கொழும்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு சென்றால், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறுகின்றார்கள். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றால் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு சொல்கின்றார்கள்.

இவ்வாறு ஒரு வருடமும் 8 மாதங்களும் கடந்து விட்டன. இந்த விடயங்களை வெளிக்கொண்டு வருவதனால் உயிர் ஆபத்துக்கள் கூட வரலாம். உண்மைகள் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

உதயன் பத்திரிகை தாக்குதலின்போது அங்கு இருந்தேன். அந்த தாக்குதலிற்கு இராணுவத்தினரும் உடனிருந்தே செய்தார்கள். நெடுந்தீவில் அரச உத்தியோகத்தர் நீக்கிலஸ் கொலைகள் பற்றியும் பொலிஸாருக்கு அறியப்படுத்தினேன். ஆனால், பொலிஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சிலர் யாழ்ப்பாணத்தில் தற்போதும் இருக்கின்றார்கள். சிலர் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்தால், மேலும் உண்மைகளை அறிய முடியும்.

அந்த தாக்குதலின் போது காயமடைந்த ராஜன் மற்றும் திவாகரன் ஆகியோரை பலாலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள். உதயன் பத்திரிகை மீது தாக்குதல் மேற்கொண்டவர்களும், தாக்குதலை தூண்டியவர்களும் யாழ்ப்பாணத்தில் தான் தற்போதும் இருக்கின்றார்கள்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களை டக்ளஸ் தேவானந்தா மறுத்துள்ளாரே என, கேள்வி எழுப்பிய போது, அவர் இதுவரையும் ஒன்றையும் ஒத்துக்கொள்ளவில்லை.

நெல்லியடி, புங்குடுதீவு, காரைநகர், யாழ்ப்பாணம, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கொலைகள் மற்றும் வெள்ளைவான் கடத்தல்களுக்கு முக்கிய காரணமானவர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தான். அத்துடன் தாங்கள் செய்த கொலையினை விடுதலைப் புலிகள் செய்தார்கள் என விடுதலைப் புலிகள் மீது குற்றத்தினை சாட்டினார்கள்.

இவ்வாறான விடயங்களை வெளியில் கொண்டு வந்ததினால் உயிர் அச்சுறுத்தல்கள் இருக்கலாம் இருந்தாலும் பயப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சினால் எமக்கு வழங்கப்பட்ட 47 ஆயிரம் சம்பளத்தில் 50 ரூபா முதல் 100 ரூபா சம்பளத்தினை தந்துவிட்டு ஏனைய சம்பளத்தினை தாங்கள் எடுத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

எனவே, எமது சம்பளம் வாங்கித்தருமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கிற்கு வந்து செல்வதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தும் பொலிஸார் இதுவரையில் பாதுகாப்பு வழங்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் கொலை மற்றும் வெள்ளைவான் கடத்தல்கள் உள்ளிட்ட பல சம்பவங்களை உரியவர்களிடம் விசாரணை செய்து குற்றவாளிகளை கைதுசெய்தால், பொது மக்களுக்கு உண்மைகள் வெளிவரும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer