Wednesday, August 31, 2016

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கும் யோசனை விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்திலேயே முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட "2011ஆம் ஆண்டின் தேசிய பௌதீக திட்டத்திலேயே" குறித்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எட்வட் குணசேகர  குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எட்வட் குணசேகர  தெரிவித்துள்ளதாவது, “ ‘2011ஆம் ஆண்டின் தேசிய பௌதீக திட்டம்’ என்ற புத்தகம் விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த வேளை அவரது அமைச்சினாலேயே வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்தில் முதலீட்டுச் சபை மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சையும் இணைத்துக் கொள்ள யோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப் போவதாக தற்போதைய அரசாங்கத்தின் மீது விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் குற்றஞ்சுமத்துகின்றனர். ஆனால், அது, விமல் அமைச்சரான இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் இருக்கின்றது.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer