Tuesday, August 30, 2016

மத்திய அரசு வாடகைத் தாய் மூலமாக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் விஷயத்தை சட்டத்தின் வரைமுறைகளுக்குக்கீழ் கொண்டுவர உள்ளது. அதற்காக வாடகைத் தாய் நடைமுறைக்கான வரைவு மசோதாவை மத்திய அரசு மேலவையில் கடந்த ஆகஸ்டு 25-அன்று நிறைவேற்றியது.

வாடகைத் தாய் நடைமுறை என்பது என்ன?

பிற தம்பதிகளுக்காக ஒரு பெண் தன் வயிற்றில் கருவைச் சுமந்து பிள்ளை பெற்றுத் தருவதே வாடகைத் தாய் நடைமுறையாகும். பிள்ளைப் பேறுக்கு வாய்ப்பே இல்லாதவர்கள் குழந்தைப் பேறை அடைய இது ஒரு நல்ல வாய்ப்பாயினும், இந்தியாவில் வாடகைத் தாய் நடைமுறை பெரும்பாலும் அயல்நாட்டு தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுத் தரவே உதவுகிறது. ஏனெனில் பல நாடுகளில் வாடகைத் தாய் நடைமுறை முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாடுகளில் கெடுபிடி அதிகம். இம்முறையில் பெறப்படும் குழந்தைகள் 80 சதவிகிதம் அயல்நாட்டினருக்காவே பெறப்படுகிறது என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஏழைகளும், அதிகம் விவரம்தெரியாத கிராமத்துப் பெண்கள் இதற்கெனவே திரியும் முகவர்களாலும், கருத்தரிப்பின் மூலம் பணம் அள்ளும் மையங்களாலும் பண ஆசைகாட்டி பலிகடா ஆக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வாடகைத் தாய் நடைமுறைக்கு தடைவிதித்தது மத்திய அரசு. இதையடுத்து வாடகைத் தாய் நடைமுறையை ஒழுங்குபடுத்த சட்டப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு மசோதா உருவாக்கப்பட்டது. எனினும், இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகே சட்டமாக மாறும்.

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?

வணிக ரீதியான ஆதாயத்துக்காக ஒரு பெண் வாடகைத் தாயாக செயல்படுவதை இம்மசோதா தடைசெய்கிறது.

வெளிநாட்டு தம்பதிகள், இந்தியப் பெண்ணை வாடகைத் தாயாக பயன்படுத்த இம்ம சோதாவில்இடமில்லை.

மருத்துவரீதியாக குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியென உறுதிப்படுத்தப்பட்டவர்கள், வாடகைத் தாய் நடைமுறைமூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். எனினும் அவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருட காலகட்டமாவது ஆயிருக்கவேண்டும். மேலும் வாடகைத் தாய் வைத்துக்கொள்ளும் தம்பதிகளில் ஆண் 26- 55 வயதுக்கு உட்பட்டவராகவும், பெண் 23-50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும்.

மேலும் தன் வயிற்றில் உங்களுக்கு குழந்தை பெற்றுத் தருபவர், தன் சுயவிருப்பத்தின் பேரில் உங்களுக்கு வாடகைத் தாயாக இருக்கச் சம்மதிப்பவராக இருக்கவேண்டும். அவருக்கு எந்த விதத்திலும் நீங்கள் பணம்தரக்கூடாது. அவருக்கான மருத்துவச் செலவை நீங்கள் அளிக்கலாம்.

ஆனால் வாடகைத் தாயாக செயல்படுவதற்கான கட்டணம் எதுவும் அளிக்கக்கூடாது. மேலும் அந்த வாடகைத் தாய் உங்களது நெருங்கிய உறவினராக இருக்கவேண்டும். உங்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்தாலோ அல்லது குழந்தையை தத்தெடுத்திருந்தாலோ, வாடகைத் தாய் நடைமுறை மூலம் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள மசோதாவில் அனுமதியில்லை.

ஏற்கெனவே வாடகைத் தாய் நடைமுறை மூலம் குழந்தை பெற்றிருந்தால், இன்னொரு குழந்தையை வாடகைத் தாய் நடைமுறை மூலம் பெறமுடியாது. அதேபோல ஒருமுறை வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுத்தந்தவர், இன்னொரு முறை வாடகைத் தாயாக குழந்தை பெற்றுத் தர அனுமதியில்லை. தவிரவும், வாடகைத் தாயாக இருப்பவருக்கு காப்பீடு வசதி கிடைக்கவும் இந்த வரைவு மசோதாவில் வழிசெய்யப்பட்டுள்ளது.

சட்டத்தைமீறி வாடகைத் தாய் விஷயத்தைச் செயல்படுத்துபவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் அபராதம், பத்து வருட சிறைத் தண்டனையும், மருத்துவத்துடன் தொடர்புடையவர்களுக்கு மருத்துவ கவுன்சிலில் பதியப்பட்டுள்ள பெயரை நீக்கவும் வழிவகுக்கிறது. மேலும், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் வாடகைத் தாய் தொடர்பான ஆவணங்களை அவசியம் 5 வருடம் பாதுகாக்கவேண்டும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அளவில் தேசிய வாடகைத் தாய் செயல் குழு ஒன்று அமைக்கப்படும். மத்திய சுகாதார அமைச்சர் இதன் தலைவராகத் திகழ்வார். அதேபோல மாநில அளவிலும் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்கு பொருத்தமான அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இந்தக் குழு வாடகைத் தாய் நடைமுறையில் குழந்தை பெறுபவர்களையும், இதனை நடைமுறைப்படுத்தும் மருத்துவமனை, ஆய்வகங்களையும் கட்டுப்படுத்தும்.

இம்மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வரும்முன்பே ஆதரிக்கவும் எதிர்க்கவும் தரப்புகள் கிளம்பியுள்ளன.

ஆதரிப்பவர்கள் கூறுவது இதுதான்?

இனிமேல் திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை இல்லாதவர்கள், தங்கள் நெருங்கிய உறவினர்களில் ஒருவரையே வாடகைத் தாயாகப் பயன்படுத்தலாம். முன்பு குழந்தையைப் பெற்றுத் தரும் வாடகைத் தாய்களை ஒரு எந்திரம்போல கருதினார்கள். இவர்தான் குழந்தையைச் சுமந்தவர் என்ற விஷயம் தெரியவராமலே சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கடைசிவரை பார்த்துக்கொண்டன. மேலும் ஏழ்மையைப் பயன்படுத்தி, பெண்களை வாடகைத் தாயாக்குவது வழக்கம். அதிலும் பலசமயம் சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தையோ, கணவரோ பணபலனை அனுபவிக்க- பெண்ணுக்கு எந்த ஆதாயமும் இல்லாத நிலையே நிலவும். இந்த நிலை ஒழியும். தவிர, இத்தனை கெடுபிடியான நடைமுறை வசதிப்படாதவர்கள், காப்பகங்களில் இருந்து குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ள முன்வருவார்கள். அதுவும் சிறப்பானதே என்கிறார்கள்.

மாறாக எதிர்ப்பவர்கள் சொல்வது என்ன?

இது வலுக்கட்டாயமாக திருமணம் எனும் நிறுவனமுறையை சுமத்துகிறது. திருமணமாகி 5 ஆண்டானவர்களுக்கே வாடகைத் தாய் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு என்பதால், சேர்ந்து வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களுக்கென வாடகைத் தாய் வைத்துக்கொள்ளும் வாய்ப்பை இழக்கிறார்கள்.

மேலும் இந்த மசோதா சட்டமானால், கள்ளத்தனமாக வாடகைத் தாயை அமர்த்துவதுதான் நடக்கும். இதைக் கண்காணிக்கும் அளவுக்கு முறையான அமைப்பு மத்திய அரசிடம் இல்லை என்கிறார்கள்.

nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer