Tuesday, May 31, 2016

வரும் ஆனா வராது என்று இழுபறியில் இருந்துவந்த ‘இது நம்ம ஆளு’ ஒரு வழியாக திரைக்கு வந்திருக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடியை திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமைந்திருக்கிறது. ‘பீப்’ பாடலின் மூலம் பல பிரச்சனைகளில் சிக்கித்தவித்த சிம்புவுக்கு இப்படத்தின் பாசிடிவ் ரிசல்ட் ஒரு எனர்ஜியை கொடுத்துள்ளது.

சிம்பு சென்னையிள் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் நண்பராகவும் கிட்டத்தட்ட சிம்புவின் டூ வீலருக்கு டிரைவராகவும் சூரி இருக்கிறார். இந்த நிலையிள் அப்பாவின் கட்டாயத்தால் சிம்புவிற்கு பெண் பார்க்க செல்கின்றனர். பெண்ணாக நயன்தாராவை பார்த்தவுடன் சிம்புவிற்கு பிடித்துவிடுகிறது. பெண் பார்க்க வந்த இடத்தில் நயன்தாரா சிம்புவிடம்... உங்களுக்கு காதலித்த அனுபவம் இருக்கிறதா என்று கேட்டதும், ஆண்ட்ரியாவுனான காதல் கதையை எடுத்து விடுகிறார் சிம்பு.

சிம்பு - ஆண்ட்ரியா காதல் என்ன ஆனது? சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்தார்களா? என்பது மீதி கதை.

படம் முழுக்க கலர்ஃபுல்லாக வரும் சிம்பு இந்த படத்தில் முழு நீள காதல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாராவின் நடிப்பும் அழகும் படத்தின் பலம். சிம்பு - நயன் தாரா காதல் காட்சிகள் ரசிகர்களிடையே அமோக ஆதரவு பெற்றுள்ளது. இவர்கள் நடிக்கிறார்களா... அல்லது இது அவர்களின் உண்மைக் கதையா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். சிம்பு - நயன் காதல் ஊர் அறிந்த உண்மை, அதை திரையில் திரைக்கதையாக சொல்லி, தன் கற்பனைகளை கலந்து கல்லா கட்ட நினைத்த இயக்குனர் பாண்டிராஜ் உண்மையிலேயே கெட்டிக்காரர்தான். தன் மீது வரும் விமர்சனங்களையும் விளையாட்டாக எடுத்து அதற்கு படத்தில் பதில் சொல்லி காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துகிறார் சிம்பு.

முன்னாள் காதலியாக வரும் ஆண்ட்ரியா ஆங்காங்கே வந்தாலும் அவர் வரும் காட்சிகளில் சுவாரஸ்யமே இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவருக்கும் சிம்புவுக்கும் காதல் ஏற்படும் மால் காட்சி நன்றாகவே இருக்கிறது. சூரி அவரது ஒருவரி காமெடியில் அபாரமாக சிரிக்க வைத்தாலும், சில இடங்களில் வெறுக்க வைக்கிறார்.

கதையில் பெரிய அளவிற்கு நம்பிக்கை செலுத்தாமல் வெறும் கதாபாத்திரங்களின் போக்கை மட்டுமே நம்பி சுவாரஸ்யமாக படமகா உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பாண்டிராஜின் வசனங்கள் அற்புதம். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியனின் காட்சிகள் கச்சிதம்... மூன்று வருடம் பெட்டியில் பூட்டி வைத்திருந்தாலும் படம் புதுப்பொலிவுடன் கலர்ஃபுல்லாக இருப்பதற்கு அவரே காரணம்.

இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் சிம்புவின் தம்பி குறளரசன். "கண்ணே உன் காதல்" மற்றும் "எனக்காக பொறந்தாலோ" கேட்கும்படி உள்ளது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் வாய்ப்பை நல்லபடியாகவே பயன்படுத்துயுள்ளார் குறளரசன்.

சிம்பு ரசிகர்களுக்கும், நிச்சையம் செய்தபின் காதலிப்பவர்களுக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதல் பாதியில் சுவாரஸ்யங்கள் அதிகம். அதே அளவிற்கு இரண்டாம் பாதியில் கொஞ்சம் திருப்பங்கள் இருந்திருந்தால் அனைவரையும் சந்தோஷப்படுத்திருக்கும் ‘இது நம்ம ஆளு’.

இது நம்ம ஆளு - லேட் ஆனாலும் டேஸ்ட் மாறவில்லை!
nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer