Sunday, May 22, 2016

சரியான அளவில் மார்பகங்களைப் பெறுவதற்காகவே பெரும்பாலான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த சிகிச்சையின் போது, செயற்கை இழை மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது. இழைகளின் தன்மைக்கு ஏற்ப,  செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. சிலிக்கான் மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும் செயற்கை இழையில் சிலிக்கான் ஜெல்லை அடைத்து மார்பகங்களில் பொருத்துகின்றனர். சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்ட ஓடுகள்தான் பெண்களின் செயற்கை மார்பக அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மார்பகங்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவோ, அழகுபடுத்தவோ இத்தகைய மார்பக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடிகைகள் தங்களை மேலும் அழகாக வெளிக்காட்ட, பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். இன்னும் சில நடிகைகளோ, தங்களின் மார்பகங்கள் அழகாகவும், சற்று பெரியதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை மார்பகங்களை பொருத்திக் கொள்வது உண்டு. இவர்களில் சிலர், தங்களின் மூக்கு, உதடு போன்றவற்றை சரி செய்வதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறார்கள். பொதுவாக, ஹாலிவுட் நடிகைகள்தான் இது போன்ற சர்ஜரியினை செய்பவர்களாக இருக்கின்றனர். மார்பகங்களைப் பெரிதாகவும், அழகாகவும் காட்டுவதற்காக செயற்கை மார்பகங்களைப் பொருத்திய சினிமா உலக பிரபலங்களின் பட்டியலில் சுஷ்மிதா சென், பிபாசா பாசு, ஸ்ரீதேவி போன்றோர் இருக்கின்றனர்.

தங்களின் மார்க்கெட் வீழ்ந்து விடாமல் இருப்பதற்காக, எந்த வயதிலும் தங்களின் அழகினை வெளிப்படுத்த வேண்டிய  அவசியம் நடிகைகளுக்கு இருக்கிறது.  இதற்காக செலவாகும் லட்சங்களோ, கோடிகளோ நடிகைகளுக்கு  ஒரு பொருட்டே அல்ல. இந்த செயற்கை மார்பக அறுவை சிகிச்சை,  தங்களுக்கும் அத்தியாவசியமானது என்றெண்ணி  திருநங்கைகள் பண்ணிக் கொள்கின்றனர். நடிகைகளைப் போல, உயர்தர மருத்துவ சிகிச்சை பெறுவதற்கெல்லாம் இவர்களுக்கு வசதி இல்லை. பலரும் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.

கோவில்பட்டி – ஆலங்குளம் அருகில் உள்ள பரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர் திருநங்கை ஆவார். 28 வயது சுகந்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் செயற்கை மார்பகம் பொருத்தினார். அப்போது, மார்பகம் பெரிதாவதற்காக ஹார்மோன் ஊசி போடப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்த சில மாதங்களிலேயே மார்பகத்தில் அவருக்கு வலி ஏற்பட்டிருக்கிறது. வலியை குணப்படுத்துவதற்காக கோவில் பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த செயற்கை மார்பகத்தை அகற்றிவிட்டு, புதிதாக சிலிக்கான் வேதிப்பொருள் அடங்கிய செயற்கை மார்பகம் பொருத்தும் அறுவை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பிறகு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்தான், டாக்டர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் திருநங்கை ஒருவருக்கு செயற்கை மார்பகம் பொருத்தி சாதனை படைத்திருக்கின்றனர். தற்போது சுகந்தி நலமாக இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

உருவத்தில் ஆணாகவும், மனதில் பெண்ணாகவும் இருப்பதாலோ என்னவோ, திருநங்கை களுக்கும் வலி நிறைந்த வாழ்க்கைதான்!

-சி.என்.இராமகிருஷ்ணன்
nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer