Friday, May 27, 2016

G7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவினை நேற்று வியாழக்கிழமை ஜப்பான் ஹில்டன் நகோயா விடுதியில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இச்சந்திப்பின் போது இலங்கையில் இந்தோனேசிய முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

தற்போது இலங்கையில் நிலவும் ஸ்திரமான நிலைமை உள்ளூர் உற்பத்திகள் மற்றும் சர்வதேச சந்தைக்கான இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருள்களில் இருந்து உற்பத்திசெய்யப்படும் உற்பத்திகளுக்கான முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உள்நாட்டு உற்பத்திகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கை அதிக ஊக்குவிப்புகளை வழங்கிவருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இந்து சமுத்திர ரிம் அமைப்பின் (இந்து சமுத்திர கரையோர எல்லையைக் கொண்ட நாடுகள்) தலைமைத்துவத்தை இந்தோனேசியா பெற்றுக்கொள்விருப்பதாகக் குறிப்பிட்ட இந்தோனேசிய ஜனாதிபதி, இந்து சமுத்திர ரிம் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு இலங்கையின் கூட்டுறவு அவசியம் எனக் கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து சிறந்த விலைக்கு இறப்பரை ஏற்றுமதி செய்ய முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பில் நாம் எமது கூட்டுறவை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்தோனேசியாவின் கருடா தேசிய விமான சேவையின் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer