Friday, May 27, 2016

அங்கும் 140.000 இறப்புக்கள் இங்கும் 140.000 இறப்புக்கள்..

உலகத்தின் பணக்கார நாடுகளான ஜி – 7 நாடுகளின் இரண்டு நாட்களுக்கான வருடாந்த மாநாடு இன்று ஜப்பானில் உள்ள ஈசிசிமா என்ற நகரத்தில் ஆரம்பித்துள்ளது.

இதன் பொருட்டு அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய ஏழு கைத்தொழில் வல்லரசுகளின் தலைவர்களும் ஜப்பானில் கூடியுள்ளனர், இவர்களோடு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால் ருஸ்க், ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் ஜன் கிளவுட் ஜங்கர், சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா லாகிரேட் ஆகியோரும் இணைந்துள்ளதால் மாநாடு உலகத்தின் கவனத்தைத் தொட்டுள்ளது.

இந்த மாநாட்டில் முக்கியமான ஐந்து விடயங்கள் பேசப்பட இருக்கின்றன, இவற்றுக்கு மேலாக நடக்க இருக்கும் ஆறாவது விடயத்தை முதலில் எழுதுவது தமிழர்களுக்கு தொடர்ந்து வாசிக்க உற்சாகத்தைத் தரலாம்.

ஏனென்றால் முள்ளிவாய்க்காலும் ஹீரோசீமாவும் ஒன்றுபடும் புள்ளி விபரம் ஒன்று இருப்பதால் அந்த முக்கியத்துவம் கிடைக்கிறது.

1945ம் ஆண்டு அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹீரோசீமா, நாகசாகி ஆகிய இரு இடங்களில் அணு குண்டுகளை வீசியதில் இரு நகரங்களும் அழிந்தது தெரிந்ததே.

அணு குண்டு வீச்சின் ஞாபகார்த்தமாக ஹீரோசீமா நகரில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, இன்றுவரை எந்தவொரு அமெரிக்க அதிபரும் இந்த இடத்தை சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தியது கிடையாது.

வரலாற்றில் முதல் தடவையாக ஓர் அமெரிக்க அதிபர் நாளை வெள்ளி ஹீரோசீமா சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார்.

இந்தத் தாக்குதலால் இறந்தவர்கள் போக தற்போது உயிர்வாழ்வோர் அமெரிக்க அதிபர் ஒபாமா அன்று அமெரிக்கா செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுள்ளனர், அதுபோல அணு குண்டு வீசுமளவுக்கு ஹிட்லரோடு சேர்ந்து நாசவேலை செய்த புத்தமத நாடான ஜப்பானும் கூடவே தனது இழி செயல்களுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

ஆனால் அமெரிக்க அதிபர் மன்னிப்புக் கேட்க தயாராக வரவில்லை என்றே இக்கணம் வரை செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் உள்ள ஹீரோசீமா, நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டுகளால் இறந்தவர்கள் 140.000 பேராகும், அதுபோல வன்னியில் இடம் பெற்ற புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் தாக்குதல்களில் இறந்தவர்களும் 140.000 பேரே என்பது மிகப்பெரிய வரலாற்றுப் பொருத்தமாக இருக்கிறது.

ஹீரோசீமாவில் இறந்தவர்களுக்கு சமாதி உண்டு வன்னியில் இறந்த தமிழர்களுக்கு அதுவும் கிடையாது.. இதுதான் யதார்த்தமாகும்.

இரண்டு நிகழ்வுகளிலும் இறந்தவர்களின் தொகை ஒன்றே ஆனால் உலகத்தின் அணுகுமுறை ஜப்பானுக்கு ஒரு விதமாகவும் ஜப்னாவுக்கு இன்னொருவிதமாகவும் இருப்பதே இந்த நேரத்தின் உலகப்பெரும் சோகமாகும்.

இனி ஜி – 7 நாடுகளின் மாநாட்டில் பேசப்படவுள்ள இதர ஐந்து முக்கிய விடயங்கள் வருமாறு..

01. வீழ்ந்து செல்லும் உலகப் பொருளாதாரத்தை மறுபடியும் தூக்கி நிறுத்தும் புதிய வழிமுறைகள் பற்றி தலைவர்கள் பேசுவார்கள்.

02. எதிர்வரும் யூன் 23 பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் ஐரோப்பிய பொருளாதாரம் மட்டுமல்ல உலகப் பொருளாதாரமே பெரும் சிக்கலை சந்திக்கும் என்றுள்ளார் சர்வதேச நாணயநிதிய தலைவர் கிறிஸ்டீனா லாகிரேட், ஆகவே இது அடுத்த முக்கியம் பெறுகிறது.

03. தென் சீனக்கடலில் சீனாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது, அங்குள்ள தீவொன்றில் விமான நிலையத்தையும் அமைத்துவிட்டது சீனா, இதற்காக மார்ரிம் பாதுகாப்பு என்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அது குறித்து பேசவுள்ளார்கள்.

04. ஐரோப்பிய ஒன்றியத்தில் குவியும் அகதிகள் பிரச்சனை அடுத்த முக்கியம் பெறுகிறது, ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து நாடுகளையும் உதவும்படி கேட்க இருக்கிறது, கூடவே பயங்கரவாதப் பிரச்சனையும் பேசப்பட இருக்கிறது.

05. 1981ல் இருந்து ஜி – 7 நாடுகளில் ரஸ்யாவும் அங்கத்துவம் பெற்று ஜி – 8 ஆக உயர்வு கண்டது, ஆனால் கிறிம் குடாவை உக்கிரேனிடமிருந்து பறித்து தன்னோடு இணைத்த ரஸ்யாவின் சிக்கலை தொடர்ந்து 2014 ரஸ்யா வெளியேறியது.

பகையை வளர்த்து, ரஸ்யாவை மறுபடியும் இணைக்காவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பலத்த நஷ்டம் ஏற்படும், ரஸ்யா மீதான பொருளாதாரத்தடைகள் இரு தரப்பிற்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் யூன் ரஸ்யா மீதான தடைகள் முடிவடைகின்றன, ஆகவே ரஸ்யா மீதான பொருளாதார தடைகளை விலத்த முடியுமா என்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்கவுள்ளது, ஆனால் வெள்ளை ரஸ்யா சென்றுவந்த ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சரோ ரஸ்யாவின் அடாவடித்தனங்கள் தொடர்வதாக தெரிவித்துள்ளார், இதனால் தடை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குள் ஐரோப்பிய நாடுகளை கைவிட்டு இத்தாலி ரஸ்யாவுடன் இரகசியமாக கை குலுக்கி வருகிறது, இந்த நிலை தொடரக்கூடாதென இத்தாலி மீது அமெரிக்க அதிபர் அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு விவகாரங்களையும் இந்த மாநாடு பேச இருக்கிறது, அடுத்த மாநாடு இத்தாலியில் நடக்க இருக்கிறது.

2018 ல் கனடா, 2019 பிரான்ஸ், 2020 அமெரிக்காவிலும் நடைபெறுமென அட்டவணை கூறுகிறது.

ஜி – 7 மாநாடு மீதான சிறப்புப் பார்வை… நாளை விபரமான ஒலிச்சித்திரமும் வெளிவரும் மேலதிக விபரங்களை கேட்க தயாராகுங்கள்.

அலைகள் 26.05.2016 வியாழன் நள்ளிரவு

0 comments :

Post a Comment

 
Toggle Footer