Monday, April 25, 2016

ஏகப்பட்ட இழுபறிகளுடன் நடந்து முடிந்துவிட்டது நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட்!

சேனல் கொடுத்த தொகை, அது தவிர விளம்பர தாரர்கள் மூலம் வந்தது என்று கிட்டதட்ட 15 கோடியை வாரி விட்டார்கள் என்று ஊரெல்லாம் பேச்சு.

நிஜத்தில் ‘ஊருக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உள்ளுக்குள்ள மெழுகுவர்த்தி’யாகி கிடக்கிறார்கள் ஆட்டக்கார அண்ணாச்சிகள்.  ஏன்? இந்த ஆட்டத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன், கடந்த சில மாதங்களாகவே பிளேயர்களின் கோச்சிங் செலவில் ஆரம்பித்து, கொய்யாப்பழ செலவு வரைக்கும் தானே செய்து வந்தது. நிகழ்ச்சிக்கு வந்து போனவர்கள், அவர்கள் தங்குவதற்கான நட்சத்திர ஓட்டல் செலவு அது இது என்று கணக்கு பலமாக கரையும் போலிருக்கிறது.

“கேலரியில் கூடும் டிக்கெட் பணம் உங்களுக்கு” என்று பெருந்தன்மையோடு சேனல் சொல்லியிருந்தாலும், கூட்டம் வந்தால்தானே? அங்கேயும் அலேக் ஆக்கிவிட்டது விதி. கணக்கு வழக்கெல்லாம் போக இறுதியாக நடிகர் சங்கத்தின் கைக்கு வரப்போவது வியப்புக்குரிய பணமாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் உர்ஜிதம். அதற்குள் நிலைமை புரியாமல் அளக்கும் வாய்களை கட்டுப்படுத்துவது எப்படி என்றுதான் புரியாமல் தவித்து வருகிறார்களாம் விஷால் அண் கோஷ்டியினர்..

அப்படியே இன்னொரு முக்கியமான விஷயம்... பத்மவிபூஷன் விருது பெற்ற ரஜினியை கவுரவிக்க வேண்டும் என்று முடிவெடுத்த நடிகர் சங்கம், அதை நட்சத்திர கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து செய்துவிட நினைத்தார்களாம். காலையிலேயே ஸ்டேடியத்திற்கு வந்த ரஜினியிடம், “இன்று மாலை நீங்க வரணும். இங்கே பிரமாண்டமான கேக் வெட்டி உங்களுக்கு பத்மவிபூஷன் கிடைச்சதை நாங்க கொண்டாடணும்” என்று கூறினார்களாம். அப்படியே ஸ்டேடியத்தை நோட்டம் விட்ட ரஜினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “ஈவினிங் வர்றேன்” என்று கிளம்பியவர் அதற்கப்புறம் அந்த பக்கமே வரவில்லை. ஒரு நல்ல நிகழ்ச்சியை மிஸ் பண்ணிய விஷயத்தில் சேனல்தான் அப்செட்

0 comments :

Post a Comment

 
Toggle Footer