Wednesday, April 27, 2016

சமீபகாலமாக சின்னத்திரை நடிகர்கள், சினிமா நடிகர்களின் தற்கொலை சினிமா, மற்றும் டிவி உலகை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது, இந்நிலையில், சின்னத்திரை நடிகர் சாய் சக்தி மன உளைச்சலில் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக ஒரு ஆடியோ பதிவு நம் கவனத்துக்கு வந்தது. அந்த குரல்பதிவின் சாராம்சம்...

வணக்கம்

நான் சின்னத்திரை சாய் சக்தி பேசுறேன். நான் நிறைய சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த இரண்டு வருடமாக நான் வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.

இதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? சமீபத்தில் டிவி நடிகர்கள் நிறையப் பேர் இறந்துகொண்டே இருக்கிறோம். சாய் பிரசாந்த் இறந்தார், இப்போது இந்த சாய் சக்தியின் நிலையையும் கேளுங்கள்.

நான் ஒரு குறிப்பிட்ட சேனலில் நிறைய சீரியல்களில் நடிச்சிருக்கேன். அப்போது இன்னொரு டி.வியின் ரியாலிட்டி ஷோவுக்கு அழைத்தார்கள். அந்த சேனலில் எனக்கு ரெகுலராக ஷோ, சீரியல்கள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள்.

அத்தனை முறை வற்புறுத்தி என்னை குழப்பி அங்கே வரவழைத்தார்கள். ஆனால், இன்று எனக்கு ஷோ இல்லை, வருமானம் இல்லை.

என் மனைவி, என் குழந்தைகள் இவர்களுக்கெல்லாம் யார் பொறுப்பு, யார் உதவுவார்கள், நான் என்ன பாவம் செய்தேன் இன்று நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.

17 வருடங்களாக எத்தனையோ சீரியல்கள், நிகழ்ச்சிகள் என நடித்துக் கொண்டிருந்தேன். இப்போது வாழ்வாதாரமின்றி நிற்கிறேன். இப்போது சேனல் தரப்பு நபர்களிடம் மாறி மாறி வாய்ப்பு கேட்டுவிட்டேன்.

காலில் விழுந்து வேண்டினேன். பிச்சையெடுக்காத குறைதான். ஒரு நடிகரின் நிலை எப்படி இருக்கிறது என நினைத்துப் பாருங்கள்.

மனம் வெறுத்து தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்று பின்னர் என் அம்மாவின் திட்டலிலும், அடியிலும் அந்த எண்ணத்திலிருந்து வெளியே வந்தேன்.

ஆனால் மீண்டும் இப்போது தற்கொலை செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறேன். சின்னத்திரை நடிகர்களான நாங்கள் இன்று தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம்.

நான் மட்டுமல்லாமல் இன்னும் நிறைய நடிகர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நடிப்பு தான் வாழ்க்கை. சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது.

எங்களுக்கு நடிக்க மட்டும்தான் தெரியும். நடிச்சு கஞ்சியோ, கூழோ குடிச்சுகிட்டு இருந்தோம். ஆனால் இன்று எங்களுக்கு வாழவே பிடிக்கலை.

போதும் எனக்கு இந்த வாழ்க்கை... சத்தியமாகச் சொல்கிறேன் இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. ஒரு சிலரை நம்பிய நான், செத்தே போய் விட்டேன்!’’ எனக் கூறி அதற்கு மேல் பேச முடியாமல் மனமுடைந்து அழுகிறார் சாய் சக்தி.

பேச்சின் இடையே சேட்டிலைட் சேனல்களின் பெயர்களைக் குறிப்பிட்டும், அதில் பணிபுரியும் சிலரின் பெயரைக் குறிப்பிடுகிறார் சாய் சக்தி.

இந்தக் குரல் பதிவு உண்மைதானா என அறிந்துகொள்ள சாய் சக்தியை தொடர்பு கொண்டு பேசினோம். கோர்வையாகப் பேசக் கூட முடியாமல் மனம் நொந்து ஆழத் துவங்கிவிட்டார்.

‘’இன்னைக்கு காலைல தூக்குப் போட்டுக்கிட்டேன். ஆனா, என் அம்மா பார்த்து கதவை உடைச்சு காப்பாத்தினாங்க. அம்மா மட்டும் காப்பாத்தலைன்னா, இப்போ நான் இறந்த செய்தி பத்தி நீங்க விசாரிச்சுட்டு இருந்திருப்பீங்க.

என்னோட ஒரு குழந்தை இறந்துருச்சு. இன்னொரு குழந்தைக்கு மருத்துவச் செலவுக்குக் கூட பணம் இல்லை. நான் என்ன செய்யப் போறேன்னே தெரியலை.

ஆனா, என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்களுக்கு இதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை!’’ என தேம்பித் தேம்பி அழுதவாறே பேசினார். மனதைத் தேற்றிக் கொள்ளச் சொல்லி சமாதான வார்த்தைகள் கூறினோம்.

சாய்சக்தியின் நண்பர்கள் மூலம் சின்னத்திரை சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூலம் சாய் சக்திக்கு ஆறுதலும் தேறுதலும் அளிக்கப்படுகிறது!

நன்றி: Vikatan

0 comments :

Post a Comment

 
Toggle Footer