Thursday, April 28, 2016

அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, இறைத்தூதர் நபியை பற்றித் தெரிவித்த சில வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டன.

‘இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திய பாத்திமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறது மனிதநேய மக்கள் கட்சி.

ஈரோடு, கிழக்கு தொகுதிக்குட்பட்ட பெரிய அக்ரஹாரம் வண்டிப்பேட்டையில், கடந்த 19-ம் தேதி அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்தார் பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு.

அப்போது பேசிய அவர், ” இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய முகம்மது நபிகள் சொல்கிறார், ‘ஒவ்வொருவரின் தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது’ என்று. அப்படிப் பார்க்கும்போது ஜெயலலிதா அம்மாவின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது. எனவே முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் அம்மாவுக்கு ஓட்டுப் போட வேண்டும்” என்று பேசியதாக செய்திகள் வெளியாகின.

இதனால் கொதித்துப் போன மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சிலர், ஈரோடு தேர்தல் அலுவலரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், ‘ தேர்தலுக்குப் பிரசாரம் செய்ய வருபவர்கள், தங்கள் கட்சியின் சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் சொல்லி ஓட்டு கேட்கட்டும். இறைவனைப் பற்றியும் இறைத்தூதர் பற்றியும் பேசி மற்றவர்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது. எனவே, பாத்திமாபாவுவின் பிரசாரத்திற்கு தடை விதித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் பாத்திமா பிரசாரம் செய்யும் இடங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் பாத்திமாவின் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய த.மு.மு.கவின் மாநில செயலாளர் ஹாஜாகனி, ” அவர் பேசிய பேச்சு குறித்து முகநூலில் பார்த்தேன். முழுக்க ஆட்சேபனைக்குரியது. அரசியலில் தங்கள் தலைவர்களை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும். பெற்ற தாய்க்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘தாயின் காலடி சொர்க்கம்’ என்றார் நபிகள் நாயகம். அடுத்து நபியிடம் கேட்கிறார்கள், ‘இந்த உலகில் யாரிடம் நான் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும்’ என்று, முதல் மூன்று இடங்களிலும் அவர் தாயைத்தான் முன்னிறுத்துகிறார். நான்காவது இடத்தைத்தான் தந்தைக்கு கொடுக்கிறார். இதை ஒரு கட்சித் தலைவருக்கு ஒப்பிட்டுச் சொல்வது கண்டனத்திற்குரியது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டுத்தான் இதைச் சொல்கிறேன்.

சட்டமன்றத்தில் அமைச்சர் ஒருவர், ‘கிறிஸ்துவர்கள் ஏசுவை வணங்குவது போல, இஸ்லாமியர்கள் நபியை வணங்குவது போல’ என்று பேசினார். உடனே எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதைக் கவனித்த முதல்வர் ஜெயலலிதா, ‘ ஆமாம். முஸ்லிம்கள் முகமது நபியை வணங்குவது இல்லை. அவர் இறைத்தூதர்தான்’ என்றார். இது அவைக்குறிப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. சட்டமன்றத்தில் நபிகளின் பெயரில் இட்டுக்கட்டப்படும் செய்தி தடுக்கப்பட்டது. நபியே சொல்கிறார், ‘ என் பெயரை இட்டுக்கட்டி சொல்பவர்கள் ஒதுங்கும் இடமாக நரகம் இருக்கும்’ என்கிறார். ஆகவே, நபிகள் நாயகம் சொன்னார் என்ற செய்தியை சமூகத்தில் தவறாகச் சொல்லக் கூடாது. இதுபோன்ற பேச்சுக்களை பாத்திமா அவர்கள் தவிர்க்க வேண்டும்” என்றார் நிதானமாக.

இதுகுறித்து பாத்திமாபாவுவிடம் பேசினோம்.

” நபிகள் நாயகம் பெயரை நான் சொல்லக் கூடாது என் யாரும் சொல்ல முடியாது. அவர் அனைவருக்கும் சொந்தமானவர். இறைத்தூதர் என்று சேர்த்துதான் அவரைச் சொல்ல வேண்டும். அப்படிக்கூட அவர்கள் சொல்வது கிடையாது. நபிகள் நாயகம்தான் அம்மா என்று சொன்னால்தான் தவறான ஒப்பீடு. அப்படி நான் எந்த இடத்திலும் பேசவில்லை.

தீவிரமான இஸ்லாமிய தந்தையால் வளர்க்கப்பட்டவள் நான். மற்ற மதத்தையும் மதிக்கிறேன். இந்து மதத்தில் இருந்து மாறியதால் இப்படிப் பேசுகிறேன் என்று சொல்வது எப்படி சரியாகும்? என்னுடைய ரத்தத்தில் ஹராம் ஆக்கப்பட்ட விஷயங்கள் எப்போதுமே ஏறாது. அம்மாவோடு ஒப்பிட்டுச் சொன்னதை அவர்கள் நிரூபிக்கட்டும்.

நபிகள் நாயகம் சொன்னதைத்தான் நான் சொன்னேன். என் பேச்சில் எந்த இடத்திலும் நான் தவறு செய்யவில்லை. இவர்கள் மதச்சாயம் பூசக் காரணமே, எதிர்க்கட்சியில் இருப்பதால்தான். என்னைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும், நான் எந்த மதத்தையும் இழிவுபடுத்த மாட்டேன் என்று. அதுவும் நான் ஆழ்ந்து நேசிக்கும் என்னுடைய மதத்தை நான் இழிவுபடுத்துவேனா?” என வேதனைப்பட்டார்.

-ஆ.விஜயானந்த்
விகடன்

0 comments :

Post a Comment

 
Toggle Footer