Monday, April 25, 2016

தனிமனித நலனைவிட சமூக நலனே நீதிமன்றத்துக்கு முக்கியம். எனவே, ரெளடித்தனத்திலும் தெரு சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்களுக்கு, அவர்கள் மாணவர்கள் என்ற காரணத்துக்காக நீதிமன்றத்தினால் ஈவிரக்கம் காட்டப்படமாட்டாது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

ஆகவே, தெரு ரௌடிகளாகச் செயற்படும் பிள்ளைகளை, அவர்களுடைய பெற்றோர்கள் உடனடியாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர வேண்டும். சமூகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒழுக்கத்தில், அவர்கள் இறுக்கமான ஒழுக்க நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

போதைவஸ்து வழக்கொன்றில் மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின் போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையையும், பொற்றோருக்கான அறிவுறுத்தலையும் விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மண்ணின் எதிர்காலத் தலைவர்களாகவுள்ள மாணவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்கி, தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்வதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. எனவே, ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் அதனை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு சிறை வாழ்க்கை நிச்சயம் என்பதை மறந்துவிடக் கூடாது.

யாழ் மாவட்டத்தில் தொண்ணூறு வீதமான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், சில வாள் வெட்டுச் சம்பவங்களும் தெரு ரௌடித்தனமும் கொள்ளைகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

யாழ்.குடாநாட்டு நீதிவான் நீதிமன்றங்கள் வாள்வெட்டு வழக்குகளில் சிறைத் தண்டனைத் தீர்ப்புக்கள் வழங்கி வருகின்றன. அதேநேரம் பெரும் குற்றச் செயல்களுக்கு பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்கள்.

யாழ்.மேல் நீதிமன்றம் மரண தண்டனை மற்றும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை என பெரும் குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்கி வருகின்றது. போதைவஸ்து வழக்குகளில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்குக் கடந்த ஒரு வருட காலமாக, யாழ்.மேல் நீதிமன்றம் பிணை வழங்கவில்லை. யாழ். குடாநாட்டு சமூகத்தையும் மாணவர்கள் இளைஞர்களையும் போதைவஸ்து என்ற கொடூரப் பிணியில் இருந்து காப்பாற்றுவதற்காக நீதிமன்றங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும், சில நபர்கள் தெரு ரௌடித் தனத்தையும் வாள் வெட்டுக்களையும் கைவிடுவதாக இல்லை.

பெற்றோர் இவ்விடயத்தில் முதல் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றார்கள். தெரு ரௌடித்தனத்தில் ஈடுபடுகின்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று பெறுமதிமிக்க ஐபோன் என்ற கைத்தொலைபேசி ஒன்றும் பெற்றோர்களினால் வாங்கிக் கொடுக்கப்படுகின்றது. தனது மகன் வெளியில் சென்று என்ன வேலை செய்கின்றான் என்று தெரியாத வகையில் பெற்றோர் காணப்படுகின்றார்கள். இத்தகைய மாணவர்கள், இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை செய்கின்றது.

சமூகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடன் கடும் நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகின்றது. ரியூசன் செல்லும் மாணவிகளுக்குப் பின்னால் செல்லும் மாணவர்கள், இளைஞர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அடாவடித்தனம் செய்யும் தெரு ரௌடிகளை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாலை 6 மணியில் இருந்து 9 மணிவரையில் வீதிகளில் சட்டவிரோதமாகக் கூடும் இளைஞர்களைக் கைது செய்து அலைந்து திரிவோர் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முற்படுத்தவேண்டும்.

குறிப்பாக, பாஷையூர் சென் அந்தனிஸ் விளையாட்டரங்கு, புதிய செம்மணி வீதி, கல்வியங்காட்டுச் சந்தி, கோப்பாய் சந்தி, கொக்குவில் சந்தி, சுன்னாகம் சந்தி போன்ற இடங்களில் ரெளடிகள் அதிகமாகக் கூடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த இடங்களில் சந்தேகத்துக்கு இடமான முறையில் கூடுபவர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றச் செயல்கள் அதிகமாக இடம்பெறுகின்ற பிரதேசங்கள், சமூகக் குற்றச் செயல்களின் மையங்கள் என்ற சந்தேகத்திற்குரிய இடங்களில் பொலிஸ் சைக்கிள் ரோந்துகளை நடத்தப்பட வேண்டும். கண்காணிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரையில் பொலிஸ் வாகன ரோந்துகளை அதிகரிக்க வேண்டும்.

யாழ். இந்துக் கல்லூரி சுற்றாடல் பகுதி முழுநாளும் அவதானிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரபல கல்லூரிகளில் பயிலும் உயர்தர வகுப்பு மாணவர்கள் ரெளடித் தனத்தில் ஈடுபடக் கூடாது. வாள் வெட்டு சம்பவங்களில் சம்பந்தப்படக் கூடாது. வீதிகளில் மாணவிகளைப் பின்தொடரக் கூடாது. தமது எதிர்கால வாழ்க்கை நாசமாகும் வகையில் சட்டவிரோத போதை வஸ்து பாவனை மற்றும் போதை வஸ்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

குற்றச் செயல்களில் சம்பந்தப்படுகின்ற காரணத்திற்காகக் கைது செய்யப்படும் எந்த ஒரு மாணவனுக்கும் நீதிமன்றத்தினால் பரிவு இரக்கம் காட்டப்படமாட்டாது. எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்குக் கூட செல்ல முடியாத வகையில் சிறைத் தண்டனை தீர்ப்புக்கள் வழங்கப்படும். எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் தமது பிள்ளைகளை சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer