Tuesday, April 26, 2016

மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வைகோ திடீரென கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார்.

கோவில்பட்டி தொகுதியில் தேவர்–நாயக்கர் இடையே சாதி மோதலை ஏற்படுத்த தி.மு.க. முயற்சி செய்வதாகவும், அந்த முயற்சிக்கு இடம் அளிக்காத வகையில் போட்டியில் இருந்து விலகுவதாகவும் வைகோ குற்றம் சுமத்தினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். நேற்றிரவு அவர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பேசும்போது,

’’தி.மு.கழகத்தின் வெற்றி என்பது நாளுக்கு நாள் உறுதியாகிக்கொண்டே இருக்கிறது. அதனால் தான் போட்டியிடப் போவதில்லை என்று ஒருவர் சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். அவர் யார் என்பது உங்களுக்கே தெரியும். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய மாட்டேன். நான் யாரையும் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேச மாட்டேன்.

ஒருவேளை இந்த தேர்தலில் நிற்கவில்லை என்று ஒதுங்கி இருந்தால் நான் அதைப்பற்றி கவலைப்பட்டு இருக்க மாட்டேன். வேறு சிலரின் பெயர்களை சொல்லி என்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்ள நான் தயாரில்லை. ஆனால் தான் ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு ஒரு கட்சியின் தலைவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், தி.மு.க. மீது பழி போடுகிறார். தி.மு.க. சாதி வெறியை தூண்டி விடப்போவதாக ஒரு அபாண்டமான பழியை சுமத்தியிருக்கிறார்.

நமது கழகத்தின் சார்பில் போட்டியிடும் நம்முடைய வேட்பாளருக்கும் உதய சூரியனுக்கும் மக்கள் தரக்கூடிய செல்வாக்கை இன்றைக்கு நீங்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

போட்டியிலிருந்து இன்று விலகிய தலைவர் சில நாட்களுக்கு முன்னாள் தலைவர் கலைஞரை பற்றி எந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி, அரசியல் நாகரீகத்தை தாண்டி எந்த அளவுக்கு பேசினார் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும்.

நான் கேட்க விரும்புவதெல்லாம் 18 ஆண்டுகாலம் தி.மு.க.வில் எம்.பி. என்ற பதவியை அனுபவித்தவர், 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றை கொண்ட தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இதுவரை ஒரு சட்டமன்றத் தேர்தலில் கூட தோற்ற வரலாறு தலைவர் கலைஞருக்கு கிடையாது.

இந்திய திருநாட்டிற்கே பல பிரதமர்களை, ஜனாதிபதிகளை உருவாக்கி தந்தவர் நமது தலைவர் கலைஞர். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒரே தலைவர் கலைஞரைப் பார்த்து கொச்சைப்படுத்தி அவர் பேசினார்.  ஆனால் அதைப்பற்றி தலைவர் கலைஞர் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதைப்பற்றி ஒரு வருத்தப்படவில்லை. கண்டிக்கவும் கூட செய்யவில்லை.

ஏனென்றால், "18 ஆண்டு காலம் நான் வளர்த்தவன், 18 ஆண்டுகள் எனது கட்சியின் சார்பில் எம்.பி.ஆக இருந்தவன் அவன்”, என்று சொல்லி பெருந்தன்மையோடு தலைவர் கலைஞர் அப்படியே விட்டு விட்டார்.

அப்படிப்பட்ட தலைவர் கலைஞர்தான் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது சாதி மதங்களை கடந்து, அவற்றை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான், தமிழகம் சாதி வேறுபாடுகளைக் கடந்து வாழ வேண்டும் என்பதற்காகத் தான் தந்தை பெரியாரின் பெயரில் பல சமத்துவபுரங்ளை உருவாக்கி தந்தார்.

அப்படி உருவாக்கப்பட்ட போது அந்த துறையின் அமைச்சராக நான் இருந்தேன். நான் தான் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அந்த சமத்துவபுரங்களை திறந்து வைத்தேன். அந்த சமத்துவபுரங்களின் முன் ஈரோட்டு சிங்கம், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிலைகள் இருக்கின்றன. அவர்தானே முதலில் சாதி ஒழிய வேண்டும், சாதிபேதங்கள் இருக்கக் கூடாது என்று சொன்னவர்.  அதற்காகத்தானே அவர் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார், பாடுபட்டார். ஆக, அந்த அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தான் சமத்துவ புரங்கள் உருவாக்கப்பட்டன.

எல்லா சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்ற அடிப்படையில்தான் அந்த திட்டம் உருவானது என்பது அவருக்கு புரியவில்லை. எனவே தி.மு.க. மீது அபாண்டமான பழியை சுமத்தி இருக்கின்றவருக்கு நான் இங்கு கூடியிருக்கின்ற கூட்டத்தின் வாயிலாக தி.மு.க. சார்பில் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்’’என்று தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer