Tuesday, March 29, 2016

வடக்கு, கிழக்கில் 65,000 வீடுகளை அமைக்கும் வீடமைப்புத் திட்டத்தினை நிறுத்தி, தற்போது அமைக்கப்படுகின்ற வீடுகள் சூழலுக்கு பொருத்தமானவைதானே என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என்று கோரி வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

65,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகள் வடக்கு மக்களுக்கு பொருத்தமற்றவை. ஆகவே, அவற்றை நிறுத்தி, அவற்றுக்குப் பதிலாக வடக்குக்கு பொருத்தப்பாடுடைய வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானமொன்று வடக்கு மாகாண சபையில் கடந்த 24ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதனை மேற்கொள்காட்டியே வடக்கு மாகாண அவைத் தலைவர் குறித்த கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வரவேற்கின்றோம். ஆனால், இந்த பொருத்து வீடுகளை எங்களுக்கு வழங்கியதையிட்டு மனவருத்தம் கொள்கின்றோம்.

2.1 மில்லியன் ரூபாய் செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படுவது அதிகூடிய செலவாகும். இவ்வாறு அமைக்கப்படும் வீடுகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவுள்ளது. வீட்டின் சுவர் வலிமையற்றது. இலகுவில் உடையக்கூடியது. திருடர்கள், கொள்ளையர்கள் ஆகியோருக்கும் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோருக்கும் இந்த வீடுகள் இலகுவான வழிகளை ஏற்படுத்திவிடும்.

மேலும், இந்த 2.1 மில்லியன் ரூபாய் செலவில் வடக்கில் சாதாரணமாக கட்டப்படும் சீமெந்து வீடுகள் இரண்டைக் கட்டிவிட முடியும். இந்த வீடுகள் வடக்கிலுள்ள காலநிலை மற்றும் சூழலுக்கு முற்றும் பொருத்தமற்றதாகவுள்ளது. வெப்ப காலங்களில் இந்த வீடுகள் அதிகளவான வெப்பமாக காணப்படுவதுடன், மழை காலங்களில் வெள்ளம் வீடுகளுக்கும் புகுந்துகொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது. இந்த வீடுகள் தொடர்பில் நாங்கள் திருப்பதியற்று இருக்கின்றோம். ஆதலால் இந்து வீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இது தொடர்பில் பரிசீலனை செய்யவும்.” என்றுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer