Thursday, March 31, 2016

பொதுவாக அணுவாயுதம் மற்றும் தீவிரவாதம் என்றவுடன் உடனே நினைவுக்கு வரும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் இந்த வருடம் வாஷிங்டனில் நடைபெறவுள்ள அணுப்பாதுகாப்பு மாநாட்டைப் புறக்கணிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை 4 ஆவது அணுப்பாதுகாப்பு மாநாடு அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையில் நடைபெறுகின்றது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கு பற்றுகின்றார்.

அண்மையில் லாஹூரில் இடம்பெற்ற மோசமான தீவிரவாதத் தாக்குதல் பாகிஸ்தான் அரசு இந்த அணுப் பாதுகாப்பு மாநாட்டைப் புறக்கணிக்க முக்கிய காரணியாக அமைந்துள்ளது. ஆனாலும் அதிகளவு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கருதப் படும் பாகிஸ்தானில் அந்நாட்டு அரசு தயாரித்து வரும் மினி அணுவாயுதங்கள் எச்சமயத்திலும் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி உலகுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்த அணுப் பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய அழுத்தம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அரசு ஏற்கனவே தனது இராணுவத் தலைவர்கள், தனது கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய செல்வந்தர்களிடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நிகழ்த்தித் தனது மினி அணுவாயுதங்கள் பாதுகாப்பாகவும், தலைமறைவாகவும் இருப்பதை உறுதிப் படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளதுடன் இது தொடர்பில் வாஷிங்டனின் அறிவுரையை இதுவரை பின்பற்றவில்லை என்பதும் முக்கியமானது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer