Thursday, March 31, 2016

பரமக்குடியில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய வைகோ முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து பேசினார்.

தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணியின் சார்பில் பரமக்குடியில் நெற்று இரவு பிரசார கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது, நாட்டின் தென் கோடி பகுதியில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, நாட்டின் உயரிய மனிதனாக உயர்ந்த அப்துல்கலாமின் இறுதி சடங்கில் பங்கேற்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதன் பின்னர் கலாமின் குடும்பத்தினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு என்னையும் அழைத்து சென்றனர்.

கலாமின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து 300 அடி தூரத்தில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமர்ந்திருந்தனர். நானோ கலாமின் உடல் வைக்கப்பட்டிருந்த 50 அடி தூரத்தில் அமர்ந்திருந்தேன்.

இதன் மூலம் என்னை அந்த இடத்தில் ஒதுக்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறாமல் போனது மட்டுமல்ல கலாமின் குடும்பத்தினரை சந்திக்க வந்த பிரதமர் உள்ளிட்ட அத்தனை தலைவர்களையும் கலாமின் சகோதரருக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது.

இதிலிருந்து தெரிகிறதா சத்தியம் ஒரு நாள் வெல்லும் என்பது. அப்துலகலாம் பதவி காலம் முடிந்தபோது அப்துல்கலாமே மீண்டும் ஜனாதிபதியாக நீடிக்கட்டும் என நான் சொன்னபோது அமர்சிங், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், ஜெயலலிதாவிடம் சொன்னபோது , நோ.. நோ.. நெவர். அவரை ஆக்கவே கூடாது.’ என சொல்லி ஏற்க மறுத்தார்.

என்ன காரணம் என கேட்டபோது, ‘அவர் என்னை மதிக்கவில்லை. தனது பதவி ஏற்பு விழாவிற்கு அம்பானிக்கு அழைப்பு விடுத்த கலாம் எனக்கு தனியாக அழைப்பு அனுப்பவில்லை. அவரை எல்லாம் எப்படி ஏற்பது' என்றார்.

அவரிடம் நான், கலைஞரின் சட்டமன்ற பொன்விழாவிற்கு கலாம் வர மறுத்தார். கட்சி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் அவர். அப்படிபட்டவர் தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்தால் நல்லதுதானே என எடுத்துரைத்தேன்.

அதேபோல் கலைஞரிடம் கேட்டபோது ‘மீண்டும் பதவி வகிக்க கலாமே விரும்பவில்லையே நீங்கள் ஏன் அவரை பரிந்துரை செய்கிறீர்கள்’ என சொல்லி மறுத்துவிட்டார்.

இப்படி தமிழர் ஒருவரை நாட்டின் உயர்ந்த பதவிக்கு வரமுடியாமல் செய்தவர்கள் இவர்கள். ஜெயலலிதாவிடம் கேட்கிறேன், உங்களுடைய சிறுதாவூர் அரண்மனையின் பூமிக்கடியில் உள்ள நிலவறைகளில் எத்தனை ஆயிரம் கோடி பதுக்கி வைக்கப்பட்டிருகிறது.

ரோட்டில் போகும் ஏழை விவசாயின் பணத்தை சிறு வியாபாரிகளின் பணத்தை பறிக்கிறது பொலிஸ்.

அந்த பொலிசாரிடம் கேட்கிறேன், ஜெயலலிதாவின் அரண்மனைக்குள் 11 கண்டெய்னர் லாரி இருக்குதுன்னு சொல்றோம். அதுல கொள்ளை பணம் இருக்குன்னு சொல்றோம். அதனை சோதனையிட தயாரா?

கருணாநிதிக்கோ அவருடைய மகனுக்கோ ஜெயலலிதா வீட்டில் சோதனை போடுங்கள் என்று சொல்லும் தைரியம் உள்ளதா.

அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. தான் என எனது முன்னாள் குருநாதர் கருணாநிதி சொல்வதை ஏற்று கொள்கிறேன். ஊழல் செய்வதில் அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. தான் என்பதை.

எனவே அருமை வாக்காளார்களே உங்கள் வாக்குகளை பணத்திற்கு விற்று விடாதீர்கள் என பேசினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer