Thursday, March 31, 2016

தமிழக சட்டசபை தேர்தலில் தங்களின் கூட்டணிக்கு அதரவு கேட்டு ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலத்திற்கு வந்த வைகோவுக்கு அக்கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இணையப்போவதாக தகவல்கள் வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று காலை சென்னை தியாகராய நகர் கண்ணதாசன் சாலையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

வைகோவை ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் வசீகரன் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். வசீகரனுடன் வைகோ சுமார் 1 மணி நேரம் பேசினார்.

இதற்கிடையே கட்சி அலுவலகத்தில் வைகோ வந்துள்ள செய்தி அறிந்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியினர் தலைமை கழக பேச்சாளரும், தன்னார்வ தொண்டருமான தங்கசேகர், கிருஷ்ணவேணி, கிருஷ்ணமூர்த்தி உள்பட சிலர் கட்சி அலுவலகம் முன்பு நின்று வைகோவுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியினர், ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏற்கனவே ஊழல் செய்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சி நேர்மையானது.

ஊழலுக்கு எதிரானது. எனவே மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளிக்க கூடாது. தனித்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer