Thursday, March 31, 2016

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபகாலமாவே வெளி உலகில் தலைகாட்டாமல் இருப்பது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தேர்தல் களம் படுபயங்கரமாக சூடு பிடித்துள்ளது.

எனினும் கூட்டணி, வேட்பாளர்கள், ஆகியவற்றில் அதிமுக, திமுக போன்ற பிரதான கட்சிகளிடையே ஒரு தெளிவான நிலை ஏற்படவில்லை.

ஆனால் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி ஆகியவை கூட்டணி வைத்து தங்களின் பிரசாரத்தை தொடங்கி விட்டன.

மக்கள் நலக்கூட்டணி சார்பில் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தேமுதிக சார்பில் அக்கட்சியின் மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதிஷ் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் எங்கே இருக்கிறார் என்பது தான் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமும் உண்டு.

கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. பிரேமலதா மற்றும் சுதீஷ் பின்னால் இருந்து அவரை இயக்கி வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதற்கேற்றாற் போல் ஆட்சிக்கு வந்தால் யார் யாருக்கு என்ன பதவிகள் வழங்கப்படும் என தேமுதிகவின் சுதீஷ் ஒரு பிரசார கூட்டத்தில் தெரிவித்தார்.

விஜயகாந்த் அதற்கு மறுப்பு கூட தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது மனைவியோ, கேப்டன் தான் அமைச்சரவை பதவிகளை முடிவு செய்வார் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி சிகிச்சைகாக விஜயகாந்த் சிங்கப்பூர் சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதனை மறுத்த சுதிஷ், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பிரேமலதா அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பிரசார உத்திகளை வகுத்து வருவதாகவும் தெரிவித்தார், ஆனால் விஜயகாந்த் எதுவும் கூறவில்லை,

எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜயகாந்த் சமீப காலமாக சைலண்ட் மோடில் உள்ளது தொண்டர்களிடையே மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

கட்சியின் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டாலும், அவரை சுற்றி சர்ச்சைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

மேடையில் விஜயகாந்த் இல்லாததால் தொண்டர்களும் சோர்வடைந்துள்ளார். மீடியாக்களும் விஜயகாந்த் எங்கே என்ற தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் இந்த செய்திகளுக்கு பிரேமலதா மறுப்பு தெரிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர் விஜயகாந்துக்கு தானும் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் மீண்டும் பழைய கேப்டனாக விஜயகாந்த வருவார் என தொண்டர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer