Thursday, March 31, 2016

தனியார் ஸ்பான்சர் குழுக்கள் மூலம் சிரிய யுத்தத்தால் இடம்பெயர்ந்து தவித்து வரும் அகதிகள் கனடாவில் குடியேற விரும்பினால் சுமார் 10 000 பேரை இந்த முறையில் அனுமதிக்கத் தயார் என கனேடிய அரசு சார்பாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கெல்லம் தெரிவித்துள்ளார்.

இதுவரை 25 000 சிரிய அகதிகளை உள்வாங்கியுள்ள கனடா அரசு அதன் பின் சிரிய அகதிகள் விவகாரத்தில் மௌனம் சாதிப்பதாக கனேடிய மக்கள் புகார் எழுப்பியதை அடுத்தே இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளது

மேலும் தனியார் குழுக்கள் வாயிலாக அனுமதிப் பத்திரத்தை மார்ச் 31 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் சிரிய அகதிகள் பதிவு செய்ய முடியும் எனவும் மக்கெலம் தெரிவித்துள்ளார். பேர்லினில் இருந்து CBS செய்தி ஊடகத்துக்கு தொலைபேசி செவ்வி வாயிலாக மக்கெல்லம் பேசிய போது சிரிய அகதிகளுக்கு ஸ்பான்சர் பண்ண முன்வரும் கனேடிய குடிமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்பதுடன் அக்குடிமக்களின் ஊக்கத்தை வரவேற்பதாகவும் கருத்துத் தெரிவித்து இருந்தார்.

தற்போது வியாழக்கிழமை மாலை ஜேர்மனியின் உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக பேர்லினில் மக்கெல்லம் தங்கியுள்ளார். 2016 இறுதிக்குள் அரசு சார்பான மற்றும் தனியார் இணைந்த ஸ்பான்சர்கள் மூலமாக வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 44 800 அகதிகளை அனுமதிக்கும் திட்டத்தில் அரசு இருப்பதாகவும் கனடா அறிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer